பதிவு செய்த நாள்
22
மே
2020
09:05
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பூமியை தோண்டிய போது, 5 அடி உயர சிவலிங்கம், பழங்கால சிலைகள், துாண்கள் கண்டெடுக்கப்பட்டன.
உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான, 15 உறுப்பினர்கள் அடங்கிய, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த, மார்ச் மாதத்தில் நடந்தது. ஆனால், அதன் பின், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கட்டுமானப் பணிகளை துவக்க முடியவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள், 11ம் தேதி துவங்கியது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்காக பூமியை தோண்டிய போது, அதில், ௫ அடி உயர சிவலிங்கம், பல்வேறு கடவுளர்களின் பழங்கால சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள் கிடைத்துள்ளன.
இது பற்றி அறக்கட்டளையின் பொதுச் செயலர், சம்பத் ராய் கூறியதாவது: கோவில் கட்டுவதற்காக, பூமியைத் தோண்டிய போது, சிவலிங்கம், சிற்பத்துாண்கள் உட்பட, பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, பாபர் மசூதி கட்டுவதற்கு முன், அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை, மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர், ஜிலானி கூறியதாவது: அயோத்தியில், ராமர் கோவில் இருந்ததை, தொல்பொருள் ஆய்வு உறுதியாக தெரிவிக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் இப்போது கிடைத்துள்ளதாக கூறப்படும் பொருட்களுக்கும், ராமர் கோவிலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. பீஹார் தேர்தலுக்காக, பா.ஜ., நடத்தும் நாடகம் தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய மில்லி கவுன்சில் பொதுச் செயலர், அயோத்தியில் கிடைத்த பொருட்கள், புத்த மதத்துடன் தொடர்பானவை என்றார்.அரசின் கட்டுப்பாட்டில் சன்னி ஷியா வாரியங்கள் உத்தர பிரதேச அரசு, ஷியா மற்றும் சன்னி வக்பு வாரியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது பற்றி, மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர், மோஷின் ராசா கூறியதாவது:ஷியா, சன்னி வக்பு வாரியங்கள், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு இருந்த போது கொண்டு வரப்பட்டன. இந்த இரண்டு வாரியங்களும், வக்பு சொத்துக்களை கையாள்வதில், பல முறைகேடுகள் செய்துள்ளன. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சன்னி வக்பு வாரியத்தின் பதவி காலம், மார்ச், 31ம் தேதியுடனும், ஷியா வாரியத்தின் பதவி காலம், 19ம் தேதியுடனும் முடிந்தன. இதையடுத்து, இரண்டு வாரியங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ், மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அவற்றை கவனிக்க, விரைவில் தலைமை செயல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.