Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரிய புராணம் பகுதி-2 சூரிய புராணம் பகுதி-2
முதல் பக்கம் » சூர்ய புராணம்
சூரிய புராணம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
04:06

தக தகவென்று தங்கத் தாம்பாளம் போன்று ஜொலித்துக் கொண்டு ஆயிரம் கிரணங்களோடு கீழ்த்திசையில் சூரியன் உதயமாகும் போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் செல்லுகிறது. புதிய உற்சாகத்தோடு மக்கள் நாளைத் தொடங்குகின்றனர். அந்தக் கிரணங்கள் கொடுத்து வரும் சக்தியால் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன. பயிர் விளைகின்றது. சூரியன் இல்லையேல் உயிர் வளர்ச்சி இல்லை என்றே சொல்லலாம். பிரத்தியக்ஷமாக விளங்கும் சூரியபகவானை வழிபடுவது நம் நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகின்றது. வேதங்கள் சூரியனுடைய பெருமையைப் பலவாறாக எடுத்துக் கூறுகின்றன. வெளிநாடுகளிலும் சூரிய பூஜை பரவியிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூரியன் முழுமுதற் கடவுளாக வழிபடும் விதத்தை சவுர மதம் என்று குறிப்பிடுவர். கிருஷ்ண புத்திரனுக்கு நாரதர் எடுத்துக்கூறிய சூரிய பகவானுடைய மகிமையை விளக்கும் இப்புராணம் சாம்பபுராணம் என்றும் அழைக்கப்படும். உபபுராணங்கள் பதினெட்டில் இதுவும் ஒன்று. பதினென் புராணங்களில் சவுர புராணம் என்ற ஒரு புராணம் இருக்கிறது. அது உலக சிருஷ்டி முதலான விவரங்களை சூரியனே எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்

1. நைமிசாரண்யத்திலே சூரியோதயம்

நைமிசாரண்யம் எனப்படும் உத்தமமான வனத்திலே ஒரு சமயம் சவுனகர் முதலான முனிவர்கள் ஒன்று சேர்ந்து ஸத்ரம் எனப்படும் யாகத்தைத் தொடங்கினார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடத்தப்படும் அந்த மகா யாகத்தைக் காண பல பாகங்களிலிருந்தும் முனிவர்கள் அந்த வனத்துக்கு வந்து கூடினர். சூதமுனிவரும் நைமிசாரண்ய வனத்துக்கு ஸத்ர யாகத்தைக் காண வந்தார். சூதர் மகா ஞானி. வியாசர் வகுத்து அளித்த பதினெட்டு புராணங்களையும் மற்ற மகரிஷிகளால் அப்புராணங்களுக்கு உப புராணங்களாக இயற்றப்பட்ட புராணங்களையும் நன்கு அறிந்தவர். அப்புராணங்களையும் உலகிலே பரப்பும் உன்னத பணியை அவர் மேற்கொண்டிருந்தார். சூதர் வருகையை அறிந்த முனிவர்கள் ஆனந்தம் கரை புரண்டோட அவரை எதிர்கொண்டு அழைத்தும் அர்க்கியம் முதலான கொடுத்து உபசரித்தார்கள். அவருடைய திருவாக்கின் மூலம் எம்பெருமான் மகிமைகளைத் தாங்களும் கேட்டு ஆனந்திக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். சூதருடைய உள்ளம் அந்த வேண்டுகோளால் மகிழ்ச்சி அடைந்தது. இறைவன் அவதார மகிமைகளை நாள்தோறும் எடுத்துச் சொல்லி அவர்களைக் களிப்பிலே ஆழ்த்தி வந்தார். ஒருநாள் சவுனகர் அவரை நமஸ்கரித்துப் பணிவோடு தெரிவித்துக் கொண்டார்.

முனிசிரேஷ்டரே, தாங்கள் பல புராணங்களை விஸ்தாரமாக எடுத்துச் சொல்லி எங்கள் உள்ளத்திலே மகிழ்ச்சி நிறையச் செய்தீர்கள். ஷண்முகனது சரிதம், பிரும்மாண்ட புராணம், வாயு புராணம், ஸாவர்ணி சொன்ன புராணம், மார்க்கண்டேய புராணம், வைசம்பாயன புராணம், ததீசி புராணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், வாலகில்ய முனிவரும் மற்றும் மகரிஷிகளும் கூறிய உப புராணங்கள் ஆகிய இவற்றைச் சொன்னீர்கள். ஆனால் கிருஷ்ணன் புத்திரனான சாம்பன் கேட்ட சூரியனுடைய மகிமையை எங்களுக்குச் சொல்லவில்லையே. அமிருதத்துக்கு ஒப்பான அந்தப் புராணத்தைக் கேட்காததால் எங்களுக்குச் செவிகள் கிடைத்த பலன் பூரணமாகவில்லை. துவாதசாதித்தியவனை வர்ணிக்கும் பதினெட்டாவதான அந்த உபபுராணத்தை எங்களுக்குச் சொல்லாதது ஏன்? ஸர்வ சாஸ்திரங்களின் அர்த்தமும் சகல புராணங்களின் ஸாரமும் அதில் அமைந்திருக்கின்றனவே. தாங்கள் உபதேசம் பெற்றவாறே எங்களுக்கும் அதைக்கூறவேண்டும். கேட்க ஆவலுள்ளவர்களாய் இருக்கின்றோம். இவ்வாறு சவுனகர் கேட்டபோது அவ்வார்த்தைகளால் சூதருடைய மனம் மிகவும் சந்தோஷம் கொண்டது. பகவானுடைய மகிமையைக் கேட்கத்தான் அம்முனிவர்களுக்கு எத்தனைஆர்வம்! சிரேஷ்டமான தவத்தால் சிறந்த மகானுபாவர்களே, உத்தமமான கேள்வியைத்தான் கேட்டீர்கள். வேதத்தின் பொருளை விஸ்தாரமாக எடுத்துக் கூறும் பாரதத்தை விட ஆதித்திய புராணம் சிறந்த விஷயமுள்ளது. ஸகல புராணங்களிலும் சிறந்ததாக இப்புராணம் கூறப்படுகிறது. இதனுள் விசித்திரமான சரித்திரங்கள் பல சொல்லப்பட்டுள்ளன. வேதத்தின் அர்த்தம், ஸ்மிருதிகளின் சாரம், வர்ணாசிரம தருமங்கள், நடந்த காலம், நடக்கும் காலம், நடக்கப் போகும் காலம் பற்றிய விவரங்கள், மந்திர வாதம், லோக சிருஷ்டி, பிரளய காலத்தில் நிகழ்பவை, ஸாங்கோபாங்கமான பூஜாவிதி, பிறரைத் தன் கட்டுப்பாட்டிற்கு வரவழைக்கும் வசியம், பகைவனை அசைவற்றவனாகச் செய்யும் ஸ்தம்பனம், பூதங்களை உண்டாக்குதல், விக்கிரகங்களின் லக்ஷணம், பூஜை செய்வதற்கு உகந்த இடம், அதை அமைப்பது, மண்டலங்களை அமைப்பது, கர்மயாகம், சித்தயாகம், யாகஸாதனம், மகா மண்டல யாகம், பன்னிரண்டு ஆதித்தியர்களின் சான்னித்தியம், பூஜைக்கேற்ற புஷ்பம், தூபம் முதலானவை. சப்தமியில் உபவாசமிருப்பதன் பலன், வெற்றியைத் தரக்கூடிய கர்மாக்கள், ப்ரோக்ஷண மந்திரம், தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள், கர்மாவிற்கு ஏற்ற காலம், தர்ம விதிகள், தூபகர்மம், நற்கனவும் தீயகனவும் அவற்றின் பலன்களும், பிராயச்சித்தம் செய்து கொள்ளுதல், ஆசாரியனுடைய லக்ஷணம், சிஷ்யர்களுக்கு மந்திர தீøக்ஷ, பலவகையான ஸ்தோத்திரங்கள் ஆகிய இவ்விஷயங்களைப் பற்றி இப்புராணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் விருப்பப்படியே அவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று சூதர் சூரிய புராணத்தைக் கூறத் தொடங்கினார்.

2. பிரத்தியக்ஷ தெய்வம் பாஸ்கரன்

ஒரு சமயம் வசிஷ்ட மகரிஷி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு விச்ராந்தியாகத் தம்முடைய ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார். அச்சமயம் சூரிய வமிசத்தில் தோன்றிய பிருஹத்பலன் என்னும் அரசன் அங்கே வந்தான். முனிவரை நெருங்கி அவரைப் பணிவோடு வணங்கினான். மலர்ந்த முகத்தோடு அரசனைப் பார்த்து முனிவர், ஹே ராஜன், சர்வ மங்களமும் உண்டாகட்டும். உன் வரவால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வரவேற்றார். மகரிஷே, தங்களிடம் சில விஷயங்களை அறிந்து போகவே வந்துள்ளேன் என்று பிரார்த்தித்தான் அரசன். ஹே ராஜன், நீ அறிய விரும்பும் விஷயத்தைச் சொல். அவற்றை உனக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று வசிஷ்டர் கூறவும், பிருஹத்பலன் அளவற்ற ஆனந்தம் அடைந்தவனாய் அவரை மறுபடியும் பணிந்து தெரிவித்தான். முனி சிரேஷ்டரே, பரப்பிரம்மம் என்று சொல்லப்படுவது எது? அந்தப் பிரம்மத்தோடு சேர்ந்து விட்டால் மீண்டும் இவ்வுலகிலே பிறப்பு என்பது கிடையாது எனக்கூறுகிறார்களே. பிரம்மச்சாரியோ, கிருஹஸ்தனோ, வானப்பிரஸ்தனோ, சந்நியாசியோ யோகத்தைப் பெற எந்தத் தேவதையை உபாசிக்க வேண்டும்? அழிவில்லாததும் என்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கம் எதனால் கிடைக்கும்? சிறந்த மோக்ஷத்தை எதனால் அடையலாம்? சொர்க்கத்துக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? அங்கிருந்து திரும்பவும் பூலோகத்தில் வந்து பிறவாதிருக்க என்ன முயற்சி மேற்கொள்ள வேண்டும்? தேவர்களுக்கெல்லாம் பிதா யார்? யாரை விடச் சிறந்த தெய்வம் இல்லையோ, அவரைப் பற்றிக் கூறவேண்டும். அசையும் பொருள், அசையாப் பொருள் நிறைந்த இவ்வுலகைப் படைத்தது யார்? யாரிடம் இந்த உலகம் முதலில் லயத்தை அடைகிறது. இந்த விஷயங்களைத் தாங்கள் எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அரசன் கேட்கவே வசிஷ்டரும் மகிழ்ச்சி அடைந்தவராய் அவனைப் பார்த்து சொல்லத் தொடங்கினார்.

ஹே ராஜன், உதிக்கும் போதே யார் இந்த உலகைத் தம் கிரணங்களால் இருள் இல்லாததாகச் செய்கிறாரோ, அவரை விட உயர்ந்த தேவர் வேறு உண்டோ! எவர் எல்லோரையும் நேரே பார்க்கிறாரோ, எவரை எல்லோரும் கண்ணால் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறார்களோ? அவரே எல்லாத் தேவருக்கும் மேலானவர். ஆதியும் அந்தமும் அற்றவர் அவர். மூவுலகத்தையும் உக்கிரமான தம்முடைய கிரணங்களால் பிரகாசப்படுத்தியவாறு சஞ்சாரம் செய்து வருகின்றனர். சகல தேவதைகளின் சொரூபமும் அவர். சொரூபத்துள் அடக்கம். ஸர்வ தேவதாஸ்வரூபியான அவரே நாம் செய்யும் தவத்தைப் பார்த்து பலன் தருபவர். ஸர்வ ஜகத்துக்கும் அவரே அதிபதி. ஸகல தர்மங்களுக்கும் சாக்ஷியாக அவர் விளங்குகின்றார். பிரகாசத்தையே தனமாக உடையவர் அவர். ஸகல லோகங்களையும் அவர் தம்மிடமே ஒடுங்கச் செய்து பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார். தாம் ஒருவராகவே இருந்து கொண்டு தம்முடைய கிரணங்களால் உலகங்களைப் பிரகாசப்படுத்துகிறார். எல்லாவற்றையும் அவரே தன் வசமாக்கிக் கொள்ளுகின்றார். அவரே தாதா! அவரே விதாதா. பூதங்களுக்கு முதலாக உள்ளவரும் அவரே. அந்தப் பூதங்களை ரக்ஷிப்பவரும் அவரே. ஹே ராஜன், அவருக்கு ஒருநாளும் குறைவு என்பதே இல்லை. அவருடைய மண்டலமும் அக்ஷயமாய் விளங்குகின்றது. பிதுர்களுக்கு எல்லாம் அவரே பிதா. தேவர்களுக்குத் தேவரும் அவரே. ஒருபோதும் அழியாது நிலைத்து நிற்கும் இடத்திலே அவர் பிரகாசிக்கின்றார். அந்த இடத்திலிருந்து அவர் ஒருபோதும் அகன்றதில்லை. அவரே ஆதித்தியன் எனக்கொண்டாடப்படுபவர். சிருஷ்டி தொடங்கியபோது அவரிடமிருந்து உலகம் தோன்றி பிரளய காலத்தில் அவரிடமே லயமாகிறது. யோகிகளும் ஞானிகளும் தங்கள் காலம் முடிந்ததும் தேகத்தை விட்டு விட்டுச் சுத்தர்களாகி பிரகாசிக்கும் கிரணங்களை உடைய அவரிடமே ஐக்கியமாகிறார்கள். சித்தர்களும், தேவர்களும் ஜநகர் முதலான உத்தம கிருகஸ்தர்களும், யோகத்தில் ஈடுபட்ட மன்னர்களும், வாலகில்யர் முதலான மகரிஷிகளும், பிரும்ம நிஷ்டர்களும் வானப்பிரஸ்தரும், துறவிகளும், பஞ்சசிகர்களும் மரக்கிளைகளில் பக்ஷிகள் வசிப்பது போல அவருடைய கிரணங்களை அண்டி யோகத்தைக் கைக்கொண்டு சூரிய மண்டலத்தில் பிரவேசித்து வசிக்கிறார்கள். வியாசருடைய புத்திரரான சுகரும் சூரிய கிரணத்தை அருந்தி முக்தியை அடைந்ததை வேதம் கூறும். பிரும்மா, விஷ்ணு, ருத்திரர் ஆகிய மூவரையும் பற்றிக் காதினால் மட்டும் கேட்க முடிகிறது. இருளைப் போக்கி ஒளியைத் தரும் சூரியனைப் பிரத்தியக்ஷமாகக் காணலாம். அவர் பிரத்தியக்ஷமான தெய்வம். ஆகவே ÷க்ஷமத்தை விரும்புபவர் சூரியனிடமே பக்தி செலுத்த வேண்டும். காணமுடியாத ஒன்றைவிடக் காணக்கூடிய பொருள் சிறந்தது அன்றோ, ஹே ராஜன், நீ சூரியனையே நாள்தோறும் பூஜித்து வா. சகல லோகத்துக்கும் அவரே மாதா, பிதா, குரு ஆவார்.

வசிஷ்டர் பிரத்தியக்ஷ தெய்வமான சூரியன் மகிமையைத் தெரிவித்தபோது பிரஹத்பலன் அவரைப் பார்த்து, மகரிஷே, தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் சூரியனுக்கு முதன்முதலில் எந்த இடத்தில் கோயில் ஏற்பட்டது? எந்த ஸ்தலத்தில் அவரைப் பூஜை செய்தால் அவர் அன்போடு அதை ஏற்றுக்கொள்வார்? சொல்ல வேண்டும் என்று கேட்டான். அரசே, சந்திரபாகா என்ற நதியின் கரையிலே சாம்பபுரம் என்றோர் நகரம் இருக்கிறது. அந்த இடம்தான் சூரியனுக்கு எப்போதும் ஸாச்வதமான ஸ்தானம். சாம்பனுடைய பிரீதிக்காகவும் லோகத்திலுள்ளோரை அனுக்கிரகம் செய்வதற்காகவும் சூரியன் அங்கே பன்னிரண்டு ரூபங்களோடு வசிக்கிறார். அன்போடு அனைவரையும் கடாக்ஷிக்கிறார். அந்த இடத்தில் அவரை ஆராதிப்பவருக்கு அவருடைய அனுக்கிரகம் விரைவிலே கிட்டும். விதிப்படி செய்யப்படும் பூஜையை அவர் பிரத்தியக்ஷமாக ஏற்றுக்கொள்ளுகிறார் என்றார் வசிஷ்டர். அப்போது அரசன் முனிவரிடம் கேட்டான். மகரிஷே, சாம்பன் என்பவன் யார்? அவரிடம் சூரியனுக்கு அன்பு ஏற்பட்டது எவ்விதம்? அரசனுடைய கேள்விக்கு வசிஷ்டர் பதில் கூறலானார்.

3. சாம்பன் பெற்ற கிருஷ்ண சாபம்

தேவர்களுக்கு மாதாவான அதிதி என்பவளுக்கு பன்னிரண்டாவது புத்திரர் விஷ்ணு என்னும் சூரியன். அவரே வசுதேவருக்குப் புத்திரராக வாசுதேவராக அவதரித்தார். அவருடைய புத்திரனே சாம்பன். வாசுதேவரான கிருஷ்ணனின் குமாரன் சாம்பனைக் குஷ்டரோகியாக ஆகும்படி சபித்தார். சாம்பன் தன் பெயரால் விளங்கும்படி ஒரு நகரத்தை நிர்மாணித்து அந்நகரிலே சூரியனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான் என்று வசிஷ்டர் சொன்னபோது பிருஹத்பலன் அவரை நோக்கி, மகரிஷே, தந்தை தன் குமாரனையே சபிக்க வேண்டி நேர்ந்தது ஏன்? காரணமில்லாமல் எந்தத் தந்தையும் அவ்விதம் சபிக்கமாட்டாரே? என்று கேட்டான். சாம்பன் கிருஷ்ணனால் சபிக்கப்பட்ட காரணத்தை வசிஷ்டர் அரசனுக்குக் கூறினார். பிரம்மதேவனுடைய மானசீக புத்திரர் நாரதர். அவர் எங்கும் தடையின்றிச் செல்வார். கைலாசம், வைகுந்தம், பிரம்மலோகம், சூரியலோகம், பிதுருக்கள் லோகம், ராக்ஷசலோகம், குபேர லோகம் இவ்விதமாக எல்லா இடங்களிலும் அவர் தடையேதும் இன்றி சஞ்சாரம் செய்பவர். அவ்விதமே பூலோகத்திலும் அவர் அரசர்களுடைய அரண்மனைகளுக்கும் அழைப்பு ஏதுமின்றி விஜயம் செய்பவர். அவரை வரவேற்று உபசரிப்பது தங்களுக்கு ஒரு பாக்கியம் என்று எல்லோரும் கருதுவார்கள்.

ஒரு சமயம் நாரதர் பூலோகத்துக்கு வந்தபோது துவாரகைக்கும் வந்தார். கிருஷ்ணனைத் தரிசிக்க அவர் அரண்மனைக்கு வந்தபோது அவரோடு ரிஷிகளும் வந்தார்கள். அரண்மனையில் அவர்கள் நுழைந்ததும், அங்கு இருந்த பிரத்தியும்னன் முதலான கிருஷ்ண புத்திரர்கள் எழுந்து நாரதருக்கும் அவருடன் வந்த மகரிஷிகளுக்கும் நமஸ்காரம் செய்து அர்க்கியம் முதலான கொடுத்து உபசரித்தார்கள். அத்தனை பேரும் எழுந்து நாரதரையும் மற்ற மகரிஷிகளையும் நமஸ்கரித்து உபசரித்தபோது அங்கிருந்த சாம்பன் மட்டும் அலக்ஷியமாக இருந்தான். நாரதரைத் திரும்பிக்கூட அவன் பார்க்கவில்லை. சாபம் வரவேண்டிய காரணம் இருந்ததால் நேரம் அவனை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்துவிட்டது. சாம்பன் தம்மைக் கவனிக்காது விளையாட்டிலே ஈடுபட்டிருப்பதைக் கண்டதும் நாரதருக்குக் கோபம் வந்து விட்டது. கிருஷ்ணனுடைய புத்திரன் என்பதால் பிறருக்கு மரியாதை கொடுக்கத் தேவை இல்லை என்ற கர்வத்தோடு அவன் இருப்பதை மாற்றி அவனுக்கு விநயத்தைக் கற்பிக்க வேண்டுமென எண்ணினார் நாரதர். ஆகவே அவரும் அவனுடைய அலக்ஷியத்தைக் கவனிக்காதது போல உள்ளே சென்றார். கிருஷ்ணர் நாரதர் வருகையை அறிந்து ஓடோடி வந்து வணங்கி அழைத்துச் சென்று தகுந்த ஆசனங்களைக் கொடுத்து அமரச்செய்தார். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் யோக÷க்ஷமங்களை விசாரித்துக் கொண்டு உலக விஷயங்களைப் பற்றி உரையாடலானார்கள். அப்போது நாரதர் கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! ஒரு விஷயம் உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். உன்னுடைய பதினாறாயிரம் மனைவியாரும் உன் புத்திரனான சாம்பனையே அதிகம் நேசிக்கிறார்கள். அவர்கள் மீது குறை சொல்வதற்கில்லை. சாம்பன் அத்தகைய அழகை உடையவனாயிருக்கிறான். துவாரகாவாச, யவனமும் அழகும் தாயின் மனத்தைக்கூட மயக்குகின்றது. இந்த உலகிலே அவனுடைய அழகுக்கு ஈடு எதுவும் இல்லை. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று எண்ணுகின்றனர் என்றார். அந்த வார்த்தைகளைக் கிருஷ்ணன் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. நாரதரே, நீங்கள் கூறுவது உண்மைதானா? என்னால் நம்ப முடியவில்லையே? என்றார்.

