புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் பணிவோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2025 10:09
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!
ஷடசீதி புண்ணிய காலமான இன்று சிவ சக்தி வழிபாட்டிற்கான சிறந்த நாள். சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். இக்காலத்தில் சிவன் சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும். ஆற்றலையும் மனம் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு.