பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
12:04
ஈரோடு:ஈரோடு அருகே நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.ஈரோடு- கரூர் மெயின்ரோடு, காங்கேயம்பாளையத்தில், காவிரியாற்றின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை முதல் நாள், சித்திரை விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஏப்., 10ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன், லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை, 4.20 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, புண்யாகம், சங்கல்பம், 108 சங்குஸ்தாபனம், ஸ்ரீருத்ர பாராயண ஹோமம் நடந்தது. காலை 6 மணிக்கு நட்டாற்றீஸ்வரருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. ஸ்வாமிக்கு நைவேத்தியமாக கம்பஞ்சோறு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதற்காக, 16 மூட்டை கம்பு அரைத்து, கம்பஞ்சோறு காய்ச்சி, 5,000 லிட்டர் தயிர், எலுமிச்சங்காய், மாங்காய் அரைத்து, அதில் கலந்து, கம்பஞ்சோறு வழங்கப்பட்டது.
ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றில் ஈரோடு மாவட்ட கரையோரத்தில் காங்கேயம்பாளையமும், எதிர் கரையில் நாமக்கல் மாவட்டம், பட்லூரும் அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பட்லூர் வந்து, அங்கிருந்து அதிகாலை 3 மணியில் இருந்து பரிசல் மூலம் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். விழாவை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தால் அப்பகுதி களை கட்டியது.
டிராஃபிக் ஜாம்: ஈரோடு- கரூர் ரோட்டில் சாவடிபாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து காங்கேயம் பாளையத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலம் குறைவான ரோடு மட்டுமே உள்ளது. நேற்று பக்தர்கள் வந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு அரசு பஸ்கள் கோவில் அருகில் வரை இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் செல்லும் போது நெரிசல் மேலும் அதிகமானது. ஆண்டுதோறும், இவ்விழா நாளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.