கிருஷ்ணா, இப்போது என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. போகட்டும், இன்னொரு சமயம் நேரிலே கண்டு தெரிந்து கொள்ளுமாறு செய்கிறேன் என்றார் நாரதர். அதன்பின்னர் அவர்கள் சிறிது நேரம் பல விஷயங்களை பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டனர். கிருஷ்ணன் அவர்களை அரண்மனை வாயில்வரை கொண்டு போய் வழி அனுப்பிவிட்டு வந்தார். சிறிது காலம் சென்றது. நாரதர் மறுபடியும் துவாரகைக்கு வந்தார். அந்தச் சமயத்தில் கிருஷ்ணன் தன் மனைவியருடனும் புத்திரர்களுடனும், பக்கத்திலுள்ள தடாகத்துக்கு ஜலக்கிரீடை செய்யப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். முன்னர் கிருஷ்ணரிடம் கூறியதை நிரூபிக்க அதுவே தகுந்த நேரம் என்பதை உணர்ந்த நாரதரும் அவருடன் புறப்பட்டார். தடாகத்திலே அனைவரும் உல்லாசமாக நீரிலே இறங்கி விளையாடி, பொழுதைப் போக்கினர். பெண்களுக்கிடையே சாம்பனும் இருப்பதைக் கண்டார் நாரதர். கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தவர் எழுந்து தடாகக் கரையை நோக்கிச் சென்றார். கரையை அடைந்ததும் சாம்பனை நோக்கி, சாம்பா, கிருஷ்ணன் உன்னை அழைக்கிறார் என்றார். சாம்பன் நீரிலிருந்து கரையேறி ஈரத்துணியை மாற்றிக் கொண்டு கிருஷ்ணனிடம் சென்றான். தடாகத்திலே நடக்கப் போவதை நன்கு உணர்ந்தவராய் நாரதரும் அவனோடு சென்றார். சாம்பன் புறப்பட்டுச் சென்ற பின்னர் தான் அங்கிருந்தவர்களுக்கு அவனைக் காணவில்லை என்பது தெரிய வந்தது. பரபரப்போடு ஒருவரை ஒருவர் அழைத்து சாம்பனைப் பற்றி விசாரித்தனர். அந்த சமயத்தில் கிருஷ்ணனை நாரதர் அங்கு அழைத்து வந்தார். ஜலக்கிரீடையின் மத்தியில் திடீரென்று நாயகனைக் காணாது பரபரப்போடு விசாரிப்பதைக் கண்டதும் கிருஷ்ணனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்து விட்டது. அவர்கள் மனத்திலே கல்மிஷமில்லாமல் சாம்பனைப் பற்றி விசாரித்தாலும் சூழ்நிலை அவர்களை சந்தேகிக்கும் நிலையில் அசைந்து விட்டது. நாரதர் முன்புக் கூறிய வார்த்தை உண்மைதான் என்று நினைத்தார் கிருஷ்ணன். கோபத்துடன் நிற்கும் கிருஷ்ணனைக் கண்ட பின்னரே அவர் வந்திருப்பதை அவர்கள் உணர்ந்தனர். பரபரப்போடு கரையேறி வேறு துணி மாற்றிக் கொண்டனர்.

புருஷன் இருக்கும்போது அழகை மட்டும் லட்சியமாகக் கொண்டு மனம் பேதலித்து விட்டீர்கள் நீங்கள். புத்திரன் என்பதைக்கூட எண்ணாது, அவன் அழகே உங்களைக் கவர்ந்திருந்ததால் அவனுடைய பிரிவைத் தாங்க முடியாது பரபரப்பு அடைந்தீர்கள். ஆகவே நீங்கள் குற்றம் இழைத்தவர்களாகிறீர்கள். புத்திரனுடைய அழகைக் கண்டு மயங்கியதால் உங்களுக்குப் புத்திரலோகத்தில் இடம் இல்லை. மேலும் சொர்க்கத்திலும் இடம் இல்லை. என்னுடைய காலத்துக்குப் பின்னர் நீங்கள் திருடர்களால் கவர்ந்து செல்லப்படுவீர்கள் என்று சபித்தார் கிருஷ்ணன். அந்தச் சாபம் அவ்வாறே நிறைவேறியது. கிருஷ்ணன் வைகுந்தம் சென்ற பின்னர் அவருடைய பதினாறாயிரம் மனைவியரையும் அர்ஜுனன் பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது திருடர்கள் வந்து அவனை வழிமறித்து அவர்களைக் கவர்ந்து சென்றார்கள். அந்த நேரத்தில் ருக்குமிணி, சத்தியபாமா, ஜாம்பவதி மூவரும் அங்கே இல்லாததால் அவர்களைக் கிருஷ்ணனுடைய சாபம் பற்றவில்லை. கிருஷ்ணனுடைய கோபம் அவர் பத்தினிகள் மீது பாய்ந்ததோடு நிற்கவில்லை. சாம்பன் மீதும் திரும்பியது. உன்னுடைய கவர்ச்சியும் அழகும் நிறைந்த தோற்றமே அவர்களுடைய மனத்தை ஈர்த்து அவர்களைக் குற்றம் இழைக்குமாறு தூண்டியது. ஆகவே, பிறர் வெறுக்கத்தக்கதான அருவருப்பு நிறைந்த தோற்றத்தை அடைய உன்னை ரோகம் பீடிக்கும் என்று சபித்தார். அந்த க்ஷணமே சாம்பனுடைய ரூபம் அருவருக்கும் வகையில் குஷ்டரோகம் அவனைப் பீடித்தது. ஸ்திரீகளுடைய எண்ண மாற்றத்தைக் காண்பித்த பின்னர் நாரதர் தம் காரியம் கைகூடியது என அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சாம்பன் சூரியனை ஆராதித்துத் தந்தையால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டான். இவ்விதம் வசிஷ்டர் கூறியதும் பிருஹத்பலன் குறுக்கிட்டு, மகரிஷே, சந்திரபாகா நதி தீரத்திலே சாம்பன் ஆதித்தியனை ஆராதித்து தந்தையால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டான் எனக்கூறினீர்களே. அந்த இடத்தில் சாம்பன் செய்த பூஜைதான் சூரியனுக்கு முதல் பூஜையா? அதற்கு முன்னர் அங்கே சூரியபகவான் சான்னித்தியம் கொண்டிருந்திருக்கிறாரா? என்று கேட்டான். அரசன் கேட்டதற்கு வசிஷ்டரும் பதில் சொல்லலானார்.

4. ஆத்ம சொரூபத்தைப் பூஜிக்கும் ஆதித்தியன்

ஹே பிருஹத்பலா, சாம்பன் பூஜிக்கும் முன்னதாகவே சூரியன் அந்த ஸ்தலத்தில் சான்னித்தியம் கொண்டிருக்கிறார். அதைக் கூறுகிறேன் கேள் என்று தொடங்கினார் வசிஷ்டர். பிரஜைகளைச் சிருஷ்டித்த பின்னர், சூரியன் தம்மைப் பன்னிரண்டு மூர்த்திகளாகப் பிரித்துக் கொண்டு ஸகல லோகங்களையும் ரக்ஷித்து வருகின்றார். இந்திரன், தாதா, பர்ஜன்யன், பூஷா, துவஷ்டா, அரியமான், பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்திரன் என்ற பெயரோடு இந்தப் பன்னிரண்டு பேரும் லோகத்தை ரக்ஷித்து வருகின்றனர். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தேவதையாக இருந்து அவர்களை ரக்ஷித்து வருகிறார். தாதா என்பவர் சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டுப் படைத்து வருகிறார். பர்ஜன்னியன் மேகத்திலே இருந்து லோகத்திலே மழையைப் பொழியச் செய்கிறார். பூஷா என்பவர் அன்னத்திலே இருந்து பிரஜைகளுக்கு உணவு தந்து போஷிக்கிறார். துவஷ்டா அவுஷதி செடி கொடிகளில் இருந்து அவுஷதமாக மக்களுக்கு நன்மை செய்து வருகிறார். அரியமான் என்பவர் வாயுரூபமாக ஸகலமான ஜீவராசிகளின் தேகத்திலே சஞ்சாரம் செய்து வருகிறார். பகன் பூமியிலும் ஜீவராசிகளுடைய சரீரத்திலும் இருந்து நன்மை புரிந்து வருகிறார். விவச்சுவான் அக்கினியிலே பிரகாசிக்கிறார். அத்துடன் அவர் பிரஜைகளுடைய சரீரத்திலும் இருந்தும் அவர்கள் உண்ணும் ஆகாரத்தை ஜீரணம் செய்து வருகிறார். விஷ்ணு என்பவர் தேவர்களுக்கு உண்டாகும் எதிரிகளை நாசம் செய்து அவர்களை ரக்ஷித்து வருகிறார். விஷ்ணு என்பவர் தேவர்களுக்கு உண்டாகும் எதிரிகளை நாசம் செய்து அவர்களை ரக்ஷித்து வருகிறார். அம்சுமான் மக்களுடைய தேகத்தில் வாயு ரூபமாக இருந்துகொண்டு அவர்களை ஆனந்தம் கொள்ளச் செய்கிறார்.

வருணன் ஜலரூபமாக இருந்து உலகிலுள்ளோருக்கு உயிர் கொடுக்கிறார். வருணன் இருக்குமிடம் சமுத்திரம். ஆகவே சமுத்திரத்தை வருணாலயம் என்று குறிப்பிடுவர். மித்திரன் எனப்படும் பன்னிரண்டாவது சூரியமூர்த்தி சந்திரபாகா நதி தீரத்தில் இருந்துகொண்டு தவம் செய்தவாறு லோகத்துக்கு அனுகூலங்கள் செய்து வருகிறார். ஆகவே அந்தப் பிரதேசத்துக்கு மித்திரவனம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அந்தப் பிரதேசத்துக்குச் சென்று அங்கே சாம்பன் சூரியபகவானை ஆராதித்து அவருடைய பேரருளுக்குப் பாத்திரமாகி, உடலை வருத்தும் நோய் நீங்கப் பெற்றான். இவ்வாறு வசிஷ்டர் கூறி வரும்போது பிருஹத்பலனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. முனிவரை நமஸ்கரித்து, மகரிஷே, தேவர்களுக்கெல்லாம் தேவன் என்றும் ஆதிதேவன் என்றும் சூரியனை வர்ணித்தீர்களே, இவ்விதமிருக்க அவர் சந்திரபாகா நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறீர்களே, அவரே அனைத்துக்கும் காரணமாயிருக்க யாரைக் குறித்துத் தவம் செய்தார்? ஏன் தவம் செய்ய வேண்டும்? என்று கேட்டான். அரசே, இது மிகவும் ரகசியமானது. சூரியனே நாரதருக்கு இதைச் சொல்லியிருக்கிறார். அதை நான் உனக்குக் கூறுகிறேன் கேள் என்றார் வசிஷ்டர். மித்திரன் சந்திரபாகா நதி தீரத்தில் இருந்து கொண்டு வாயுவையே ஆகாரமாக உட்கொண்டு தவத்தில் ஈடுபட்டு வருகிறார். வருணனோ சமுத்திரக்கரையில் ஜலத்தையே உணவாகக் கொண்டு தவம் செய்து வந்தார்.

அந்த சமயத்தில் மேரு பர்வதத்திலிருந்து புறப்பட்டு சஞ்சாரம் செய்து வந்த நாரதர் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். சலக தேவதாஸ்வரூபியான சூரியன் அங்கே தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமாகிவிட்டது. சகல தேவதைகளும் உலகத்தோரும் அவரைக் குறித்துத் தவம் இருக்கையில் அவர் எதற்காகத் தவம் இயற்றுகிறார் என்று வியந்தார். அவருக்கு மிஞ்சிய தேவதை இல்லாதிருக்கையில் அவர் யாரைக் குறித்துத் தவம் செய்வது என்பதும் நாரதருக்கு விளங்கவில்லை. வருணனை நெருங்கி அவரை நமஸ்கரித்தார். தேவதேவா, இதென்ன ஆச்சரியமாக இருக்கின்றதே. வேதங்களும் புராணங்களும் தங்களைப் பிறப்பு இறப்பு அற்ற பரம்பொருளாகக் கூறுகின்றன. நடந்தது நடப்பது நடக்கப்போவது இம்மூன்றுக்கும் தாங்களே காரண பூதன், நான்கு ஆசிரமங்களிலும் இருப்போர் பல ரூபங்களில் விளங்குகின்ற தங்களையே பூஜிக்கின்றனர்! எல்லாவற்றுக்கும் தாயும் தந்தையுமாக விளங்கும் தாங்கள் இவ்விதம் தவத்தில் அமர்ந்திருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. சகல தேவதைகளுக்கும் ஸ்வரூபியாக விளங்கும் தாங்கள் எந்தத் தெய்வத்தைப் பூஜிக்கிறீர்களோ நான் அறியேன் என்றார் நாரதர். அவரைப் பார்த்துக் குறுநகை செய்த வருணன், நாரதா, மிகவும் ரகசியமான ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டாய். பிரமாதி தேவர்களாலும் எந்தப் பிரமமானது அறிய முடியாதிருக்கின்றதோ, எந்தப் பிரமம் மிக சூக்ஷ்மமாக விளங்குகின்றதோ, எது அசைவில்லாததோ, எந்தப் பொருளை எந்தவிதமான இந்திரியங்கள் மூலமாகவும் அறிய முடியாததோ, எந்தப் பிரமம் எல்லா பூதங்களுக்கும் மேலானதாக விளங்குகின்றதோ, அந்தப் பூதங்களில் எது ஊடுருவி நிற்கின்றதோ, நிர்க்குணமான அந்தப் பொருள் ஹிரண்யகர்ப்பன் என்ற ரூபத்தில் விளங்கும் புத்தியே. தாம் ஒருவராகவே அவர் இருந்து சகல உலகத்திலும் வியாபித்திருக்கிறார். தமக்கென ஒரு சரீரமில்லாத அவர் உலகிலே உள்ள சகல பிராணிகளுடைய சரீரங்களிலும் விளங்குகிறார். அவருக்கு எந்தவிதமான பற்றோ, கர்மாவோ கிடையாது. ஆனால் எல்லோருடைய சரீரத்திலும் விளங்கிக் கொண்டு எல்லாக் காரியங்களுக்கும் அவர் சாக்ஷியாக இருக்கின்றார். எத்தனை தீபங்கள் இருந்தாலும் வெளிச்சம் ஒன்றுதான். அதே போல அவர் தாம் ஒருவராகவே இருந்து இந்த உலகம் பிரகாசிக்கக் காரணமாகிறார். அந்தப் பரம்பொருளே ஆத்ம சொரூபி. நாம் ஆத்மாவை அறிய வேண்டும். ஆகவே நான் அந்த ஆத்ம சொரூபத்தையே பூஜிக்கிறேன். சகல தேவதைகளும் அவரையே பூஜிக்கின்றனர். பலவித மூர்த்தங்களில் அவரையே வழிபடுகின்றனர். தம்மை வழிபடுவோருக்கு அவர் நல்ல கதியை அளிக்கிறார். உலகத்தோர் இதனைத் தெரிந்து கொண்டு கடைத்தேறவே நான் இங்கு ஆத்ம சொரூபத்தைப் பூஜித்து வருகிறேன் என்றார். அசக்தர்களான இந்த மக்களிடம் இறைவனுக்கு உள்ள பெருங்கருணையை எண்ணி எண்ணி வியந்தவராய் நாரதர் அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்.

5. சூரிய ஸ்வரூபம்

உலகத்தோருடைய நன்மைக்காக மித்திரனாகச் சந்திர பாகா நதிக்கரையிலும், வருணனாகச் சமுத்திர தீரத்திலும் சூரியன் ஆத்ம ஸ்வரூபத்தைப் பூஜித்து வருகிறார் என்று வசிஷ்டர் கூறியபோது பிருஹத்பலன் அவரைக் கேட்டான். மகரிஷே! சாம்பன் சந்திரபாகா நதி தீரத்தை அடைந்து சூரியனை ஆராதித்துத் தந்தை அளித்த சாபத்தைத் தீர்த்துக் கொண்டான் அல்லவா! அவன் எவ்வாறு சந்திரபாகா நதி தீரத்தை அடைந்தான்? சூரியனை அவன் ஆராதிக்கக் காரணம் என்ன? தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அரசன் கேட்கவே வசிஷ்டரும் அந்த விவரங்களைக் கூறலானார். சாம்பன் தனக்கு ஏற்பட்ட பயங்கர சாபத்தைக் கண்டு திடுக்கிட்டான். மிகவும் பயங்கரமான அந்த நோய் பற்றும் படியாக அவன் என்ன தவறு செய்தான்? எவ்வளவுதான் யோசித்தும் அவனுக்கே அது விளங்கவில்லை. தந்தையாகிய கிருஷ்ணனை நெருங்கி அவரை நமஸ்கரித்தான். தந்தையே, தங்களுடைய கோபத்துக்கு ஆளாகிவிட்ட நான் பிறரும் கண்டு வெறுக்கும்படியான நோயை உடையவனாகி விட்டேன். இந்த அளவுக்குத் தாங்கள் கோபம் கொள்ளுவதற்கு நான் என்ன தவறு செய்தேன்? தாங்கள் அழைப்பதாகக் கேட்டு இங்கு வந்து தங்களைப் பணிந்ததைத் தவிர நான் எந்தக் காரியமும் செய்யவில்லையே? அது தவறா? ஐம்புலன்களை அடக்கி எப்போதும் இறைவனையே தியானித்து வரும் முனிசிரேஷ்டர்கள் எல்லோரும் தங்களைக் காணவந்து வணங்கி தங்கள் திருநாமத்தைத் தரிசித்துச் செல்கின்றனரே. அவ்விதம் இருக்க நான் தங்களை வணங்கியது மட்டும் தவறா? அதற்காகத்தான் இந்தக் கொடிய நோய் என்னைப் பற்றுமாறு சாபம் கொடுத்தீர்களா? என்று நெஞ்சம் விம்மக் கேட்டான்.

