பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
12:04
திருநெல்வேலி:பாபநாசம் கோயில் தேர் சக்கரங்கள் பழுதானதால், தேர் நடுத்தெருவில் நிற்கிறது. தேரோட்டம் நின்றதற்கு யார் பொறுப்பு என, திருவாவடுதுறை ஆதீனமும், அறநிலையத்துறை நிர்வாகவும் ஒருவர் மீது மற்றவர் புகார் கூறிவருகின்றனர்.பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசர் கோயில் சித்திரை விசுத் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தேரின் சக்கரம் உடைந்து, தேரோட்டம் தடைப்பட்டது.
கடந்த ஆண்டும் இதேபோல தேர் சக்கரங்கள் உடைந்து தேரோட்டம் இடை நின்றது.பக்தர்களும், இந்துமுன்னணியினரும் தேரை சரிசெய்ய, கோரிக்கை வைத்தனர்.
தேரை நிர்வகிக்கும் பொறுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களோ,"கடந்த ஒரு ஆண்டாக தேரை சரிசெய்ய எந்தமுயற்சியும் மேற்கொள்ளவில்லை; தேரை சரிசெய்ய அறநிலையத்துறையினர் திட்டமதிப்பீடு தரவில்லை, என புகார் தெரிவித்தனர். பக்தர்களிடம் நிதிவசூல் செய்யும் அறநிலையத்துறை நிர்வாகமோ, "தேரை சீர் செய்யவேண்டியது ஆதீனம் தான் என தட்டிக் கழிக்கின்றனர். தேரோட்டம் நின்றுபோய் சுவாமியை வெறுமனே எடுத்துச்சென்றது நல்லதல்ல என, பக்தர்கள் புலம்புகின்றனர்.
இதனால், நேற்றுமுன்தினம் பாதியில் நின்ற தேர், நேற்றும் விக்கிரமசிங்கபுரம் நடுத்தெருவிலேயே நிற்கிறது. இரு தரப்பினருமே சரிசெய்யாமல் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டனர்.