பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
12:04
ஈரோடு: ஈரோடு மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவிலில் திருத்தேர்ப்பெருவிழா துவங்கியுள்ளது.விழாவில் நேற்று தண்ணீர் பந்தல் திருநாள் நடந்தது. இன்று சிறப்பு கட்டமுதுத்திருநாள் நடக்கிறது. காலை 6 மணிக்கு சிவபெருமான் எழுந்தருளி, அப்பரடிகளுக்கும், அடியார்களுக்கும் கட்டமுது வழங்குதல், பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்தி எழுந்தருளி, கட்டமுது வழங்கல், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது.
நாளை காலை 7 மணிக்கு அம்பலவாணர் திருமுழுக்கு வழிபாடு, அப்பர் தில்லை திருநடனக் காட்சி கண்டு பதிகம் பாடல், சந்திரசேகரர் புறப்பாடு, கயிலை வாகனக் காட்சி, 16ம் தேதி அப்பருக்கு பஞ்சநதியில் திருக்கயிலைக் காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகிமாலீஸ்வரர், மங்களாம்பிகை திருக்கல்யாணம், இந்திர விமானத்தில் திருமணக் கோலத்தில் வீதியுலா நடக்கிறது. 17ம் தேதி காலை, 10 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தேர்வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். துணை மேயர் பழனிசாமி, மண்டலத்தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இரவு 10 மணிக்கு திருமுறை வாணர்களின் பதடிகச் செஞ்சொல் பாமாலை வழிபாடு, பொற்கிழி, பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மூவர் தேவராத்தமிழசை விழா நடக்கிறது. 22ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை உதவி ஆணையர் தனபால், செயல் அலுவலர் ரவி, திருத்தேர் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.