சற்றுமுன்பு எல்லையற்ற கோபத்தில் இருந்த கிருஷ்ணன் அப்போது சாந்தம் கொண்டிருந்தார். சாம்பனுடைய அருவருப்பான தோற்றமும் உள்ளத்தைப் பிழிந்து எடுக்கும் வகையில் அவன் கேட்டதும் கிருஷ்ணனுக்கே வருத்தத்தைக் கொடுத்தன. கணநேரத்தில் தாம் கோபாவேசத்துக்கு ஆளாகி விட்டதை அப்போதான் உணர்ந்தார். அவ்விதம் நேருவதற்குக் காரணம் என்ன என்பதை மனத்திலே சிந்தித்தப்போது நாரதருடைய வேலையே அது என்பதை உணர்ந்தார். இப்புவியில் தாம் தோன்றிய காரணத்தை முடித்துக் கொண்டு வைகுந்தத்தை அடைந்த பிறகு யதுகுலம் அழிந்ததும் தம்முடைய பதினாறாயிரம் மனைவியரும் தங்கள் முடிவை அடைய சாம்பன் மூலம் சாபம் பெற முன்னரே விதிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். அதன் காரணமாகவே, சாம்பன் நாரதரை அலட்சியம் செய்து அவர் கோபத்துக்கு ஆளாகி இந்தச் சாபத்தை தம் மூலம் பெற நேர்ந்தது என்பதையும் அறிந்தார். அன்பு மேலிட்டவராய் சாம்பனை அருகில் அழைத்தார் கிருஷ்ணன். ஜாம்பவதி புத்திரா, வருத்தப்படாதே, நான் அவசரப்பட்டு விட்டேன் என்பது உண்மையே. இருப்பினும் இம்மாதிரி ஒரு நிலை உனக்கு ஏற்படும்படி இருந்திருக்கிறது. நாரதரே இதற்குக் காரணமாக இருந்தவர். அவரிடமே சென்று இதற்கு விமோசனத்தைக் கேள். அதன்மூலம் இந்த நோய் நீங்கப் பெறுவாய் என்றார். நெஞ்சம் வேதனையால் விம்ம, சாம்பன் கிருஷ்ணனை நமஸ்கரித்து அவ்விடம் விட்டுச் சென்றான். பிறருடைய பார்வையில் தன் தோற்றம் படுவதை விரும்பாது தனிமையில் ஒடுங்கிக் கிடந்தான். சிறிது காலத்துக்குப் பிறகு நாரதர் கிருஷ்ணனைக் கண்டு செல்ல துவாரகைக்கு வந்தார். அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சாம்பன் அவரை நெருங்கி நமஸ்கரித்தான்.

மகரிஷியே, தங்கள் திருவடிகளை வணங்கி விண்ணப்பித்துக் கொள்கிறேன். பிரமபுத்திரரான தாங்கள்தான் எனக்குத் தகுந்த மார்க்கத்தைக் காட்ட வேண்டும். தந்தையின் கோபத்துக்கு ஆளாகி இப்படி ஒரு பயங்கர நோய்க்கு இரையாகி விட்டேன். இந்த நோயின் கொடுமையிலிருந்து நான் விடுபட எந்தத் தேவதையை ஆராதிக்கலாம்? எல்லா தேவதைகளிலும் சிறந்து விளங்குபவர் யார்? அழிவில்லாத மாறுதலில்லாத உத்தம புருஷன் யார்? கஷ்டத்தில் தவிக்கின்ற மனிதரைக் காப்பாற்ற அனுகூலங்கள் செய்பவர் யார்? தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் பிரார்த்தித்தான். அவனுடைய நிலையைக் கண்டு மனம் இரங்கி நாரதர் அவனுக்குச் சொன்னார். சாம்பா, உன்னைப் பார்க்கும்போது என் மனமும் வேதனை அடைகின்றது. நீ கேட்ட விஷயத்தை அவசியம் தெரிவிக்கிறேன். மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்து வரும்போது நான் ஒரு சமயம் சூரியலோகம் சென்றிருந்தேன். அங்கே சகல தேவகணங்களாலும் சூழப்பட்ட சூரியனைக் கண்டேன். கந்தர்வர், அப்சரஸ், ராக்ஷஸர் ஆகிய அனைவரும் அவரைச் சுற்றி இருந்தனர். கந்தர்வர் அவருடைய மனத்துக்கு இன்பமாகக் கானம் செய்தனர். அப்ஸரஸூகள் ஆனந்த நடனம் ஆடினர். யக்ஷர், ராக்ஷஸர், நாகர் முதலானோர் கைகளில் பயங்கரமான ஆயுதங்கள் ஏந்தி அவருக்குக் காவலாக நின்றனர். நான்கு வேதங்களும் அங்கே ரூபம் கொண்டு நின்றன. மகரிஷிகள் அந்த வேதங்களில் சொல்லப்பட்ட ஸ்தோத்திரங்களைக் கூறி அவரைப் பலவாறாகத் துதித்தனர். உஷத்காலம், உச்சிக்காலம், சாயங்காலம் ஆகிய திரிஸந்தியா காலங்களும் அழகிய தேவரூபம் எடுத்து சூரியனை வஜ்ரம், நராசம் முதலான ஆயுதங்களை ஏந்தி உபசரிக்கின்றன. ஆதித்தியர், வஸுக்கள், ருத்திரர், மருத்துக்கள், அசுவினிதேவர் மற்றுமுள்ள தேவர்களும் மூன்று காலங்களிலும் சூரியனை உபாசிக்கின்றனர். தேவேந்திரன் ஜய ஜய எனக் கூறிக்கொண்டு அவ்விடத்தில் நிற்கிறான். பிரமன், விஷ்ணு, ருத்திரன் மூவரும் அவரைப் போற்றிக் கொண்டாடுகின்றனர். அருணன் அவருக்கு ஸாரத்தியம் செய்கிறான். பச்சைக் குதிரை ரூபமெடுத்த ஏழு சந்தஸ்ஸுகளும் அவருடைய தேரிலே பூட்டப்பட்டிருக்கின்றன. ராகஞீ, நிக்ஷúபா என்ற இரு அழகிய மனைவிகள் அவரருகே இருக்கிறார்கள். இன்னும் எண்ணிறந்த தேவர்கள் அவருக்குப் பலவகைகளிலும் பணிவிடை செய்கின்றனர்.

ஹே சாம்பா, பிங்களன், தண்டநாயகன் இருவரும் துவாரபாலகர்களாக இருந்து அவரைச் சந்தோஷப்படுத்துகின்றனர். கல்மாக்ஷ பக்ஷிகள் இரண்டும், மேருவுக்குச் சமமாக நான்கு கொம்புகள் உள்ள வ்யோமன், திண்டி, நக்நன் ஆகியோரும் அவருக்கு எதிரிலும் முன்னும் பின்னும் நிறைந்திருக்கிறார்கள். இவ்வாறு ஸகல தேவர்களாலும் பூஜிக்கப்படும் சூரியனை நீ ஆராதித்து வந்தால் உன்னைப் பற்றியுள்ள இக்கொடிய ரோகம் நீங்கிவிடும். சூரியனை உபாசித்து சாபத்தைப் போக்கிக் கொள்ளுமாறு நாரதர் கூறியதும், சாம்பன் அவரைப் பார்த்து மகரிஷே, சூரியனைப் பற்றித் தாங்கள் இன்னும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும். அவருக்கு எத்தனை கிரணங்கள், அவர் எத்தனை மூர்த்திகளாக விளங்குகிறார்? ராக்ஞீ நிக்ஷபா என்ற இருவரும் யார்? துவாரபாலகர்களாக இருக்கும் அவ்விருவரும் யார்? கல்மாக்ஷ பக்ஷிகள் என்பவை எவை? மேருவுக்குச் சமமான வபோமா என்ன லக்ஷணம் உடையது? திண்டி நக்நன் என்பவர்கள் யார்? சூரியனைச் சுற்றிலும் திக்குகளிலே விளங்கும் தேவர்கள் யார் யார்? இந்த விவரங்களையெல்லாம் நன்றாக அறிய விரும்புகிறேன். தெளிவுபடக் கூறவேண்டும் என்று பிரார்த்தித்தான். நாரதர் மனத்திலே சூரியனைத் தியானித்து அவர் அருள் வேண்டியவராய் சாம்பன் கேட்ட விவரங்களைக் கூறலானார். உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவர் சூரியன். அவரை வஸ்து, அவ்யக்தம், ஸதஸத்ரூபம், பிரதானம், பிரகிருதி என்ற தத்துவங்களை உணர்ந்தோர் பகவானாகக் கூறுவர். அந்த வஸ்துவுக்கு வாசனையோ, வர்ணமோ, ரஸமோ, சப்தமோ ஸ்பரிசமோ இல்லை. இந்த உலகுக்கே அந்த வஸ்துதான் காரணமாக விளங்குகின்றது. அது பரப்பிரம்மத்தினிட மிருந்து உண்டானது. அந்தப் பரப்பிரம்மத்தின் உருவே ஸூரிய மண்டலம் ஆகும்.

ஆதி அந்தம், பிறப்பு இறப்பு ஆகிய இவை எதுவும், அப்பரம்பொருளுக்கு இல்லை. அவர் மிகவும் சூக்ஷ்மமானவர். அவரே இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் அவரிடமே தோன்றி அவரிடமே ஒடுங்குகின்றன. அவருடைய சொரூபம் சாதாரணமாக உள்ளவர்களுடைய புத்திக்கு எட்டாததாகும். அவருடைய உருவம் ஞானம், வைராக்கியம், தர்மம், ஐஸ்வரியம் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக இருக்கின்றது. ஆதிபுருஷராகிய அவர் அவ்யக்கத்தின் மூலமாக மனத்தால் எதை எதை நினைக்கிறாரோ அவற்றையெல்லாம் படைக்கிறார். படைக்கும்போது அவர் சதுர்முகனாக விளங்குகின்றார். படைத்தவற்றைப் பாலிக்கும்போது ஆயிரம் தலைகளை உடைய புருஷனாகப் பிரகாசிக்கின்றார். முடிவில் அனைத்தையும் ஒடுக்கும்போது அவர் சிவனாக ஆகின்றார். தாமே உண்டான அந்த மூர்த்தி இவ்வாறு முத்தொழில்களையும் புரிந்து வருகின்றார். அவர் பிரமனாக விளங்கும்போது சத்வம், ரஜஸ் என்ற இரு குணங்களும் அவருடைய ரூபத்துக்குக் காரணங்களாகின்றன. விஷ்ணுவாக அவர் இருக்கையில் சாத்வீக ரூபமே அவரிடமே நிறைந்திருக்கிறது. ரஜஸும் தமஸும் சேர்ந்து அவர் சிவனாக விளங்கக் காரணமாகின்றன. சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று காரியங்களுக்கும் முறையே பிரமன், விஷ்ணு, சிவன் மூவரும் அதிகாரிகளாகின்றனர். சூரியன் தம்மையே இவ்வாறு மும்மூர்த்திகளாக்கிக் கொண்டு இம் மூன்று காரியங்களையும் நடத்தி வருகிறார். முதன் முதலில் சூரியன் ஹிரண்ய கர்ப்பராகத் தோன்றினார். அவரே ஆதிதேவர். ஆகவே அவருக்கு ஆதித்தியன் என்ற நாமம் உண்டாயிற்று. அவர் இன்னொருவரிடம் பிறவாது தாமே தோன்றியதால் அஜன் என்ற பெயரைப் பெற்றார். தேவர்களுக்கெல்லாம் உயர்ந்தவராக இருப்பதால் அவர் மகாதேவன் ஆகிறார். எல்லாப் பிராணிகளிடமும் அவர் இருப்பதாலும் ஒருவருக்கும் அவர் வசமாகாததாலும் ஈசுவரன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. அனைவருக்கும் பெரியவர் ஆதலால் பிரமன் என்ற பெயர் அவருக்கு அமைந்தது. பிராணிகளை அவர் உண்டு பண்ணுவதால் அவர் பவன் என்று அழைக்கப்படலானார். பிரஜைகள் அவரிடமிருந்து தோன்றியதால் பிரஜாபதி என்ற நாமம் அவருக்கு அமைந்தது. பிராணிகளுடையவும் மக்களுடையவும் இருதயபுரியிலே அவர் நித்திய வாசம் செய்வதால் புருஷன் என்ற பெயரைப் பெற்றார். பிறவி இல்லாது முன்னமேயே அவர் இருப்பதால் ஸ்வாயம்பூ என்ற பெயரும் அவருக்கு விளங்குகிறது. உள்ளே ஹிரண்யத்தால் சூழப்பட்டிருப்பதால் அவர் ஹிரண்யகர்ப்பர் ஆகிறார். இந்த விதமாக சூரியன் பலவித நாமங்களைப் பெற்றார்.

6. பன்னிரு வடிவனான சஹஸ்ர கிரணன்

சூரியனுடைய ஸ்வரூப தத்துவத்தை நாரதர் சாம்பனுக்கு எடுத்துக் கூறிய பிறகு மேலும் அவர் தோற்றத்தை விளக்கலானார். எங்கும் நிறைந்திருக்கும் ஜலத்துக்கு நாரம் என்ற பெயர் உண்டு. அந்த ஜலத்தையே தமக்கு இருப்பிடமாக அவர் கொண்டதால் நாராயணன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. ஒரு சமயம் எங்கு பார்த்தாலும் பிரளய ஜலம் நிறைந்திருந்தது. அசையும் பொருள், அசையாப் பொருள் என்று ஏதும் இன்றி அனைத்தும் அந்த வெள்ளத்தால் அழிக்கப்பட்டு விட்டதால் எங்கும் நீர் வியாபித்திருந்தது. அந்தப் பிரளய ஜலத்திலே நாராயணன் என்ற புருஷன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஆயிரம் தலைகளுடனும், ஆயிரம் கைகளுடனும், ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் முகங்களுடனும் உள்ள பிரஜாபதியாக விளங்கினார். சூரியன், தேஜஸ், ரவி, ஆதித்தியன், வருணன், புவந கோப்தா, புராண புருஷன், ஹிரண்யகர்ப்பன், புருஷன், மஹாத்மா, தமஸூக்கு மேற்பட்டவன் என்று பலவிதமாக அழைக்கப்படும் பகவான் அவரே. பதினான்கு மனுக்கள் பிரமனுடைய பகல் நேரத்தில் தோன்றி மறைவர். அத்தனை காலம் அவருக்கு இரவு நேரமாகவும் இருக்கும். அதாவது பிரளய காலம் முழுவதும் பிரமனுக்கு இரவு நேரம். அந்தக் காலம் முழுவதும் ஒரே இருளாக இருக்கும். பிரளய காலத்தின் முடிவில் உலகை முன் போல் படைக்க சூரியனே பிரமனாகிறார். பிரளய நீரிலே பூமி மூழ்கிக் கிடப்பதைக் கண்ட அவர் அதை வெளிக் கொணர எண்ணம் கொண்டார். வராக மூர்த்தியாக உருவம் எடுத்த அவர் பிரளய ஜலத்தில் மூழ்கி அதனுள் ஆழ்ந்துக் கிடந்த பூமியை வெளியே கொணர்ந்து முன்போல நிலைப்படுத்தினார். பின்னர் மற்ற சிருஷ்டிகளை உண்டாக்க அவர் தமக்குச் சமமாக மானசீகப் புத்திரர்களைத் தோற்றுவித்தார். பிருகு, அங்கிரசு, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிரது, மரீசி, தக்ஷர், வசிஷ்டர் என்ற அந்த ஒன்பது பேரும் நவ பிரஜாபதிகள் என அழைக்கப்பட்டனர். நவப்பிரஜாபதிகள் தோன்றிய பிறகு பத்தாவது பிரஜாபதியைக் தோற்றுவிக்க அந்தப் புருஷன் மரீசி முனிவர் மூலம் அதிதி தேவியிடம் தாமே கச்யபராக அவதரித்தார். தக்ஷருக்குப் புத்திரியாகத் தோன்றியவள் அதிதி, மண்ணிலும் விண்ணிலும் பரவி இருக்கும்படியான ஒருபெரிய அண்டத்தை அவள் ஈன்றெடுத்தாள். அந்த அண்டத்திலிருந்து பன்னிரண்டு வடிவனாக ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் தோன்றினார்.

அண்டத்திலிருந்து தோன்றிய சூரியன் ஒன்பதாயிரம் யோசனை விஸ்தீரணமுடையவராய் இருந்தார். அகலத்தில் அவர் அதைப் போன்று மூன்று மடங்கு யோசனை விஸ்தீரணம் உள்ளவராக இருந்தார். கதம்ப புஷ்பத்தைச் சுற்றி கிஞ்ஜல்கங்கள் இருப்பதுபோல அந்த அண்டத்தைச் சுற்றி கிரணங்கள் சூழ்ந்திருக்கின்றன. ஆயிரம் தலையுள்ள சூரியன் அந்த மண்டலத்திலே கிழக்கு முகமாக இருக்கிறார். சூரியன் தம்முடைய கிரணங்களால் ஆகாயம், பூமி, நீர் எல்லாவற்றையும் உஷ்ணமுடையதாகச் செய்கிறார். ஆயிரக் கணக்கான கிரணங்களால் அவர் நதி, சமுத்திரம், குளம் முதலான இடங்களிலுள்ள நீரைக் கிரகித்துக் கொள்கிறார். சூரியன் அஸ்தமிக்கும்போது அவருடைய கிரணங்களில் கால் பங்கு அவருடன் அஸ்தமிக்கின்றன. மற்ற முக்கால் பங்கும் இரவிலே அக்கினியிலிருந்து பிரகாசத்தோடும் உஷ்ணத்தோடும் திரும்பவும் சூரியனை அடைகின்றன. சூரியன் அக்கினி இருவரிடமும் சூடும், ஒளியும் மாறி மாறி இருக்கின்றன. ஆகவே பகலில் சூரியனிடமும் இரவில் அக்கினியிடமும் பிரகாசத்தைக் காண்கிறோம். ஹேதி, கிரணம், கோ, ரச்மி, கபஸ்தி, அபீஷு, வந, உஸா, க்ரிணி, மரீசி, நாடி, தீதிதி, ஸாத்ய, மயூக, பாநு ஆம்ஸு, சப்தரிஷிகள், ஸுபர்ண, சகர, பாத என்று இருபது பெயர்களுடன் சூரியனுடைய பிரபைகள் பிரகாசிக்கின்றன. இந்தப் பிரபைகளுக்கு வந்தா, வந்த்ய முதலிய பெயர்கள் தனித்தனியேயும் இருக்கின்றன. சூரியனுடைய ஆயிரம் கிரணங்கள் குளிர், மழை, உஷ்ணம் ஆகியவற்றை உண்டு பண்ணுகின்றன. அந்தக் கிரணங்களில் நானூறு கிரணங்கள் மழையைப் பொழியச் செய்கின்றன. கிரணங்களுடைய ரூபம் நம் மனத்தாலும் நினைக்க முடியாதது. வந்தநா, மேத்யா, காதநா, கேதநா, அம்ருதா என்ற பெயருள்ள கிரணங்கள் மழையைத் தோற்றுவிக்கின்றன. முப்பது கிரணங்கள் பனியை உண்டு பண்ணுகின்றன. அவை ஹலாதினீ என்ற பெயர் கொண்டவை. மற்றவை சந்த்ரா என்ற பெயரை உடையவை. இவை அனைத்தும் பொன் நிறம் கொண்டவை.

சூரியனுடைய கிரணங்கள் பொதுவாக தேவர்களையும் பிதுருக்களையும் மனிதர்களையும் ரக்ஷித்துப் போஷிக்கின்றன. அவுஷதிகள் மூலமாக மனிதர்களுக்கு நன்மையைச் செய்கின்றன. ஸ்வதா என்பதால் பிதுருக்களையும், அமிருதத்தால் தேவர்களையும் சந்தோஷப்படுத்துகின்றன. வஸந்த ருது கிரீஷ்ம ருது ஆகிய இரு ருதுக்களிலும் முன்னூறு கிரணங்கள் பிரகாசிக்கின்றன. சரத் ருதுவிலும் வர்ஷ ருதுவிலும் நானூறு கிரணங்கள் ஒளி வீசுகின்றன. ஹேமந்த ருது சிசிர ருது ஆகிய காலங்களில் முன்னூறு கிரணங்கள் பணியாற்றுகின்றன. அவுஷதிகளில் சக்தியை அளித்து அவற்றின் மூலம் மக்களைக் காப்பாற்றுகிறார் சூரியன். ஸ்வதா என்பதில் ஸுதி என்ற அம்சத்தை அளித்துப் பிதுருக்களைப் போஷிக்கிறார். அமிருதத்தை அளித்து தேவர்களை அவர் ரக்ஷிக்கிறார். அவரே அக்கினியாகவும் பன்னிரண்டு சூரியனாகவும் இருந்து மூன்று லோகங்களையும் பிரகாசப்படுத்துகிறார். சூரியனே பிரமனாக விளங்குகிறார். அவரே விஷ்ணுவாகவும், ருத்திரனாகவும் அந்தந்தக் காரியங்களைச் செய்கையில் விளங்குகிறார். ரிக், யஜுஸ், ஸாம வேதங்களாகவும் அவரே பிரகாசிக்கிறார். உதயமாகும் போது ரிக்வேத ஸ்வரூபியாகக் கொண்டாடப்படும் அவர் மத்தியான்ன வேளையில் யஜுர்வேத ஸ்வரூபியாக விளங்குகிறார். சாயங்காலத்தில் அவர் அஸ்தமிருக்கையில் சாமவேத ஸ்வரூபியாக இருக்கின்றார். அவர் மிகுந்த பிரகாசத்தை உடைய கிரணங்களால் எங்கும் பிரகாசித்து சகல லோகங்களையும் ஒளி மயமாக்குகிறார். வீட்டின் நடுவே ஏற்றி வைத்த தீபம் நான்கு பக்கங்களிலும் வெளிச்சத்தைத் தருவது போல சூரியன் அந்த அண்டமாகிய கோளத்தின் நடுவே இருந்து கொண்டு நான்கு பக்கங்களிலும் மேலும் கீழும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். சூரியனுடைய கிரணங்கள் கீழும் மேலும் சுற்றிலுமுள்ள இருளைப் போக்குகின்றன. சூரியனுடைய கிரணங்களில் முன்னூறு பூலோகத்தைப் பிரகாசப்படுகின்றன. நானூறு கிரணங்கள் பிதுருக்களுடைய லோகத்தை ஒளியிடச் செய்கின்றன. முன்னூறு கிரணங்கள் தேவர்களுடைய லோகத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றன.

கிழக்கே உள்ள கிரணங்களில் ஏழு, கிரகங்கள் ஏழையும் படைத்தன. அந்தக் கிரணங்கள் உதவ்வஸு, ஸுஷுமநம், ஹரிகேச, விச்வகர்மர், விச்வவ்யசா, ஸோம்ய, ஸுரத என்ற பெயர் கொண்டு விளங்குகின்றன. ஸுஷும்ந என்ற கிரணம் சந்திரனுக்கு அமிருத கலையைத் தந்து அவனை விருத்தி பெறச் செய்கிறது. சந்திரன் என்றால் வெண்மையானவன், அமிருதன், சீதன், பிரகாசமானவன், சந்தோஷப்படுத்துபவன் என்றெல்லாம் பொருள் உண்டு. ஸம்யத்கஸு என்ற கிரணம் அங்காரகனை உண்டாக்கியது. விச்வகர்மா என்ற கிரணம் புதன் தோன்றக் காரணமாகியது. உதாவஸு என்ற கிரணம் பிரகஸ்பதிக்கு ஆதாரமாக இருக்கிறது. விச்வவ்யசா என்ற கிரணம் சுக்கிர கிரகத்தைப் போஷிக்கிறது. ஸ்வராட் என்ற கிரணம் சனி கிரகத்தைத் தோற்றுவித்தது. நக்ஷத்திரங்களுக்கு ஆதாரமாக இருப்பது ஹரிகேச என்ற கிரணம் ஆகும். க்ஷீணமாவதில்லை. அதாவது குறை இல்லை என்பதால் நக்ஷத்திரம் என்ற பெயர் தாரகைகளுக்கு உண்டாயிற்று. சூரியன் இல்லாவிடில் அவற்றுக்கு க்ஷத்ரம் என்னும் பலன் இல்லை. ஆகையினால் நக்ஷத்திரம் என்ற பெயர் அவற்றுக்கு ஏற்பட்டது. பூவுலகில் புண்ணியம் செய்தவர்களை மறு உலகிற்கு அழைத்துச் செல்வதால் தாரக என்றும் பெயர் உண்டாயிற்று. விருஷ்டிபதி என்ற கிரணம் சகல லோகங்களையும் ஜீவித்திருக்கும்படி செய்கிறது. மூன்று லோகங்களும் சூரியனையே ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றன. தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் அவரிடமிருந்தே உண்டானார்கள். அவரே சகல ஜீவன்களிலும் ஆத்மாவாகப் பிரகாசிக்கிறார். சகல லோகங்களுக்கும் அவரே ஈசன். தேவதேவனாகவும் பிரஜாபதியாகவும் விளங்கும் அவரைவிடச் சிறந்த தேவன் மூவுலகத்திலும் இல்லை. அக்கினியில் ஹோமம் செய்யப்படும் பொருள் ஆதித்தியனையே அடைகிறது. அவரிடமிருந்து மழை உண்டாகிறது. மழையினால் அன்னம் விருத்தியாகிறது. அன்னத்தால் பிரஜைகள் ஜீவிக்கிறார்கள். சூரியனிடமிருந்தே இவ்வுலகம் உண்டாகி அவரிடமே ஒடுங்குகிறது. தியானம் செய்பவர்களிடம் தியானமாகவும், முக்தி அடைந்தவர்களிடம் முக்தியாகவும் சூரியன் விளங்குகிறார். க்ஷணம், முகூர்த்தம், பகல், இரவு, பக்ஷம், மாசம், ருது, வருஷம் என்ற காலப் பிரமாணங்கள் எல்லாம் அவரிடமிருந்தே உண்டாகின்றன. காலத்துக்கு சூரியனே காரணமாக இருக்கிறார். அந்தக் காலம் இல்லாவிடில் அக்கினி ஹோத்திரம் இல்லை, யாக யக்ஞங்கள் இல்லை. காலப் பாகுபாடிகளினால் செடி கொடிகள் பயிர் பச்சைகள் வளர்கின்றன. அந்தப் பாகுபாடுகள் இல்லாவிடில் பயிர்கள் விளையாது. பயிர் பச்சைகள் இல்லையேல் உலகில் வியவகாரம் ஏது? பூமியில் உள்ளோரும் விண்ணிலே உள்ளோரும் சூரியனில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது. பூமியில் உள்ள நீர் நிலைகளில் இருக்கும் நீரை சூரியன் தம் கிரணங்களால் கிரகித்து மறுபடியும் பன்மடங்கு மழையாகப் பொழியச் செய்கிறார். மழை இல்லையேல் சூரியனுக்குப் பிரகாசம் இல்லை. நீரினால்தான் சூரியன் எல்லாக் காரியங்களையும் நடத்துகிறார்.

ஒவ்வொரு ருதுவிலும் சூரியன் ஒருவித வர்ணத்தோடு காட்சி அளிக்கிறார். வசந்த ருதுவில் அவர் பொன் வர்ணமாகப் பிரகாசிக்கிறார். கிரிஷ்ம ருதுவில் அவர் சம்பக புஷ்பத்தின் நிறம் கொண்டு விளங்குகிறார். வர்ஷ ருதுவில் வெண்மையாகக் காட்சி தரும் அவர் சரத் ருதுவில் பாண்டு வர்ணமாக இருக்கிறார். ஹேமந்த ருதுவில் அவர் நிறம் தாம்பிர வர்ணம் ஆகும். சிவப்பு வர்ணத்தோடு அவர் சிசிர ருதுவில் ஒளிவீசுகிறார். இவ்விதம் பலவித வண்ணங்களில் பிரகாசித்துக் கொண்டு அவர் உலகத்துக்கு நன்மை புரிந்து வருகிறார். சூரியனுக்குச் சாமான்னியமாகப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு. ஆதித்தியன், ஸவிதா, சூரியன், மிஹிரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திர பானு, திவாகரன், ரவி என்பன. பன்னிரண்டும் சாமன்னிய நாமங்கள். விஷ்ணு, தாதா, பகன், பூஷா, மித்திரன், இந்திரன், வருணன், யமன், விவஸ்வான், அம்சுமான், த்வஷ்டா, பர்ஜன்யன் என்ற பன்னிரண்டும் விசேஷமான நாமங்கள் ஆகும். இந்தப் பெயர்களில் அவர் பன்னிரண்டு மாதங்களிலும் விளங்கி மூவுலகுக்கும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் உண்டு பண்ணுகிறார். பன்னிரு வடிவங்களிலும் விளங்கும் சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒருவராக இருந்து உலகிலே உதயத்தையும் அஸ்தமனத்தையும் உண்டு பண்ணுகிறார். பன்னிரு வடிவங்களிலும் விளங்கும் சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒருவராக இருந்து உலகிலே உதயத்தையும் அஸ்தமனத்தையும் உண்டு பண்ணுகிறார்.

சித்திரை மாதத்திலே விஷ்ணு என்பவர் பிரகாசிக்கிறார். வைகாசி மாதத்தில் அர்யமா என்பவர் ஒளி தருகின்றார். ஆனி மாதத்தில் விவஸ்வான் என்பவர் ஆகாய வீதியிலே பிரகாசத்தோடு பவனி வருகிறார். அம்சுமான் ஆடி மாதத்திலே பிரகாசிக்கும் தம்முடைய கிரணங்களால் மூவுலகங்களையும் ரக்ஷிக்கிறார். ஆவணியில் சூரியனாகப் பிரகாசிப்பவர் பர்ஜன்யன் என்பவர். வருணன் புரட்டாசியில் உலகங்களுக்கு நன்மை செய்கிறார். ஐப்பசியில் இந்திரனும், கார்த்திகையில் தாதாவும் சூரியனாகப் பிரகாசிக்கின்றனர். மார்கழி மாதத்தில் மித்திரனும், தை மாதத்தில் பூஷாவும் சகல லோகங்களுக்கும் தேவையான பிரகாசத்தையும், உஷ்ணத்தையும் தருகின்றனர். பகன் என்பவர் மாசி மாதத்தில் லோகங்களுக்கு ÷க்ஷமத்தைக் கொடுத்துப் பிரகாசிக்கிறார். த்வஷ்டா என்பவர் பங்குனி மாதத்தில் பிரகாசிக்கிறார். விஷ்ணு ஆயிரம் கிரணங்களோடு பிரகாசிக்கிறார். அர்யமா ஆயிரத்து முன்னூறு கிரணங்களால் சகல லோகங்களையும் பிரகாசிக்கச் செய்கிறார். விவஸ்வான் தம்முடைய கிரணங்கள் ஆயிரத்து நானூறால் ஜீவ ராசிகளுக்கு நன்மை புரிந்து வருகிறார். அம்சுமான் ஆயிரத்து ஐநூறு கிரணங்களோடு விளங்குகிறார். பர்ஜன்யன் ஆயிரத்து நானூறு கிரணங்களும், வருணன் ஆயிரத்து முன்னூறு கிரணங்களும் கொண்டவர்களாய் வானிலே சஞ்சரித்து உலகிலே ஒளியும் வெப்பமும் உண்டுபண்ணுகிறார்கள். இந்திரனுக்கு ஆயிரத்து இருநூறு கிரணங்கள் அமைந்துள்ளன. தாதா ஆயிரத்து நூறு கிரணங்களும் மித்திரன் ஆயிரத்து ஐநூறு கிரணங்களும் பெற்று அனைவராலும் வணங்கப்படுகிறார்கள். பூஷா ஆயிரம் கிரணங்களோடு ஒளி வீசுகிறார். புதன் ஆயிரத்து ஐநூறு கிரணங்களால் அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார். த்வஷ்டா ஆயிரத்து நூறு கிரணங்களை உடையவர். இந்தவாறாக அந்தந்த ருதுக்களில் சூரியனுடைய கிரணங்கள் லோகங்களுடைய ÷க்ஷமத்துக்காகக் குறைந்தும், அதிகப்பட்டும் வருகின்றன. உத்தராயணத்தில் சூரியனுடைய கிரணங்கள் அதிகமாகின்றன. தக்ஷிணாயணத்தில் அவை குறைகின்றன. பன்னிரண்டு மாதங்களிலும் பவனி வரும் சூரியனையும், அவருடைய கிரணங்களையும் பற்றிக் கூறிய நாரதர், சாம்பனுக்கு அடுத்து அந்தச் சூரியனுக்கு விசேஷ நாமங்கள் ஏற்பட்ட காரணத்தை விவரிக்கலானார். பூமியிலிருந்து நீரைக் கிரகிப்பதாலும், தேஜஸ்ஸை அளிப்பதாலும், அதிதி தேவியின் புத்திரனாக அவதரித்ததாலும் சூரியனுக்கு ஆதித்தியன் என்ற பெயர் உண்டாயிற்று.

சகல லோகங்களிலும் பிரகாசத்தைப் பெருக்குவதாலும், அனைவரையும் ரக்ஷிப்பதாலும் அவருக்கு ஸவிதா என்ற பெயர் உண்டாயிற்று. நாள்தோறும் உதயமாவதாலும் நிலைத்து நின்று அண்ட சராசரங்களையும் ரக்ஷிப்பதாலும் அவருக்கு சூரியன் என்ற பெயர் தோன்றியது. தம்முடைய கிரணங்களால் அவர் எல்லோரையும் தூண்டி உற்சாகப்படுத்துவதால் அவருக்குப் பானு என்ற நாமம் வழங்கலாயிற்று. அனேக விசித்திரமான வர்ணங்களை உடைய கிரணங்களைக் கொண்டிருப்பதால் அவர் சித்திரபானு என்ற பெயரை அடைந்தார். மிகவும் பிரகாசத்தைக் கொடுக்கும் கிரணங்களைப் பெற்றிருப்பதால் சூரியனுக்குப் பாஸ்கரன் என்ற பெயர் தோன்றியது. மூவுலகங்களிலும் அவர் சஞ்சாரம் செய்து பகலைத் தோற்றுவிப்பதால் திவாகரன் என்ற பெயரை சூரியன் அடைந்தார். தேவர்கள் பக்தியுடன் சூரியனை அர்ச்சித்து வழிபடுகின்றனர். அதன் காரணமாக அவருக்கு அர்க்கன் என்ற பெயர் உண்டாயிற்று. அதிதி தேவியிடமிருந்து உண்டான அண்டம் இரண்டாகப் பிளந்தபோது அதன் காரணமாக சூரியன் சிரமத்தை அடைந்தார். அப்போது கச்யபர் தம் புத்திரனாகிய அவரைப் பார்த்துத் துன்பப்படாதே என்று கூறி ஆறுதலை அளித்தார். அதனால் சூரியனுக்கு மார்த்தாண்டன் என்ற பெயர் நிலைத்தது. உலகிலே தம்மைக் குறித்து வேண்டுவோருக்கு அவர்கள் வேண்டுவதைத் தருவதாலும், இந்த உலகத்தையே அவர் தரிப்பதாலும், சூரியனுக்குத் தாதா என்ற பெயர் வழங்கலாயிற்று. மிகவும் விரைந்து செல்வதில் சூரியனுக்கு ஈடு வேறு யாரும் இல்லை. அதன் காரணமாகவே அவருக்கு அர்யமா என்ற பெயர் ஏற்பட்டது. சினேகத்தோடு அனைவரையும் அவர் ரக்ஷித்து வருவதால் சூரியனுக்கு மித்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. தம்மை ஆசிரயிப்பவர் கேட்கும் வரங்களையெல்லாம் மனமுவந்து அளிப்பதால் அவருக்கு வருணன் என்ற பெயர் உண்டாயிற்று. சிறந்த செல்வங்களைக் கொண்டிருப்பதால் இந்திரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டாயிற்று.

சகல லோகங்களையும் படைக்கும் சக்தி வாய்ந்தவராய் அவர் இருப்பதால் சக்ரன் என்று அழைக்கப்படுகிறார். எல்லா-தேவர்களுடைய உள்ளங்களிலும் அவர் வசிப்பவர். ஆகவே அவருக்கு விவஸ்வான் என்ற பெயர் அமைந்தது. மேகத்தின் மூலம் கர்ஜிப்பவராதலால் அவர் பர்ஜன்யன் என்ற பெயரோடு விளங்குகிறார். மூவுலகங்களையும் போஷிப்பவர் சூரியனே. ஆகவே பூஷா என்ற பெயர் அவருக்கு உண்டாயிற்று. மிகுந்த பிரியத்தோடு மூவுலகங்களிலும் அவர் வியாபித்திருப்பவர். அதனால் அம்சுமான் என்று அழைக்கப்படுகிறார். சகல தேவர்களாலும் அவர் பூஜிக்கப்படுவதால் பகன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. எல்லோரையும் அவர் சந்தோஷப்படுத்துகிறார். அதன் காரணமாக துவஷ்டர் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது. தம்முடைய கிரணங்களினால் அவர் சண்டசராசரம் முழுவதும் வியாபித்து அனைவரையும் காத்து ரக்ஷிப்பதால் சூரியன் விஷ்ணு என்ற பெயரால் அழைக்கப்படலானார். அண்டம் முழுவதும் வியாபித்து அதன் சரீரமாக அவர் விளங்குவதாலும், எல்லாத் தேவர்களிலும் பெரியவராக அவர் இருப்பதாலும் பிரமன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டாயிற்று. மகான்களாலும் தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவராக அவர் இருப்பதால் மகாதேவர் என்ற நாமத்தைக் கொண்டார். மிகவும் உக்கிரமான சக்தி உடையவராக இருப்பதால் உத்ரருத்திரர் என்ற பெயர் அவருக்கு வழங்கலாயிற்று.

சிருஷ்டி, ஸ்திதி, லயம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருந்து அக்காரியங்களைத் தாமே நடத்துவதால் அவருக்கு த்ரைகாலர் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விதமாக சூரியனுடைய பெயர்களின் பொருளை நன்கு உணர்ந்து அவரை வழிபட்டு வந்தால் விரைவிலேயே அவருடைய அனுக்கிரகத்தால் விரும்பிய பலனை அடையலாம். அவருடைய பரிபூரண அனுக்கிரகம் கிட்டும். சூரியன் ஒருவரே. அவரே பரமாத்மா என அழைக்கப்படுபவர். பரமாத்மாவால் சூரியன் படைக்கப்பட்டவர் என்று விஷயம் அறியாதவர்கள் சொல்லுகின்றனர். சிலர் சிவனை சிருஷ்டி கர்த்தாவாகக் கூறுகின்றனர். மற்றும் சிலர் விஷ்ணுவே சிருஷ்டி கர்த்தா என்று சொல்லுகின்றனர். இன்னும் சிலர் பிரமனை சிருஷ்டி கர்த்தாவாக இயம்புகின்றனர். வேறுசிலரோ சக்தியை சிருஷ்டி கர்த்தாவாகக் கொள்கின்றனர். ஆனால் சூரியன் அவரே சிருஷ்டி, ஸ்திதி, லயம் எனப்பட்ட மூன்று தொழில்களுக்கும் காரணமானவர். அவர் ஸ்வயம்புவானவர்; தாமாகவே தோன்றியவர். அவரை வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள். ஸ்படிகமணி இருக்கிறது. அதன் அருகே எந்த வர்ணமுள்ள பொருள் இருக்குமோ அந்த வர்ணத்தை அந்த மணி கொண்டிருக்கும். மணி ஒன்றுதான். ஆனால் பல வர்ணங்களிலும் வேறு வேறு மணியாகத் தோன்றும். அதைப் போலவே ஒருவரே ஆன சூரியன் தம்முடைய குணங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களுடன் விளங்குகிறார். வானிலே சஞ்சரிக்கும் மேகம் ஒன்றுதான். அது நீர் நிறைந்ததாக கருப்பாக இருக்கும்போது கருமேகம் என்று அழைக்கிறோம். வெள்ளை நிறத்தோடு காணப்படும்போது அதை வெள்ளை மேகம் என்று கூறுகிறோம். அம்மேகத்திலிருந்து, பூமியிலே பொழியப்படும் நீரும் ஒன்றுதான். பூமியிலிருந்து நீர் மண்ணோடு கலந்து அதன் நிறத்தைக் கொண்டு ஓடும்போது கருமையான நீர் என்றும், சிவப்பான நீர் என்றும் பல பெயர்களில் அழைக்கிறோம். பொருள்களுடன் கலந்தபோது அதன் ருசியும் பலவிதமாகக் காணப்படுகிறது. ஆனால் நீர் ஒன்றுதான். சூரியனும் அதைப் போலவேதான். ஒருவராகவே இருந்தும் பலவித காரியங்களுக்குக் காரணபூதராக விளங்குவதால் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

உலகிலே வீசும் காற்று ஒன்றுதான். ஆனால் அது பல பொருள்களுடன் கலக்கும்போது நல்ல வாசனை உள்ளதாகவும், துர்க்கந்தம் உள்ளதாகவும் ஆகிறது. வாசனையுள்ள காற்று வேறு, துர்க்கந்தம் வீசும் காற்று வேறு என்பதல்ல. சூரியனும் அவ்விதமே விளங்குகின்றார். அக்கினி ஒன்றே. ஆனால் அது கார்ஹபத்தியும், ஆஹம நீயம், தக்ஷிணாக்கினி என மூன்று பெயர்களை அந்தந்த இடத்துக்கு ஏற்ப அடைகிறது. இவ்விதமாகவே சூரியனையும் அவர் புரியும் பல்வேறு செயல்களுக்காகப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். சூரியனிடம் பக்தி கொண்டு வழிபட்டால் சகல தேவர்களிடம் பக்தி கொண்டு வழிபட்டதாக ஆகும். அவரே பிரமன், அவரே விஷ்ணு, அவரே ருத்திரன், அவரே வேதம் யக்ஞம்; சொர்க்கம் அனைத்துமாக இருக்கிறார். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவரே உள்ளும் புறமும் வியாபித்திருக்கிறார். சூரியனே ஜீவராசிகளுக்கு அன்னவடிவாகவும், நீராகவும் இருந்து அவர்களை ரக்ஷிக்கிறார். அவரே காலமாகவும், ஆகாயமாகவும், வாயுவாகவும், அக்கினியாகவும் விளங்குகிறார். நக்ஷத்திரங்களும் சூரியனை ஆதாரமாகக் கொண்டவையே. இவ்வாறு சூரியனுடைய சொரூபத்தை அறிவுடையோர் நன்கு உணர்ந்து அவரை வழிபட வேண்டும். அவருடைய திவ்விய நாமத்தின் பொருளை உணர்ந்து அவரைப் பூஜிப்பவர் அவரிடம் லயிப்பர். சூரியனுடைய பல நாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரைப் பக்தியுடன் வழிபட்டால் சகலமான ரோகங்களும் நீங்கிவிடும். அவனைப் பற்றிய பாபங்களும் அகன்று விடும். பாபிகளுக்கு சூரியனிடம் பக்தி உண்டாகாது. சூரியனுடைய சொரூபத்தை விவரித்த நாரதர் சாம்பனைப் பார்த்து, கிருஷ்ண புத்திரா, நீ பக்தியோடு சூரியனை ஆராதித்து வா. உன்னைப் பிடித்த இந்தச் சாபம் அவருடைய அனுக்கிரகத்தால் விரைவிலேயே நீங்கிவிடும் என்றார். சாம்பன் நாரத முனிவரை நமஸ்கரித்து, மீண்டும் கேட்டான். முனிசிரேஷ்டரே, பொன்னிற கிரணங்களை உடைய பாஸ்கரனுடைய சொரூபத்தைக் கேட்க ஆச்சரியமாக இருக்கின்றது. அவரிடம் என்னையும் அறியாத ஒருவித பக்தி ஏற்படுகின்றது. அப்பெருமானுக்குப் பத்தினிகளாக விளங்கும் ராக்ஞீ நிக்ஷúபா ஆகிய இருவரைப் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன், சொல்ல வேண்டும். நாரதரும் சாம்பன் விருப்பத்தை நிறைவேற்ற அவ்விருவருடைய சரித்திரங்களைக் கூறலானார்.

7. சாயா தேவியிடம் எமன் பெற்ற சாபம்!

ராக்ஞீ என்பவளுக்கு த்யௌ என்ற பெயரும் உண்டு. நிக்ஷúபா என்பவள் பிருதிவீ என்றும் அழைக்கப்பட்டாள். தைமாதம் கிருஷ்ணபக்ஷத்து சப்தமி அன்று சூரியன் த்யௌ எனப்படும் ரகக்ஞீயுடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார். மாசி மாதம் கிருஷ்ண பக்ஷத்து சப்தமி அன்று அவர் பிருதிவீயான நிக்ஷúபாவோடு சேர்த்துப் பூஜிக்கப்படுகிறார். த்யென சூரியனிடமிருந்து மழையைக் கர்ப்பமாகப் பெறுகிறாள். பிருதிவீ பயிரை அவரிடமிருந்து கர்ப்பமாகப் பெறுகிறாள். பூமியில் பயிர்கள் வளர்வதால் பிராமணர்கள் சந்தோஷம் அடைந்து பிதுருக்களையும், தேவர்களையும் பூஜிக்கிறார்கள். ஒளஷதிகளிலும் ஜலத்திலும் மனிதர்களுக்கு வேண்டிய சத்தைத் தந்து அவர்கள் மூலம் பிதுருக்களையும் தேவர்களையும் போஷிப்பதால் பூமிக்கு நிக்ஷúபா என்ற பெயரும் உண்டு. கிரணங்களோடு தக தக வென்று பிரகாசிக்கும் சூரியனுக்கு ராக்ஞீ, த்யௌ என்ற பெயரில் ஆகாசமாகவும் நிக்ஷúபா பிருதிவீ என்ற பெயரில் பூமியாகவும் இரு பத்தினிகளாக விளங்குகிறார்கள். ராக்ஞீ மற்றொரு ரூபமெடுத்து தேவர் முதலான பிரிவுகளைத் தோற்று வித்தாள். பிரமதேவனுடைய புத்திரர் மரீசி என்பவருக்குக் காசியபர் புத்திரராக உண்டானார். காசியபருக்கு ஹிரண்யகசிபு பிறந்தான். அவனுக்குப் பிள்ளையாகப் பிரகலாதன் பிறந்தான். பிரகலாதனுடைய மகன் விரோசனன். வீரோசனனுக்கு ஸமுக்ஞா என்பவள் சகோதரி ஆவாள்.

மரீசி முனிவருக்கு ஸுரூபா என்ற பெண் ஒருத்தி உண்டு. அவள் அங்கிரஸ் என்ற முனிவரை மணந்தாள். அவர்களுக்குப் பிரகஸ்பதி என்ற தேவகுரு பிறந்தார். பிரகஸ்பதிக்குப் புவனீ என்ற சகோதரி இருந்தாள். அவள் அஷ்டவசுக்கள் எனப்படுவோரில் எட்டாவது வசுவான பிரபாசனைக் கணவனாக அடைந்தாள். அவர்களுக்குத் தேவதச்சனாக விளங்கும் விசுவகர்மா புத்திரனாகப் பிறந்தார். சில்ப சாஸ்திரத்தில் விசுவகர்மா மிகவும் சிறந்து விளங்கினார். அந்தத் துறையில் அவருக்குத் தெரியாதது என்பதே இல்லை. அவருக்குத் த்வஷ்டா என்ற பெயரும் உண்டு. அவருடைய பெண் ஸரேணு என்பவள். அவளே ராக்ஞீ என்றும் ஸமுக்ஞா என்றும் பிரபாஸா என்றும் பல பெயர்களில் சூரீயனுக்கு மனைவியாக விளங்கினாள். அவளுடைய நிழலே சாயாதேவி எனப்படுபவள். சமுக்ஞாவினால் அவள் உண்டாக்கப்பட்டவள். நிக்ஷúபா என்றும் பிருதிவீ என்றும் பல பெயர்களில் சாயா, சூரியனுக்கு மற்றொரு பத்தினியாக இருக்கிறாள். ஸமுக்ஞா மிகுந்த அழகுடையவளாகவும், குணங்கள் நிறைந்தவளாகவும் விளங்கினாள். விசுவகர்மா அவளை சூரியனுக்கு மணம் செய்து வைத்தார். அவள் கணவனிடம் மிகுந்த அன்பு கொண்டவளாய் அவரோடு இருந்து வந்தாள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். வைவஸ்வதமனு என்று பிரசித்தி பெற்ற சிராத்ததேவன் முதலில் பிறந்தான். அடுத்து யமன் என்ற பிள்ளையும் யமுனை என்ற பெண்ணும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

நாளுக்கு நாள் சூரியனுடைய கோளமும் வெப்பமும் அதிகரித்து வந்தன. ஸமுக்ஞாவினால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டாள். அவள் தந்தையிடம் தன் கஷ்டத்தை எடுத்துக் கூறி, தான் பிறந்த வீட்டுக்கே வந்து விடுவதாகத் தெரிவித்தாள். விசுவகர்மா அவளுக்குப் பலவாறு ஆறுதல்கள் கூறினார். அவள் கணவன் வீட்டில் இருப்பதுதான் முறை என்றும், கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் கூறினார். அப்போதைக்கு ஸமுக்ஞா தந்தையின் வார்த்தைகளுக்கு இணங்கினாலும் அவளால் சூரியனுடைய வெப்பத்தைப் பொறுக்க முடியவில்லை. அவரை விட்டுத் தந்தை வீட்டுக்குச் சென்று விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அதே சமயம் தான் அங்கு இல்லாத விஷயம் கணவனுக்குத் தெரியாதிருக்க வேண்டும் என்றும் அவள் விரும்பினாள். ஆகவே தன்னைப் போலவே தோன்றும் வகையில் தன் நிழலைப் பெண்ணாக வருமாறு செய்தாள். எனக்குச் சமமான அழகு பொருந்திய பெண்ணாக வா என்று ஸமுக்ஞா அழைத்ததும், அவளுடைய நிழல் ஒரு பெண்ணாகி அவள் முன்பு தோன்றியது. அவளுக்கும் ஸமுக்ஞாவுக்கும் எளிதில் வித்தியாசத்தை உணர முடியாத வகையில் அவள் ரூபாலாவண் யத்தோடு விளங்கினாள். ஸமுக்ஞையை நமஸ்கரித்துக் கேட்டாள் அவள். அம்மா, எதற்காக என்னை அழைத்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? தங்களுக்காக எந்தக் காரியமும் செய்ய நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அந்தப் பெண் கேட்டபோது ஸமுக்ஞா அவளுக்கு சாயாதேவி என்ற பெயரை அளித்துச் சொன்னாள்.

சகோதரி, நான் என் தந்தையின் கிருகத்துக்குச் செல்ல விரும்புகிறேன். என் தந்தையிடமிருந்து அழைப்பு வராவிட்டாலும் நான் அங்குச் சென்று சிறிது காலம் தங்க ஆசைப்படுகின்றேன். நான் இங்கில்லாத விஷயம் என் கணவருக்குத் தெரிவதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் இல்லாத காலத்தில் நீ இங்கிருந்து வரவேண்டும். என்னைப் போலவே நீ இருந்து என் கணவனை உபசரித்து வருவதோடு என் குழந்தைகளையும் உன் குழந்தையாகவே பாவித்து நடத்தி வரவேண்டும். நான் இங்கு இல்லை என்ற குறை சிறிதும் தெரியக்கூடாது. சாயாதேவி அந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவ்விதமே நடப்பதாகத் தெரிவித்தாள். அதன் பின்னர் ஸமுக்ஞா அவளைத் தன் கிருகத்தில் விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாகத் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். ஸமுக்ஞா விசுவகர்மாவின் வீட்டுக்குச் சென்றிருப்பதையும், அவள் இடத்தில் சாயாதேவி இருந்து வருவதையும் சூரியன் உள்பட யாருமே உணரவில்லை. அந்த அளவுக்குச் சாயாதேவி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து வந்தாள். தந்தை அழைக்காமல் இருக்கையிலேயே அவர் கிருகத்துக்குத் தனியாக வந்ததால் ஸமுக்ஞாவால் கவலையற்று மகிழ்ச்சியோடு அங்கே இருக்க முடியவில்லை. மனத்திலே குறுகுறு வென்று மனச்சாட்சி உறுத்திக் கொண்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் அவள் தந்தையின் கிருகத்திலேயே தங்கி விட்டாள். அவள் தெரிவிக்கா விட்டாலும் பெண்ணுடைய நிலைமையை விசுவகர்மா நன்கு புரிந்து கொண்டு விட்டான்.

குழந்தாய், நீ செய்தது சரியல்ல. நியாயமான காரியமும் அல்ல. பெண்ணுக்கு இருப்பிடம் கணவனுடைய கிருகமே. ஆகவே நீ அவ்விடம் செல்வதுதான் நேர்மையானதாகும் என்று அடிக்கடி அவளுக்குச் சொல்லி வந்தார். தந்தையின் வார்த்தைகளை ஏற்கும் நிலையில் ஸமுக்ஞா இல்லை. கணவனுடைய வெப்பத்தைத் தாங்கமாட்டாது அங்கிருந்து வந்த அவள் திரும்பவும் அவ்விடம் செல்ல விரும்பவில்லை. ஆகவே ஒரு நாள் தந்தையின் தொந்தரவு தாங்க முடியாது. அவள் வீட்டை விட்டுப் புறப்பட்டு உத்தர குரு÷க்ஷத்திரத்தை அடைந்தாள். பெண் குதிரை உருவம் எடுத்து அங்கே திரிந்து கொண்டிருக்கலானாள். சாயாதேவியை சூரியன் கொஞ்சமும் சந்தேகிக்கவில்லை. அவளை ஸமுக்ஞாவாகவே எண்ணிக் கொண்டு பரிவுடன் நடந்து வந்தார். அவர்களுக்கு ச்ருதச்ரவஸ், ச்ருதகர்மா என்ற இரு புத்திரர்களும், தபதீ என்ற பெண்ணும் பிறந்தார்கள். தனக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை சாயாதேவி ஸமுக்ஞாவுக்குக் கொடுத்த வாக்குப்படி எள்ளளவும் பிறழாது நடந்து வந்தாள். சகோதரியின் மக்களைத் தனக்குப் பிறந்தவர்களாகவே எண்ணி மிக்க அன்புடன் நடத்தி வந்தாள். ஆனால், ச்ருதச்வரஸும், ச்ருதகர்மாவும், தபதியும் பிறந்த பின்னர் அவளால் அவ்விதம் நடந்து கொள்ள முடியவில்லை. சிராத்ததேவனும், யமனும், யமுனையும் தனக்குப் பிறந்தவர்கள் அல்ல என்ற எண்ணம் அவளிடம் எப்போதும் மேலோங்கியிருந்தது. ஆகவே அவர்களிடம் அவள் செலுத்தி வந்த அன்பிலே மாற்றுக் குறையலாயிற்று. தான் பெற்ற குழந்தைகளிடமே அவள் அதிக அன்பு பாராட்டி வரலானாள்.

அவளிடம் ஏற்பட்ட இந்த மாறுதலை சிராத்ததேவன் அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் யமனால் அதைப் பொறுக்க முடியவில்லை. தங்களுடைய தாய் ஏன் தங்கள் மூவரை மட்டும் அவ்விதம் வேற்று மனிதர்களாகக் கருதி நடத்த வேண்டும் என்று பொறுமினான். நாளாக ஆக அவனுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் அவன் தன் பொறுமையின் எல்லையை கடந்து விட்டான். சாயாதேவியிடம் பொறுக்க முடியாத கோபம் கொண்டு சீறினான். உன்னிடம் அன்பைப் பெற முடியாத அளவுக்கு நாங்கள் மூவர் மட்டும் என்ன பாவம் செய்தோம்? என்று கோபித்தவாறு அவளை உதைக்கத் தன் காலைத் தூக்கிக் காட்டினான். யமன் சிறுவனாக இருந்தாலும் என்ன செய்வான்? நடக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டிருப்பது நடந்தாக வேண்டாமா? தன்னை உதைப்பதாகக் கூறி யமன் காலைத் தூக்கிக் காட்டியது கண்டு சாயாதேவி சினம் கொண்டாள். ஸமுக்ஞையிடம் தான் கொடுத்திருந்த வாக்குறுதியையும் மறந்தாள். தாயின் ஸ்தானத்திலிருக்கும் தன்னைச் சிறுவன் யமன் அவமதிப்பதா எனச் சீறினாள். அடே, என்னை உதைப்பதற்காக எந்தக் காலை தூக்கினாயோ, அந்தக் கால் அழுகி பூமியில் விழட்டும் என்று சபித்தாள். தாய் இட்ட சாபத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான் யமன். அவன் உள்ளத்தில் ஏதோ ஒருவித சந்தேகம் எழுந்தது. பெற்ற தாயா மகனுக்குச் சாபம் அளித்தாள்? சகோதரன், சிராத்ததேவனையும் அழைத்துக் கொண்டு தந்தையிடம் வந்தான் யமன்.

அப்பா, வீட்டிலிருப்பது எங்கள் தாய் அல்ல. என்னிடமும், யமுனையிடமும் சிராத்ததேவனிடமும் அவள் பக்ஷபாதத்தோடு நடந்து கொள்கிறாள். மற்ற மூவரிடமே அவள் காட்டும் பரிவு எங்கள் மூவர் விஷயத்திலும் காணப்படுவதில்லை. இவ்விதம் பக்ஷ பாதத்தோடு அவள் நடந்து கொள்வதை நான் எதிர்த்துக் காலைத் தூக்கினேன், உதைப்பதற்காக. என் கால் அழுகிப் பூமியில் விழட்டும் என்று சபித்துவிட்டாள். அந்தச் சாபம் என்னைப் பற்றாதிருக்கத் தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று கோரினான் யமன். யமன் தருமத்தின் விஷயத்தில் மிகவும் அக்கரையோடு நடந்து கொள்பவன். அதற்குப் புறம்பாக அவன் ஒருபோதும் நடப்பதில்லை. அதன் காரணமாகவே அவனுக்குத் தர்மராஜன் என்ற பெயரும் வழங்கலாயிற்று. தர்மாத்மாவான புத்திரன் யமன் கூறியதைக் கேட்டு சூரியன் திடுக்கிட்டார். குமாரனை அருகில் அழைத்து, அன்புடன் அவன் முதுகைத் தடவியவாறு, புத்திரா, தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் உண்டாகிறதென்றால் இதில் ஏதோ விசேஷமிருக்க வேண்டும். அதை நான் கவனிக்கிறேன். எல்லாச் சாபங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால் மாதா சாபத்துக்குப் பரிகாரம் என்பது கிடையாது. அதை அனுபவித்தே தீர வேண்டும். அந்த சாபத்தை போக்கிகொள்ளச் சக்தி இருந்தாலும் அந்தச் சாபத்தை வீணாக்கக் கூடாது. சாபமும் நிறைவேற வேண்டும், அதே சமயம் உன் கோரிக்கைகையும் நிறைவேறச் செய்ய வேண்டும். ஆகவே நான் ஒர் உபாயம் கூறுகிறேன். உன் கால் அழுகி பூமியில் விழ வேண்டாம். அதற்குப் பதிலாக உன் கால்களிலுள்ள மாமிசத்தை எடுத்துக் கொண்டு கிருமிகள் பூமியில் விழட்டும் என்றார்.

அவ்விதமே யமனுடைய கால் அழுகி அதிலிருந்த மாமிசத்தைக் கிரகித்துக் கொண்டு கிருமிகள் பூமியில் விழுந்து இறந்தன. சாயையின் சாபம் நிறைவேறியது. யமன் தந்தையிடம் விடைபெற்றுச் சென்றான். யமன் சென்ற பிறகு சூரியன் மிகுந்த கோபத்தோடு தம் கிருகத்துக்கு வந்தார். வழக்கம்போல சாயை அவரை மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள். கோபத்தால் கண்கள் சிவக்க அவர் அவளைப் பார்த்து, பிரியே, குழந்தைகளிடம் நீ பக்ஷபாதத்தோடு நடந்து கொண்டதன் காரணமென்ன? என்று கேட்டார். சாயாதேவி என்ன சொல்வாள்? தலை குனிந்தபடி மவுனமாக நின்றாள். அது சூரியனுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. ஏன் மவுனம் சாதிக்கிறாய்? நான் கேட்பதற்குக் காரணத்தைச் சொல்லப் போகிறாயா? இல்லையெனில் உன்னைச் சபிக்கட்டுமா? என்றார். சாயாதேவி நடு நடுங்கி அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பிரபோ, என்னைச் சபிக்காதீர்கள். நடந்ததைச் சொல்லி விடுகிறேன் என்று நெஞ்சம் தழுதழுக்கப் பிரார்த்தித்தாள். ஸமுக்ஞாவால் தான் உண்டாக்கப்பட்டதையும் அவள் இடத்தில் தன்னை விட்டுவிட்டு அவள் சென்றதையும் விவரமாகக் கூறினாள் சாயா. பிரபோ, தான் பெற்ற குழந்தைகளிடம் அதிகப் பரிவு காட்டுவது இயற்கைதானே. என் விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. என்னை மன்னித்து விடுங்கள். யமன் என்னை உதைப்பதாகக் காலைத் தூக்கியபோது கோபம் கொண்டு அவனைச் சபித்து விட்டேன் என்றாள். சூரியனுடைய கோபம் ஸமுக்ஞையின் மீது திரும்பியது. அவளைத் தேடிக் கொண்டு மாமனாருடைய கிருகத்துக்கு வந்தார். கோபத்தால் தகதக வென்று ஜொலித்தபடி வந்த சூரியனைக் கண்டதும் விசுவகர்மாவுக்கு விஷயம் விளங்கி விட்டது. அவரைச் சாந்தம் கொள்ளுமாறு வேண்டியபடி வரவேற்றார். ஸமுக்ஞை எங்கே? என்று கோபத்துடன் கேட்டார் சூரியன்.

பாஸ்கரா, கோபத்தை விடுங்கள். ஸமுக்ஞாவைக் குற்றம் சொல்லவும் முடியாது. தங்களுடைய தேஜஸ்ஸின் உக்கிரத்தை அவளால் தாங்க முடியவில்லை. நானும் அவளுக்கு ஆறுதல்கள் பல கூறினேன். ஆனால் தாங்க முடியாத வெப்பத்தை உடைய தங்களிடம் அவளால் வசிக்க முடியவில்லை. அதனால்தான் அவள் தன் நிழலைப் பெண்ணாக்கி அவ்விடம் விட்டுவிட்டு வந்தாள். இப்போது அவள் தங்களைக் குறித்துத்தான் உத்தர குரு÷க்ஷத்திரத்திலே வனத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறாள். சாந்தமான தங்கள் திருவுருவைக் காண வேண்டுமென்பதே அவளுடைய தவத்தின் லட்சியம். தாங்கள் சிந்தித்துப் பார்த்தால், நான் சொல்வதும் அவள் கொண்டிருக்கும் எண்ணமும் சரியானதே என்ற முடிவுக்கு வருவீர்கள். திவாகரா, குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிரணங்களால் உமக்கே துன்பம் உண்டாகவில்லையா? தாங்கள் சம்மதம் தெரிவித்தால் மிகவும் உக்கிரமான உங்களுடைய தேஜஸை நான் சாந்தப்படுத்துகிறேன். சாணைக்கல்லிலே சாணைபிடித்து தேவையற்ற அம்சங்களை விலக்கி விடுகிறேன் என்றான் விசுவகர்மா. சூரியன் சற்று யோசித்தார். ஸமுக்ஞையை அடைய அதுதான் சிறந்த மார்க்கம் என்பது புலப்பட்டது. உக்கிரத்தன்மை குறையாத வரை அவள் அவரிடம் திரும்ப மாட்டாளே. மெல்ல சிரித்தவாறு தம் சம்மதத்தை தெரிவித்தார். விசுவகர்மா அடைந்த ஆனந்தத்துக்கு ஓர் அளவில்லை. சூரியனை அழைத்துக்கொண்டு சாகத்வீபத்துக்குச் சென்றார். அங்கே அவருடைய மண்டலத்தைச் சாணை பிடித்தார். அவருடைய உக்கிரத் தன்மை குறையவே அவர் மேனி முன்னை விட மேலும் அழகாக விளங்கியது. யோக சக்தியால் ஸமுக்ஞா இருக்குமிடத்தை அறிந்தார் சூரியன். பெண் குதிரை உருவம் கொண்டு அவள் மேய்வதை அறிந்த அவர் அப்போதே அவளிருக்குமிடம் செல்ல விரும்பினார். மாமனாரிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். குதிரை ரூபம் கொண்டு மேய்ந்து கொண்டிருந்த ஸமுக்ஞாவின் இருப்பிடத்தை அடைந்த சூரியன் அவளைத் திகைக்க வைக்க விரும்பினார். ஆகவே, தாமும் ஓர் குதிரையாக ரூபம் கொண்டு அவள் அருகில் நெருங்கி அணைத்தார்.

கணவன் வரக் கூடும் என்று ஸமுக்ஞை எதிர்பார்க்கவில்லை. அதனால் யாரோ அன்னிய புருஷன் தன்னை நெருங்கி விட்டான் என்று எண்ணி விட்டாள். ஆகவே அவனிடமிருந்து பெற்ற வீரியத்தைத் தன் கருவிலே தங்க வைக்காமல் மூக்கின் வழியாக வெளிப்படுத்தி விட்டாள். நாசியின் இரு துவாரங்கள் வழியே தள்ளப்பட்ட அது சூரியனுடைய அம்சமாக இரு குழந்தைகளாகத் தோன்றியது. அவர்களே நாஸத்தியர் என்றும் அசுவனி தேவர்கள் என்றும் அழைக்கப்படுபவர். அவர்கள் தேவர்களுக்கு வைத்தியர்களாக ஆனார்கள். சூரியன் தமது சுயரூபத்தை ஸமுக்ஞைக்குக் காட்டினார். அவளும் தன் அசுவரூபத்தை விட்டு மானிட வடிவு கொண்டாள். அவள் அழகு சூரியனைப் பெரிதும் கவர்ந்தது. அவளை அருகில் அழைத்து கட்டியணைத்து மகிழ்ந்தார். அப்போது அவர்களுக்கு ரைவதன் என்ற மகன் உண்டானான். அவள் புறப்பட்டு வந்த பின்னர் நடந்துள்ள விருத்தாந்தங்களை எடுத்துக் கூறிய சூரியன், அவளைத் தம்மோடு வருமாறு அழைத்தார். அவளும் மகிழ்ந்து கணவனுடன் சென்றாள். சிராத்ததேவன், யமன், யமுனை, ச்ருதச்ரவஸ், ச்ருதகர்மா, தீபதி, அசுவினி தேவர்கள் இருவர், ரைவதன் ஆகியோர் சூரியனிடமிருந்து உண்டானவர்கள். மிகுந்த பிரகாசத்தோடு சூரியன் ஜ்வலிப்பதால் அவருக்கு ராஜா என்ற பெயர் உண்டாயிற்று. அவருடைய பத்தினியான ஸமுக்ஞா அரசனுடைய மனைவி என ராக்ஞீ என்ற பெயரோடு அழைக்கப்படலானாள். சாயாதேவி தன் சகோதரி புத்திரரான யமனுடன் கோபமும், கணவனுடன் கோபமும் அடைந்தாலும் கலக்கம் ஏதும் இல்லாதிருந்ததால் அவள் நிக்ஷúபா என்ற பெயரை அடைந்தாள். சிராத்ததேவன் தந்தையின் திருவருளால் எல்லையில்லாத தவமியற்றி மந்வந்தரத்துக்கு மனுவாகும் பேறு பெற்றான். யமன் தருமத்துக்குப் புறம்பாக நடக்காது தென்திசைக்கு அதிபதியாகவும் பிதுருக்களுக்குத் தலைவனாகவும் ஆனான். அவன் சகோதரியான யமுனை நதி ரூபம் கொண்டு யமுனை என்ற பெயருடன் விளங்கலானாள்.

ச்ருதச்ரவஸ் மேரு மலையில் தவம் செய்து வருகிறான். பகவானுடைய அனுக்கிரகத்தால் அவன் ஸாவர்ணி என்ற பெயரை அடைந்து ஸாவர்ணி மன்வந்த்ரத்துக்கு மனுவாக ஆகப்போகிறான். ச்ருதகர்மா சனீச்வரன் என்ற பெயரை அடைந்து நவக்கிரகங்களில் ஒருவனாக விளங்கும் பேறு பெற்றான். தபதீ என்பவள் ஸம்வரணன் என்ற அரசனை மணந்தாள். அவள் பின்னர் விந்திய மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் தப்தி நதியாக மாறினாள். அச்வினி தேவர்கள் இருவரும் தேவர்களுக்கு வைத்தியர்களானார்கள். உலகிலே உள்ள வைத்தியர் அனைவருக்குமே அவர்கள்தான் மார்க்கதரிசிகளாய் விளங்குகிறார்கள். ரைவதனும் பகவானுடைய அருளால் மனுவாகி ரைவதமன் வந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரக்ஷிக்கிறான். சூரியனுடைய சந்ததியை அறிந்தவர்களுடைய சந்ததி விருத்தி ஆகும். அவர்களை எவ்வித ஆபத்தும் அணுகாது. நாதர மகரிஷி சாம்பனுக்குச் சூரியனுடைய சந்ததியை எடுத்துக் கூறியபோது சாம்பன் அவரைப் பணிந்து, மகரிஷே, சூரியனுடைய தேஜஸ்ஸின் வெப்பத்தை விசுவகர்மா குறைத்துவிட்டதாகக் கூறினீர்களே. அதை விவரமாகக் கூறவேண்டும் என்று கேட்டான். நாரதரும் கூறலானார்.

8. சாணைக்கல்லில் ஏறிய சூரியன்

சாயாதேவியிடமிருந்து விவரம் அனைத்தையும் தெரிந்து கொண்ட சூரியன் அப்போதே ஸமுக்ஞாவின் இருப்பிடம் சென்று அவளைத் தம்முடன் அழைத்து வர எண்ணம் கொண்டார். அவ்வமயம் பிரமன் அங்கே வந்தார். உத்தர குருவிலே ஸமுக்ஞா தன் கணவனுடைய சொரூபத்தை சாந்தம் கொண்டதாகப் பார்க்க வேண்டுமென்று தவத்தில் இருந்து வந்தாள். அவள் எண்ணத்தை நிறைவேற்றிய பிரமன் சூரியனைத் தேடி வந்தார். சூரியனை நமஸ்கரித்து அரிய தோத்திரங்களால் துதித்த பிரமன், பாஸ்கரா, தாங்கள் எல்லாத் தேவர்களுக்கும் ஆதிதேவன் அல்லவா. அதனால் ஆதித்தியன் என்ற நாமமும் தங்களுக்கு விளங்கவில்லையா! இது எனக்கு நன்றாகத் தெரியும். தங்கள் மனத்திலிருப்பதை நான் அறிவேன். ஸமுக்ஞாதேவியைக் காண விரும்பிப் புறப்படுகிறீர்கள். தங்கள் சொரூபத்தை அவள் எவ்வாறு காண விரும்புகிறாளோ அந்தவாறே தங்கள் ரூபத்தை விசுவகர்மா சாந்தமுடையதாகச் செய்வார் என்று சொல்லி விட்டு விடை பெற்றுப் புறப்பட்டார். அவர் அங்கிருந்து விசுவகர்மாவிடம் சென்றார். ஸமுக்ஞையைத் தேடிக் கொண்டு விரைவிலேயே சூரியன் அங்கு வரப்போகிறார் என்றும், ஸமுக்ஞையைத் திரும்ப அடையும் மார்க்கமாக அவள் விரும்புவது போலவே சூரியனுடைய வெப்பத்தைக் குறைத்து அவர் சாந்தமானவராகத் தோற்றம் கொள்ள எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்யுமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்.

சூரியனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த விசுவகர்மா அவர் வந்ததும் இன்முகத்தோடு வரவேற்று உபசாரங்கள் செய்தான். ஸமுக்ஞையைப் பற்றி சூரியன் கேட்டார். விசுவகர்மா சூரியனைப் பணிவுடன் நோக்கிப் பின்வருமாறு தெரிவித்தான். மார்த்தாண்டா, தங்கள் பெருமையை நான் தங்களுக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இரண்டொரு வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். மிகுந்த பிரகாசத்தோடு விளங்கும் தங்கள் தேஜஸ் நாளுக்கு நாள் விருத்தியாகி வருகின்றது. அதன் வெப்பத்தைத் தாங்க முடியாததாலேயே ஸமுக்கை தங்களிடமிருந்து புறப்பட்டு வந்தது. அவள் இப்போது உத்தர குருவிலே வனாந்தரத்தில் சாந்தமாக விளங்கும் தங்கள் சொரூபத்தைக் காண வேண்டுமென்று தவம் செய்து வருகின்றாள். அவள் கிடக்கட்டும். ஸஹஸ்ரகிரண சொரூபியே, தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் விருத்தியாகி வரும் தங்கள் தேஜஸ்ஸின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாது மூவுலகங்களும் திணறுகின்றன. லோக ÷க்ஷமார்த்தம் தாங்கள் இணக்கம் தெரிவிப்பீர்களானால் தங்கள் ஜோதிமயமான சொரூபத்தைச் சாணைக் கல்லில் சிறிது சாணைப்பிடித்து உக்கிரத்தைக் குறைக்கச் செய்கிறேன். மலர்ந்த முகத்தோடு சூரியன் இந்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார். விசுவகர்மா அவரை அழைத்துக் கொண்டு சாகத்வீபத்துக்குச் சென்றான். அங்கே அவரைச் சாணைக் கல்லிலே ஏற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய தேஜஸ்ஸின் உக்கிரத்தைச் சாணைபிடித்துக் குறைக்கலானான். இந்த விவரம் சகல லோகங்களிலும் பரவியது. பாஸ்கரனுடைய உக்கரமான தேஜஸ்ஸைக் குறைக்கும் முயற்சியைக் காண தேவர்களும் முனிவர்களும் மற்றும் சித்தர், சாரணர், கந்தருவர், நாகர் முதலானோரும் அங்கே வந்து கூடினர். பிரமனும், ருத்திரனும், விஷ்ணுவும் கூட அந்த மங்களகரமான காட்சியைக் காண வந்து சேர்ந்தனர்.

சாணைக் கல்லிலே சூரியனை ஏற்றி அவர் தேஜஸ்ஸைக் குறைத்து வருகையில் இந்திராதி தேவர்களும் மற்றுமுள்ளோரும் அவருடைய மனம் குளிரத் தோத்திரம் செய்தார்கள். ஜகத்ரக்ஷக, உம்முடைய பெருங்கருணையால் இந்த லோகங்கள் நன்மையை அடையட்டும், உங்கள் மனம் குளிரட்டும் என்று பிரமனும் தேவர்களும் பிரார்த்தித்தார்கள். திவாகரா, தங்கள் தேஜஸ்ஸைக் குறைக்க முற்பட்டாலும் தங்கள் தேஜஸ் நாளுக்கு நாள் மேன்மை கொண்டு லோகத்துக்குப் பாதகம் விளைவிக்காமல் விருத்தியாகட்டும் என்று விஷ்ணுவும் ருத்திரனும் பிரார்த்தித்தார்கள். ஜகத்பதே, தங்களுக்கு எந்தக் காரியத்திலும் வெற்றியே உண்டாக வேண்டும் என்று இந்திரன் பிரார்த்தித்தான். பிரபோ, தங்கள் மூலம் சகல லோகங்களுக்கும் மங்கள முண்டாகட்டும் என்றும், ரிஷிகளும், விசுவாமித்திரர் முதலான முனிவர்களும் கொண்டாடினார்கள். வாலகில்லியர் எனப்பட்ட அறுபதினாயிரம் மகரிஷிகள் வேத வாக்கியங்களால் சூரியன் மனம் சந்தோஷம் அடையத் துதி செய்தார்கள். தேவ தேவா, தாங்கள் பிரசன்ன முகத்தோடு இருந்து எங்களை ரக்ஷிக்க வேண்டும் என்று வித்தியாதரரும், நாகரும், யக்ஷரும் ராக்ஷஸரும் சூரியனைத் தோத்திரம் செய்து வணங்கினார்கள். விசுவாசி, சிருதாசி, ஊர்வசி, திலோத்தமை, மேனகை, சுஜன்யை, ரம்பை முதலானோர் சூரியனைச் சந்தோஷிக்கச் செய்ய கண்கவர் நடனம் ஆடினார்கள். ஆஹா, ஹூஹு என்று கந்தர்வர் இனிய கீதம் இசைத்தார்கள்.

சர்வ வியாபியான சூரியனுக்கு அந்தக் காரியத்தால் எவ்வித அசவுகரியமும் தோன்றாதிருக்க அவருடைய மனம் களிப்படைய மங்கள வாத்தியங்கள் முழங்கின. மங்களம் உண்டாகட்டும் என்ற கோஷமே எங்கு பார்த்தாலும் எழுந்தது. எல்லோருடைய மனமும் ஆனந்தத்தால் நிறைந்திருந்தது. இவ்வித கோலாகலத்தோடு அனைவரும் சூரியனைப் பிரார்த்தித்தவாறு இந்த மனோகர காட்சியைக் கண்டு களித்தனர். சூரியனைச் சாணைக் கல்லில் ஏற்றி அவருடைய தேஜஸ்ஸைக் குறைக்க விசுவகர்மா தொடங்கியபோது அவனும் அவரைப் பலவாறு பிரார்த்தித்தான். தேவதுந்துபியும் சங்கமும் மங்கள ஒலி எழுப்பின. ஹே பிரபோ, நமஸ்காரம் செய்பவர்களுக்கு அவர்கள் கோரிக்கையை எவ்விதத்திலாகிலும் நிறைவேற்றி வைப்பீர்கள் என்ற அனுதாபத்துடன் தோற்றம் தருபவரே, ஏழு குதிரைகளை உடையவரே, தாமரை மலரில் வீற்றிருப்பவரே, இருளை அகற்றுபவரே; மக்களுக்கு எல்லாவிதமான விஷயங்களிலும் சவுகரியத்தையே செய்பவரே, உம் திருவடிகளைப் பணிந்து வணங்குகிறேன். இவ்வாறு பலவிதமாக விசுவகர்மா சூரியனைத் துதித்தபடி அவருடைய தேஜஸ்ஸைச் சாணைக் கல்லிலே குறைத்து வந்தான்.

9. பிரமாதியர் கண்ட தேஜஸ்

ஒரு சமயம் உலகிலே சூரியனுடைய உக்கிரமான வெப்பத்தைத் தாங்க முடியாது மகரிஷிகள் தவித்தனர். அவர்கள் ஒன்று கூடி பிதாமகரான பிரமதேவனிடம் சென்றனர். ஹே கமலாஸனா, இதென்ன ஆச்சரியகரமானதாக இருக்கிறதே. நாளுக்கு நாள் எங்களால் வெப்பம் தாள முடியவில்லையே. எதனால் உண்டாகிறது? என்று கேட்டனர் மகரிஷிகள். பிரமதேவன் அவர்களைப் பார்த்துப் புன்சிரிப்பு தவழக் கூறினார். முனிவர்களே, சொல்லுகிறேன் கேளுங்கள். முன்னர் உலகிலே உள்ள ஜீவராசிகளும் மற்றுமுள்ள பொருள்களும் அழிந்த பின்னர் குணம் மட்டுமே நிலைத்திருந்தது. அந்தக் குணத்திலிருந்து அகங்காரம் உண்டாயிற்று. அகங்காரத்தினிடமிருந்து வாயு, அக்கினி, நீர், பூமி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும் தோன்றின. பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையின் காரணமாக அவற்றினிடமிருந்து ஓர் அண்டம் உண்டாயிற்று. அந்த அண்டத்திலிருந்து இந்த லோகங்கள் தோன்றின. பூமியானது ஏழு த்வீபங்களாக ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டிருந்தது. அப்போது விஷ்ணு, நான்முகன், ருத்திரன் மூவர் மட்டுமே இருந்தோம். எங்களுக்கு என்ன செய்வதென்பது, புரியாமல் மயக்கத்தில் இருந்தோம். எங்களுக்குப் பூர்வ ஜன்ம நினைவு இருந்ததால் நாங்கள் பரப்பிரமத்தை மனத்திலே தியானம் செய்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் எங்கள் முன்பு விவரிக்க முடியாத ஒரு ஜோதி தோன்றியது. பரப்பிரமத்தை நாங்கள் தியானம் செய்து வந்ததால், அதன் யோகத்தால் இந்த ஜோதி ஸ்வரூபம் சூரியனே என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நான் பகவானுடைய பிரபாவத்தைத் தோத்திரம் செய்யலானேன்.

ஹே பிரபோ, தேவர்களுக்கு நீர் தான் ஆதாரமாக இருக்கின்றீர்கள், அனைவரையும் அடக்கி ஆள்கிறீர்கள், சகல பூதங்களுக்கும் நீரே காரணகர்த்தாவாக விளங்குகிறீர்கள். சகல ஜீவராசிகளையும் இயக்குபவரும் நீரே. சர்வேச்வரா, நீரே பிரம்மாவாகவும், விஷ்ணுவாகவும், ருத்திரனாகவும் இருக்கின்றீர்கள். அகில ஜகத்துக்கும் தாங்களே பதியாக விளங்குகிறீர்கள் வாயு, இந்திரன், சோமன், விவஸ்வான், வருணன் ஆகியோரும் நீரே. கந்தருவர். நாகர், சித்தர், கின்னரர், சாத்தியர் அனைவரும் உம்மைத் தவிர வேறு யார்? நீரே இந்த லோகத்தின் சொரூபமாக விளங்குகிறீர்கள், நீரே ஜீவராசிகளைச் சிருஷ்டித்தும், காப்பாற்றியும், முடிவில் உம்மோடு ஒடுக்கியும் முத்தொழில்களையும் புரிந்து வருகிறீர்கள். நதிகளாகவும், மலைகளாகவும், சமுத்திரங்களாகவும், மின்னலாகவும், மேகங்களாகவும், இந்திரதனுசாகவும், பிரளயமாகவும் தாங்களே விளங்குகிறீர்கள். அவியக்தம், வியக்தம், சநாதனம் அனைத்தும் நீராகவே இருக்கிறீர்கள். அழிவில்லாதவரும், ஆதி அந்தம் இல்லாதவரும் தாங்களே. ஐசுவரியத்தைவிட மேலானது வித்தியை. வித்தியைவிட சிவன் சிறந்தவர், சிவனை விட மேலான தாங்களே பரமேச்வரன். எல்லாப் பொருள்களிலும் தங்கள் பார்வை இருக்கின்றது, எல்லோருடைய பாதங்களும் கைகளும் முகங்களும் தங்களுடைய பாதங்கள் கைகளும், முகங்களாகவும் விளங்குகின்றன. ஸர்வவியாபியாய் எங்கும் நிறைந்து நிற்கின்றீர்கள். ஆயிரம் கிரணங்களும், ஆயிரம் முகங்களும், ஆயிரம் பாதங்களும், ஆயிரம் கைகளும் கொண்டு விளங்கும் தாங்கள் எல்லாப் பூதங்களுக்கும் முன்னதாக இருப்பவர். ஏழு லோகங்களிலும் வியாபித்து இருளைப் போக்கிப் பிரகாசத்தைத் தரும் தங்களுடைய ரூபத்தைத் தேவர்களாலேயே காணமுடியாதிருக்கிறது. அப்படிப்பட்ட உம்முடைய ரூபத்துக்கு நமஸ்காரம் செய்கின்றேன். தேவர்களும், சித்தர்களும், மகரிஷிகளும் எந்த உம்முடைய ரூபத்தை ஸ்தோத்திரம் செய்கின்றனரோ அந்த ரூபத்தை நான் வணங்குகின்றேன். வேதமறிந்த பெரியோர்களாலும் ஞானிகளாலும் அறிய முடியாத உங்களுடைய ரூபத்தை நான் அடிபணிந்து போற்றுகிறேன். இந்த லோகத்தை உண்டாக்கியதும், அனைத்துக்கும் சோபையைத் தருவதும், தேவர்களால் அர்ச்சிக்கப்படுவதும் இந்த அண்டத்துக்குள்ளே இருந்தும் அறிய முடியாததாக இருக்கும் உம்முடைய சொரூபத்தை நான் தலை தாழ்த்தி வணங்குகின்றேன். வேதத்தைவிடச் சிறந்ததாகவும் யக்ஞம் முதலான கர்மாக்களை விடச் சிறந்ததாகவும் இந்த லோகத்தை விடச் சிறந்ததாகவும், தேவலோகத்தைவிட மேலானதாகவும் உள்ளதான பரமாத்மா என்ற சிறப்பு கொண்ட உம்முடைய ரூபத்தை நான் நமஸ்கரிக்கின்றேன். எளிதில் அறிய முடியாததும், ஞானக் கண்களால் அன்றிக் காணமுடியாததும் மாறுதல் ஏதும் இல்லாததும், ஆதி அந்தமில்லாததுமாய் விளங்கக் கூடிய உம்முடைய ரூபத்தை நான் வணங்கிக் கொண்டாடுகிறேன். எல்லாவிதமான காரணங்களுக்கும் காரணமாக விளங்குபவரே, உம்மை நமஸ்கரிக்கின்றேன். எல்லாப் பாபங்களையும் போக்கி அருளுபவரே, உம்மை வணங்குகின்றேன். நமஸ்காரம் செய்யப்படும் தேவாதியர்களால் நமஸ்கரிக்கப்படுவரே, உம்மைத் தொழுகின்றேன். கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி அருள்பவரே, உமதடிகளைப் போற்றுகின்றேன். கோரும் வரங்கள் அனைத்தையும் அன்புடன் தருபவரே, உம்மைக் கொண்டாடுகின்றேன், ஐசுவரியங்களைத் தருபவரே, உம்மைத் தலைதாழ்த்தி என் பணிவைக் காட்டுகின்றேன், மக்களுக்கு எல்லாவிதமான சுகபோகங்களைத் தருபவரே, உம் திருவடிகளைச் சரண் அடைகின்றேன், பக்தியை அளிப்பவரே, உம்மை நான் பெரிதும் கொண்டாடுகின்றேன்.

இவ்விதமாக நான் பகவானாகிய சூரியனைக் குறித்துப் பலவிதமாக துதி செய்ததும் என் தோத்திரத்தால் உள்ளம் மகிழ்ந்தவராய் அவரும் என்னைப் பார்த்து, உனக்கு என்ன வேண்டும்? கேள் என்றார். நான் மறுபடியும் அவரை நமஸ்கரித்துக் கண்களில் ஆனந்தம் பொங்கி வழிய, ஹே பிரபோ, தேவதேவா தங்களுடைய இந்தப் பிரகாசமான ரூபத்தை எவராலும் பார்க்க முடியாது. தங்களைக் காண்பதற்கு உரிய சக்தி அவர்களுக்கு இல்லை. ஆகவே, தாங்கள் பலராலும் காணப்படத் தகுந்த வகையில் ரூபம் கொள்ள வேண்டும், தங்களைத் தரிசித்துப் பேரானந்தம் அடையும் பாக்கியத்தை யாவரும் பெற வேண்டும் என்று வேண்டினேன். என் வேண்டுகோளை ஏற்றுப் பிரகாசமானதும் உஷ்ணத்தைத் தருவதுமான கிரணங்களுடன் விளங்கி வருகிறார். தம்முடைய அந்த சொரூபத்தின் மூலம் அவர் லோகத்திலுள்ள சகலமான பேருக்கும் அனேக சவுகரியங்களைச் செய்து வருகிறார். அவரால் தான் உலகிலே மழை பெய்கிறது. பனி உண்டாகிறது. மோக்ஷத்தை விரும்புபவர் சூரியனைத் தங்கள் ஹிருதய கமலத்திலே தியானம் செய்து வருகிறார்கள். குரூபியாக இருப்பவன் சூரியனை ஆராதித்து வருவானேயாகில் லக்ஷ்ணமான சொரூபத்தை அடைவான். பாபியும் சூரியனை ஆராதித்து வந்தால் அவன் செய்த பாபங்களின் கொடுமைகளிலிருந்து விடுபட்டவனாக ஆவான். அக்கினி ஹோத்திரமோ, வேதபாராயணங்களோ, ஏராளமாக தக்ஷணை கொடுத்துச் செய்யப்படும் கர்மாக்களோ சூரிய நமஸ்காரம் செய்வதால் அடையும் பலன்களை விட அதிக பலன்களைத் தருவதில்லை. மக்களுக்கெல்லாம் மங்களமாக அவர் இருக்கிறார். புனிதமானவற்றுக்கெல்லாம் புனிதமாக அவர் திகழ்கிறார். அவ்விதமான திவாகரராகிய சூரியபகவானைச் சரண் அடைகிறேன்.

தீர்த்தானாம் பரமம் தீர்த்தம்
மங்களானாம் ச மங்களம்
பவித்ராணாம் பவித்ரம்ச
ப்ரபத்யேஹம் திவாகரம்

இந்தத் தோத்திரத்தைச் சொல்லி எவன் சூரியனை நமஸ்காரம் செய்கிறானோ அவன் சகல பாவங்களும் நீங்கப் பெற்றவனாகி முடிவில் சூரிய லோகத்தை அடைகிறான். இவ்வாறாக, பிரமதேவன் லோகத்திலே உஷ்ணம் தோன்றியிருப்பதற்கான காரணத்தை ரிஷிகளுக்குத் தெரிவித்த போது அவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தவர்களாய் அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றனர். பிரமன் கூறியவாறு அவர்கள் சூரியனை ஆராதித்து வந்தார்கள். சூரியனுடைய தேஜஸ், நாளுக்கு நாள் விருத்தியாகி வந்தது. அதனால் உலகிலே பரவி வந்த உஷ்ணமும் அதிகரிக்கத் தொடங்கியது. சூரிய கிரணங்களுடைய வெப்பத்தைத் தாங்க மாட்டாது கஷ்டப்பட்டார்கள் முனிவர்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்பது புரியவில்லை. வெப்பமோ அதிகரித்து வந்தது. ஆகவே அவர்கள் ஒன்றுகூடி மறுபடியும் பிரமனிடமே சென்றார்கள். பிரமலோகத்தில் தேவர்களோடு கூடி அமர்ந்திருந்தார் நான்முகன். அவர் முன்பு சென்று மகரிஷிகள் வேத வாக்கியங்களால் துதித்து வணங்கினர். பிரமதேவன் அவர்களை மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவர்களுடைய வருகைக்கான காரணத்தைக் கேட்டார்.

பிதாமகரே, அதிதியின் புத்திரரும், மார்த்தாண்டன், திவாகரன் எனப் பலவிதமாக அழைக்கப்படுபவருமான சூரிய பகவானுடைய கிரணங்களினால் உண்டாகும் வெப்பத்தை எங்களால் தாங்க முடியவில்லை. நாளுக்குநாள் அதன் உக்கிரம் அதிகரித்து வருகிறது. சகல லோகங்களிலும் ஜீவ ராசிகள் சொல்லொணாக் கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இது விஷயத்தில் தாங்கள் எங்கள் மீது கருணை கொண்டு ஏதாகிலும் நடவடிக்கை எடுக்கவில்லையானால் அண்ட சராசரங்களுமே அந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு விடும். இதைத் தெரிவிக்கவே நாங்கள் தங்களை நாடி வந்தோம் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொண்டார்கள். அவர்களுடைய கோரிக்கையைப் பரிவுடன் கேட்ட பிரமதேவன். மகரிஷிகளே, உங்கள் கஷ்டத்தை நான் உணருகிறேன். இவ்விஷயத்தில் நான் எதும் செய்யமுடியாதிருக்கிறது. அந்தப் பகவானிடம் சென்று இதற்கொரு வழியை நாம் கேட்போம் என்றார். மகரிஷிகளுக்கும் அது முறையாகவே தோன்றியது. பிரமதேவனோடு அவர்கள் சூரிய பகவான் இருக்குமிடத்தை அடைந்தார்கள். உதய காலத்திலே பிரகாசத்தோடு தோன்றிய சூரியனைக் கண்டதும் அவர்கள் மெய்சிலிர்க்க அவரை நமஸ்கரித்து வேத வாக்கியங்களால் துதி செய்தார்கள். பிரமதேவன் பகவானுடைய மனம் திருப்தியுறும் வகையில் இத்தோத்திரம் செய்தார்.

ஹே பிரபோ, தேவர்களுக்குள் சிறந்தவராக இருப்பவரே, உம்மை வணங்குகிறேன். மிகவும் பிரகாசத்தோடு திகழுபவரே, உமக்கு என் நமஸ்காரங்கள், உம்மை வணங்குபவர்களுக்கு ஹிதத்தைத் தருபவரே, உம்மைப் பணிகின்றேன். மூன்று லோகங்களிலும் உள்ள சகல யுகங்களுக்கும் தாங்கள் அன்றோ அதிபதி. யுகங்களை நடத்தி வைத்து சுபமான பலன்களைத் தருபவரே, உம் திருவடிகளில் தலை வணங்குகிறேன். நல்லது கெட்டது முதலான கர்மாக்கள் அனைத்துக்கும் சாக்ஷியாக இருப்பவரே, உம்மைச் சரண் அடைகின்றேன். ஆயிரம் கிரணங்களை உடையவரே, உம்மை வணங்குகின்றேன். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரே கடிவாளத்தோடு லோக சஞ்சாரம் செய்பவரே, உம்மைத் தொழுகின்றேன். வாலகில்லியர்கள் எனப்படும் மகரிஷிகள், அப்ஸரஸ்கள், கின்னரர்கள், உரகர்கள், சித்தர்கள், பிசாசர்கள், குஹயர்கள், ராக்ஷஸர்கள், முதலான தேவ அசுர கணங்களால் துதிக்கப்படுவரே, உம்மை நமஸ்கரிக்கின்றேன். ஜனங்களைப் போஷிப்பதற்காக ரஸங்களைச் சிருஷ்டி செய்து பிறகு தம் கிரணங்களால் நீரை வற்றச்செய்து ஜனங்களை ரக்ஷிப்பவரே உம்மை வணங்குகின்றேன். வேதங்களால் துதிக்கப்படும், ஹே பிரபோ, தங்களை நமஸ்காரம் செய்கிறேன். மூடன், குருடன், ஊமை, செவிடன், கூனன், கிருமிகளால் உண்டாக்கப்பட்ட நோய்களால் கஷ்டப்படுபவன் ஆகிய இவர்கள் எல்லோரையும் ரக்ஷித்து, அவர்களுக்கு நல்ல சரீரத்தைக் கொடுக்கும் கருணை வள்ளலே, உம்மைத் தொழுகிறேன். மக்களுடைய வயிற்றிலே ஜாட ராக்கினியாகவும், அவர்களுடைய கண்களில் ஒளியாகவும், அக்கினியில் உஷ்ணமாகவும், நக்ஷத்திரங்களில் பிரகாசமாகவும் உள்ள எல்லாம் தங்களுடைய ரூபங்களே. தேவர்களுக்கு விரோதமானவர்களும், சமுத்திர ஜலத்திலே வசிப்பவர்களும், பயங்கரமான ஆயுதங்களைத் தரித்தவர்களுமான ராக்ஷஸர்கள் உம்மைப் பார்த்த மாத்திரத்திலேயே நாசத்தை அடைந்து விடுகிறார்கள்.

நமோ நம: ஸுரவர திக்மதேஜஸே
நமோ நம: ப்ரணத ஹிதானு கம்பினே
நமோ நம: த்ரிபுவன பூதபாவனே
க்ரது க்ரியா சுபபல ஸம்ப்ரதாயினே

சுபாசுப ப்ரவிசய கர்ம சாக்ஷிணே
ஸஹஸ்ர ஸந்தீதிதயே நமோ நம:
ப்ரசஸ்த ஸப்தாஸ்வ யுதாந்த பக்ஷிணே
த்ருவைக ரச்மி க்ரதிதாயதே நம:

ஸாவாலகில்யாப்ஸர கின்னரோரகை:
ஸ்வஸித்த கர்தர்வ பிசாய குத்யகை:
ஸபக்ஷர÷க்ஷõ கணசாரணோத்தமை:
நமோ நம: ஸத்க்ருத வந்திதாயதே

யதாரஸாந் ஸம்ஸ்ருஜஸே சரீரிணாம்
கபஸ்தி பிர்ய மஹிமாம்பு ஸர்ஜனான
ஜகச்ச ஸம்சோஷியஸே ஸ ஸாகரம்
நமஸ் ஸதாம்னாயனுதாய பாஸ்வதே

ஜடாந்த மூகானு பதிரானு ஸ குஞ்ஜான்
ஸதத்ரு குஷ்டானுக்ருமிபி ஸ்ரவத்ரணான்
கரோஷி தானேவ புனர்னவான்
ன்யதா ததா மஹாகாருணி காயதே நம:

யதௌதரம் ஜ்யோதி ரதிக்ம கம்ஸ்திதம்
யத ஸுதேஜோயத பீஹ சக்ஷüஷி
அக்னோய துஷ்ணம் பகனே யதாஹிதம்
தவைவ தத்ரூபமனேகதாஸ்திதம்

ஸுரத் விஷ: ஸாகர தோய வாசின:
பிரசண்ட பாசாசி பரகதாயுதா:
ஸமுத்திதாயே புவி பாப சேதஸ:
ப்ரயாந்தி நாசம் தவதேவ தர்சணாத்

இவ்வாறு பிரமதேவன் தோத்திரம் செய்தபோது சூரியன் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார். அவர்கள் எக்காரணம் பற்றி அவரைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

மகரிஷிகளே, நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், என்னுடைய வெப்பத்தைத் தாங்க முடியாது கஷ்டப்படுகிறீர்கள் என்பதை நானும் உணருகிறேன். உங்கள் விஷயத்தில் எது உகந்ததோ அதைச் செய்யவே நானும் விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள், என்றார். அவ்வார்த்தைகளைக் கேட்ட மகரிஷிகள் அவரை மறுபடியும் வணங்கிப் பணிவோடு சொன்னார்கள். பிரபோ, தங்களுடைய கிரணங்களால் இந்த லோகத்துக்கும் சகல ஜீவராசிகளுக்கும் நன்மை செய்து வருகிறீர்கள் என்பதை நாங்கள் அறியாமலில்லை. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உஷ்ணத்தை எங்களால் தாங்க முடியவில்லை. சிறிது காலத்தில் உலகமே அழிந்து விடக்கூடிய நிலைமை உண்டாகி விடுமோ எனப் பயப்படுகிறோம். தங்களுடைய உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டாலன்றி எங்களுக்கு விமோசனமில்லை. முனிவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட சூரியன் அவர்களைப் பார்த்துப் பரிவுடன் சிரித்தார். உங்கள் கோரிக்கைக்கு நான் இணங்குகிறேன். என் உஷ்ணத்தை எந்த வகையில் குறைக்க முடியும் என்று அபிப்பிராயப்படுகிறீர்களோ அவ்விதம் செய்யலாம் என்று சொல்லிவிட்டுத் தன் சஞ்சாரத்தைத் தொடர்ந்தார். சூரியன் சென்றதும் மகரிஷிகள் மறுபடியும் பிரம தேவனையே வேண்டலானார்கள். மிகுந்த தேஜஸ்ஸுடன் விளங்கும் சூரியனுடைய கிரணங்களிலே தோன்றும் உஷ்ணத்தை எவ்வாறு குறைப்பது? நடக்கப் போகும் காரியத்தை நன்கு உணர்ந்திருந்த பிரமதேவன் அபயம் தந்தார். மகரிஷிகளே, வருந்த வேண்டாம். உங்கள் எண்ணம் நிறைவேறும் தருணம் வந்து விட்டது. அதற்கான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பகவானுடைய உஷ்ணத்தைத் தாங்கமாட்டாது, ஸமுக்ஞாதேவி அவரை விட்டுப் பிரிந்து தந்தையின் கிருகத்துக்குச் சென்று விட்டாள். அவருடைய உஷ்ணம் குறைந்தாலன்றி கணவனிடம் திரும்புவதில்லை என வைராக்கியம் கொண்டு அவள், அவரைக் குறித்துத் தம் விருப்பம் நிறைவேறத் தவம் மேற்கொண்டிருக்கிறாள். அவள் எண்ணத்தை நிறைவேற்றி அவளைத் திரும்பவும் தம்மோடு சேர்த்துக்கொள்ள சூரியனும் எண்ணம் கொண்டுள்ளார். ஆகவே, ஸமுக்ஞா தேவியின் தந்தையான விசுவகர்மா உங்கள் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன். அவனைப் பிரார்த்தியுங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்றார் நான்முகன். மகரிஷிகளும் பகவானுடைய உஷ்ணத்தைப் பொறுக்கும் அளவுக்குக் குறைக்க உதவுமாறு விசுவகர்மாவை வேண்டினார்கள். மகள், கணவன் கிரகத்திலிருந்து வந்தது முதல் விசுவகர்மா அவளைத் திரும்பவும் அவரிடம் சேர்ப்பிக்க என்ன செய்யலாம் எனச் சிந்தித்து வந்தான். மகரிஷிகள் பிரார்த்தனை செய்ததும் அவன் அந்த எண்ணத்தை மேலும் தீவிரமாகச் சிந்திக்கலானான். அதே சமயம் சூரியனும் ஸமுக்ஞையைத் தேடிக்கொண்டு அவன் இருப்பிடம் வந்தார்.

விசுவகர்மா அவரை வரவேற்று உபசரித்தார். உலக ÷க்ஷமத்துக்காக அவர் தம்முடைய உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டினான். சூரியனும் தாம் என்ன செய்ய வேண்டுமென்று அவனைக் கேட்க, அவர் அனுமதித்தால் சாணைக் கல்லிலே ஏற்றிச் சாணை பிடித்து அவருடைய உஷ்ணத்தைக் குறைப்பதாகச் சொன்னான். சூரியனும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவே, அவரை அழைத்துக் கொண்டு சாகத்வீபம் சென்று விசுவகர்மா அவரைச் சாணைக்கல்லில் ஏற்றி அவருடைய உக்கிரமான தேஜஸைச் சாணை பிடிக்கலானான். அமிருதத்தால் சூரியனை அபிஷேகம் செய்து அவருடைய சிரசிலிருந்து முழங்கால் வரை சாணை பிடித்தான் விசுவகர்மா. தேஜஸ்ஸின் உக்கிரம் குறைந்து வந்தது. முழங்கால் வரையே விசுவகர்மாவால் சூரியனைச் சாணை பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் அவனால் முடியவில்லை. அத்துடன் நிறுத்தி விட்டான். அது முதல் சூரியனுடைய தேஜஸ்ஸைக் கொண்டு பற்பல ஆயுதங்களைத் தயாரித்து தேவர்களுக்கு அளித்தான் விசுவகர்மா. விஷ்ணுவுக்குச் சக்கராயுதம் தந்தான். சிவனுக்கு சூலம் கொடுத்தான். மற்றும் வில், கோடாரி முதலான ஆயுதங்கள் தேவர்களுக்குத் தரப்பட்டன. அந்த ஆயுதங்களைக் கொண்டு அரக்கர்களை வதம் செய்து உலகைக் காப்பாற்றி வருகின்றனர். பிரமதேவனால் சொல்லப்பட்ட அரிய ஸ்தோத்திரத்தை சந்தியாகாலத்தில் எவன் பக்தியுடன் ஜபிக்கிறானோ அவனுக்கு எல்லா போகங்களும் கிட்டும். அவன் பிறந்த குலம் புனிதமடையும். வியாதிகள் அவனை அணுகாது. வம்சம் விருத்தியாகி புத்திர பவுத்திரர்கள் பிறப்பார்கள். எடுத்த காரியங்கள் கைகூடும், தோல்வி என்பதே உண்டாகாது. ஐசுவரியம் விருத்தியாகும், ஆபத்துக்கள் உண்டாகாது. புண்ணியலோகத்தை அவர்கள் அடைவார்கள்.

10. பரிவார தேவதைகள்

சாம்பா, சூரியனுடைய வமிசத்தைப் பற்றி இதுவரை சொல்லக் கேட்பாய். இப்போது நான் அவரைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன் கேள் என்று நாரதர் கூறத் தொடங்கினார். சூரியன் கருணாமூர்த்தி, ஆகவே அசுரர்கள் அவர் இருக்குமிடம் வந்து அவரைப் பலவாறு துதித்து, மகிழ்ச்சியுறச் செய்து அனேக வரங்களைப் பெற்றுச் சென்றனர். வரங்கள் பெற்றுச் சென்ற அசுரர்கள் அதனால் அகம்பாவம் அடைந்தவர்களாய் தேவர்களைப் பலவிதங்களிலும் ஹிம்சை செய்யலானார்கள். தேவர்களால் அசுரர்களை அடக்கி வெற்றி காண முடியவில்லை. அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் தவித்தனர். என்ன செய்வது? அவர்கள் அனைவரும் ஒன்று கூடி பிரமதேவனிடம் சென்று முறையிட்டனர். நான்முகனும் அவர்களோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார். அசுரர்கள் சூரியனை நெருங்க முடியாதவாறு அவரைச் சுற்றி தேவர்கள் காவலாக இருப்பது என முடிவு செய்தனர். அவ்வாறே அவர்கள் சூரியனைச் சுற்றி நான்கு பக்கங்களில் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு உருபுடனும் சூழ்ந்து கொண்டு அசுரர் எவரும் அவரை நெருங்காதபடி காவல் காத்து வருகின்றனர். தேவேந்திரன் தண்டத்தைக் கையிலே ஏந்தி அசுரர்கள் நெருங்கி வந்தால் அவர்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறான். ஆகவே அவன் தண்டநாயகன் என்ற பெயரைப் பெற்றான். அக்கினி பிங்கள வர்ணத்தோடு, அதாவது சிவப்பு நிறத்தோடு அவர் அருகில் இருக்கிறான். அவன் தன்னுடைய நிறத்தைக் காரணமாகக் கொண்டு பிங்களன் என்று அழைக்கப்படுகிறான். தேவேந்திரன் சூரியனுக்கு வாம பார்ச்வத்திலும் அக்கினி தக்ஷிண பார்ச்வத்திலும் காவலாக இருந்து வருகிறார்கள்.

அசுவினி தேவர்கள் இருவரும் குதிரை ரூபம் கொண்டு பகவானுக்கு அருகே இருக்கின்றனர். கிழக்கு வாசலில் கார்த்திகேயனும் அரனும் பாதுகாவலாக இருந்து வருகிறார்கள். கார்த்திகேயன் தேவர்களுக்கு சேனாதிபதியாகவும், மிகுந்த பிரகாசத்தோடும் விளங்குவதால் ராஜா என்ற பெயரோடு அங்கு இருக்கிறார். ஹரன், தோஷன் என்ற பெயரில் காவலுக்கு இருக்கிறார். அங்கே மிகவும் உக்கிரமான கழுதையும் வாயிலில் இருக்கிறது. யமனும் கருடனும் தெற்குப் பக்க வாயிலில் காவல் புரிகின்றனர். அவர்கள் இருவரும் பல வர்ணங்களுடைய பக்ஷிகளின் உருவில் இருக்கிறார்கள். ஆகவே அவர்களைக் கல்மாஷ பக்ஷிகள் என அழைக்கின்றனர். அவர்களுக்குத் தெற்குப் புறத்தில் சித்திர குப்தனும், காலனும் காவல் இருக்கிறார்கள். சித்திர குப்தன் ஜாந்தகாரன் என்ற பெயரிலும் காலன் மாடரன் என்ற பெயரிலும் விளங்கி வருகிறார்கள். மேற்குப் பக்கத்தில் வருணனும் சமுத்திரமும் காவலாக இருந்து வருகின்றனர். க்ஷúதாபா என்று வருணன் பெயர் கொண்டு இருக்கிறான். சமுத்திரத்துக்கு ப்ராபநுயானன் என்று பெயர். வடக்குத் திக்கிலே குபேரனும் விநாயகரும் இருக்கிறார்கள். குபேரனுக்குத் தனதன் என்று பெயர். விநாயகர் யானை உருவில் அங்கு இருக்கிறார். விநாயகருக்கும் வருணனுக்கும் முன்பாகத் திண்டி என்ற பெயரோடு ருத்திரன் இருக்கிறார். அருகில் ரேவந்தன் என்னும் சூரிய குமாரனும் இருக்கிறான். சூரியனுக்குப் பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் இந்தப் பதினெட்டுப் பேர்களே. மாடரன், ஜாந்தகரன், தனதன், விநாயகர், ப்ராப்நயானன், க்ஷúதாபா, கல்மாஷ பக்ஷிகளான யமன், கருடன், அச்லினி தேவதைகள் இருவர், தண்டநாயகன், பிங்களன், கரத்வாரகர் இருவர், ராஜா, தோஷன், ரேவந்தன், திண்டி ஆகிய பதினெட்டுப் பேருமே அவர்கள். அவர்களைத் தவிர அனேக தேவதைகளும் தங்கள் விருப்பப்படி பலவித ரூபங்களை எடுத்துக்கொண்டு அவரைச் சுற்றி இருந்து வருகிறார்கள். ரிக், யஜுர், சாம வேதங்களும் மற்றும் அனேக மந்திர தேவதைகளும் பல ரூபங்களோடு சூரியனைச் சுற்றி இருந்து வருகின்றனர். சூரியனுடைய அநுசரர்கள் பதினெட்டுப் பேரில் திண்டியே முக்கியமானவர். பிரமனுடைய ஐந்தாவது சிரசு ஒரு சமயம் ருத்திரனை மிகவும் இகழ்ந்து பேசியது. அதனால் கோபமுற்ற ருத்திரன் பிரமனைத் தண்டிக்க எண்ணம் கொண்டார். அவர் இருக்குமிடம் சென்று தம்மை இகழ்ந்து பேசிய அவருடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். ருத்திரனைப் பிரமஹத்தி என்ற பாபம் பீடித்தது. அந்தப் பாபம் அகல அவர் பிராயச் சித்தம் செய்து கொண்டார்.

பிரமதேவனிடமிருந்து கிள்ளப்பட்ட சிரசின் கபாலத்தையே பிக்ஷõபாத்திரமாகக் கையிலே தாங்கிக் கொண்டார் ருத்திரன். பிரிந்த ஜடையுடன் வஸ்திரமில்லாதவராய் கையிலே கபாலத்தை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு இடமாகப் பிøக்ஷ கேட்டு வந்தார். தாருகாவனத்திற்கு அவர் சென்றபோது அங்கிருந்த முனிவர்களுடைய மனைவியர் ருத்திரனுடைய அழகு வடிவத்தைக் கண்டு அவரிடம் மோகம் கொண்டனர். அதைக் கண்ட முனிவர்கள் பெருங்கோபம் கொண்டனர். ருத்திரனை யாரென்று உணராது, யாரோ பித்தன் என்று நினைத்துக் கல்லாலும் தடியாலும் அடித்து விரட்டத் தொடங்கினர். இவ்விதம் ஒவ்வொரு இடமாகச் சென்று பிøக்ஷ கேட்டுப் பெற்றவாறு ருத்திரன் சூரியன் லோகத்தை அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவருடைய தோற்றத்தைக் கண்டு மனம் வருந்தியவர்களாய் அவரிடம் விசாரித்தனர். ஐயனே? தாங்கள் எதற்காக இந்தக் கோலத்தோடு இவ்வாறு சுற்றி வருகிறீர்கள்? தெரிவிக்க வேண்டும் என்று கேட்டனர். என்னை இகழ்ந்து பேசிய பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை நான் துண்டித்து விட்டேன். அதனால் பிரமஹத்திதோஷம் என்னைப் பீடித்து விட்டது. அந்த பாபம் அகலவே நான் இவ்வாறு பிராயச் சித்தம் மேற்கொண்டு எங்கும் சுற்றி வருகிறேன் என்று தெரிவித்தார் ருத்திரன். ஐயனே, உம்மைப் பிடித்துள்ள தோஷம் நீங்க ஏன் இவ்வாறு சுற்றி வரவேண்டும்? பகவானாகிய சூரியனுடைய எதிரில் இருந்தாலே போதுமே. அவருடைய பார்வைபட்ட மாத்திரத்திலேயே சகல பாபங்களும் அகன்று விடுமே. எதற்காக வேறு இடங்களைத் தேடிச் செல்ல வேண்டும். என்று சொன்னார்கள். அவர்கள் வார்த்தைகளை ஏற்று ருத்திரன் அங்கேயே தங்கி சூரியனுடைய தரிசனத்தால் தம்மைப் பீடித்துள்ள தோஷத்தைப் போக்கிக் கொள்ள எண்ணம் கொண்டார். தக தக வென்று பிரகாசத்தோடு உதிக்கும் சூரியனைக் கண்டதும் ருத்திரன் நமஸ்கரித்தார். சர்வ பாபத்தையும் போக்குகின்ற சூரியனே, உம்மை நமஸ்கரிக்கின்றேன். தானவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், கிரகங்கள், நக்ஷத்திரங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான தேவனே, உம்மை நான் சரண் அடைகின்றேன். இவ்வாறாக ருத்திரன் மான ஸீகமாக சூரியனைப் பிரார்த்தித்தவாறு அவரைக் குறித்துத் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போதே அவருடைய அந்த சரீரம் மறைந்து புதிய சரீரம் உண்டாயிற்று. அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ருத்திரன் சூரியனைப் போற்றித் துதிக்கலானார்.

ஹே பிரபோ, ஆகாசத்தில் இருந்து கொண்டு பத்துத் திக்குகளையும் தங்களுடைய தேஜோமயமான கிரணங்களால் பிரகாசிக்கச் செய்கின்றீர்கள். ஆதித்தன் என்றும் பாஸ்கரன் என்றும் சூரியன் என்றும் ஸவிதா என்றும், திவாகரன் என்றும், பூஷா என்றும், அர்யமா என்றும் பானு என்றும் பல ரூபங்களால் உலகைப் பரிபாலித்து வருகின்றீர்கள். நான்கு யுகங்களையும் உண்டாக்கிப் பிரளய காலத்தில் காலாக்கினி ரூபத்துடன் விளங்குகிறீர்கள். நீங்கள் யோகச்வரர், ரிஷிகளுடைய அக்கினி ஹோத்திரங்களிலும் யக்ஞங்களிலும் வேதங்களிலும் தாங்கள் வசிப்பவர் அன்றோ; தாங்கள் அழிவு என்பது என்பது இல்லாதவர், யாரும் அறிய முடியாத தன்மையை உடையவர் நீங்கள். நீங்களே பேரின்பமாகிய மோக்ஷத்துக்குக் காரணமாக இருப்பவர். வேத மயமான குதிரைகள் கட்டப்பட்ட இரதத்திலேறி மேருமலையைப் பிரதக்ஷிணம் செய்து உதயம், மத்தியானம், அஸ்தமனம் ஆகிய காலங்களை உண்டாக்குகிறீர்கள். தாங்களே பிரமன்; தாங்களே விஷ்ணு; தாங்களே ருத்திரன், கிரகங்கள், நக்ஷத்திரங்கள், பர்வதங்கள் நதிகள், வனங்கள் ஆகிய அனைத்துமே தாங்கள் தான். தங்களைத் தரிசித்த மாத்திரத்திலேயே பிரமஹத்தி முதலான கொடிய பாபங்கள் எல்லாம் நசித்துப் போய்விடும் அன்றோ. உம்முடைய ரூபத்தை ஞானக் கண்களால் பார்க்கின்றேன். உம்முடைய பிரகாசமான கிரணங்களால் சகல லோகங்களையும் பிரகாசப்படுத்தி வருகின்றீர்கள். ருத்திரன் இந்த விதமாக சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த போது அவருடைய துதிகளால் ஆனந்தம் அடைந்த சூரியன் அவரை அருகில் அழைத்தார்.

ஹே ருத்திரா, பகவானுடைய தன்மைகளாகச் சொல்லப்படும் ஞானம், ஐசுவரியம், அழிவு இல்லாதது, மகத்வம் அசைக்க முடியாதது, சூக்ஷ்மமானது ஆகிய குணங்கள் என்னிடம் இருப்பது போலவே உன்னிடமும் இருக்கிறது. நான் வேறு நீ வேறு என்பதே இல்லை. இருவரும் ஒருவரே. பிராம்மி மாஹேஸ்வரி வைஷ்ணவி முதலான சக்திகள் புருஷ ரூபமாக என்னிடம் இருக்கின்றன. இதை நன்கு அறிந்து நம் இருவருக்கும் பேதம் இல்லை என்று நிச்சயித்து வழிபடுவோருக்கு என் அனுக்கிரகம் எப்போதும் உண்டு. என்னுடைய தரிசனத்தால் உன்னைப் பீடித்துள்ள பிரமஹத்தி தோஷம் விலகிவிட்டது. கபாலத்தை எறிந்து விட்டு உன் பூர்வ சொரூபத்துடன் நீ எப்போதும் இங்கேயே தங்கியிருக்கலாம். உன்னுடைய ரூபத்துக்குத் திண்டி என்ற பெயர் வழங்கட்டும். எந்த இடத்திலும் விடுபடாத பாபங்கள் இங்கே என் சமீபத்திலிருப்பதால் விடுபட்டுப் போகும். அவிமுக்தமாய் உன்னை விடாது பற்றியிருந்த பிரமஹத்தி தோஷம் இங்கு வந்ததும் உன்னை விட்டு விலகிப்போய் விட்டதால் இந்த இடம் அவிமுக்தம் எனப் பெயர் அடையட்டும். என்னைக் குறித்து நீ செய்த ஸ்தோத்திரம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அதைக் கூறுபவருக்கு சகல மனோபீஷ்டங்களும் நிறைவேறப் பெற்று அவர்கள் நற்கதியை அடைவர். இந்த இடத்திலிருந்து ஒரு குரோச தூரத்துக்குள் யார் என்னை வழிபட்டாலும் அவர்கள் சகல பாபங்களினின்றும் விடுபட்டவர்களாக ஆவார்கள். இவ்வாறு சூரியன் அனுக்கிரகிக்கவே, ருத்திரன் பெரும் மகிழ்ச்சி கொண்டவராய்த் திண்டி என்ற பெயரோடு அங்கே இருந்து வருகிறார். பூமியிலே விலகாத பாபங்கள் எல்லாம் காசி ÷க்ஷத்திரத்தை அடைந்ததும் விலகி விடுவதால் காசி அவிமுக்தம் என்ற பெயரைப் பெற்றது. நாரதர் சாம்பனுக்கு சூரியனுடைய பரிவார தேவதைகள் பற்றிக் கூறி முடித்ததும் அடுத்து சூரிய மண்டலத்தைப் பற்றி விவரிக்கலானார்.

11. சூரிய மண்டலம்

இரண்ய கர்ப்பருடைய சிறிய கர்ப்பத்திலிருந்து வியோமா என்பது உண்டாயிற்று, தியுலோகம், பூலோகம் என்ற இரண்டுக்கும் இடையே அது இருப்பிடம் கொண்டது. அங்கே நான்கு சிகரங்களை உடையதும் சதுரமாக அமைந்ததும் தங்கமயமானதுமான மேருமலை உண்டாயிற்று. எட்டு திக்குகளை உடைய இந்தப் பூமியான தாமரைக்கு மேரு பர்வதமே கர்ணிகையாக விளங்குகிறது. சூரியன் அருமையான ஓர் இரதத்திலேறி தேவர்களோடு சூழப்பட்டவராய் அந்த மேரு பர்வதத்தைப் பிரதக்ஷணமாக வருகிறார். அந்த மேரு பர்வதத்திலே முப்பத்து மூன்று தேவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாக்நிகர் எனப்படுவர். ஏகாதச ருத்திரர்களும், துவாதச ஆதித்தியர்களும், அஷ்ட வசுக்களும், அசுவினி தேவர் இருவரும் ஆகிய முப்பத்து மூன்று பேர்களே அவர்கள், நமது உடல் அசுவினி தேவர்களிடம் சேருகின்றது. பிதாமஹர்கள் ருத்திரர்களிடமும், பிரபிதாமஹர்கள் ஆதித்தியர்களிடமும், பித்துருக்கள் வசுக்களிடமும் சேருகின்றனர். அஜைக பாதர், அகிர்புத்திரர், சிரஷ்டா, ருத்திரர், ஹரன், சர்வன், திரியம்பகன், விருஷாகபி, சம்பு, கபர்தி, ரைவதர் ஆகிய பதினோரு பேரும் ஏகாதச ருத்திரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விஷ்ணு, சக்கரன், அரியமான், தாதா, மித்திரன், வருணன், விவஸ்வான், ஸவிதா, பூஷா, துவஷ்டா, அம்சுமான், பகன் ஆகிய பன்னிரண்டு பேரும் துவாதச ஆதித்தர்கள் ஆவர். தரன், துருவன், சோமன், ஆபன், அனிலன், அனலன், பிரத்யூஷன், பிரபாதன் என்ற எட்டுப் பேரும் அஷ்ட வசுக்கள் எனப்படுவோர் ஆவர். கிரது, தக்ஷன், வசு, சத்யன், காலன், காமன், துரி, லோசனன், ஆர்த்தரவன், புரூரவன் ஆகிய பத்துப் பேரும் விசுவதேவர்கள். மனு, அனுமந்தன், பிராணன், நரன், நாராயணன், விருத்தி, தபன், ஹயன், ஹம்ஸன், தன்மன், விபு, பிரபு என்ற பன்னிரண்டு பேரும் ஸாத்தியர் எனப்படுவோர். இவர்கள் யக்ஞங்களுக்காக ஏற்பட்டவர்கள். ஆகவே யக்ஞங்களில் அவிர்பாகம் பெறுபவர்கள்.

ஆதித்தர்கள், மருத்துக்கள், ருத்திரர்கள் இவர்கள் எல்லோரும் கச்யபருடைய புத்திரரான சூரியனிடமிருந்து உண்டானவர்கள். வசுக்கள், சாத்தியர்கள், விசுவதேவர்கள் ஆகியோர் தருமனிடமிருந்து உண்டானவர்கள். தருமனுடைய பிள்ளையான சோமன் மூன்றாவது வசு ஆவான். தருமன் பிரமனுடைய புத்திரர். சுவாயம்பு, ஸ்வாரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாக்ஷúஷன் ஆகிய ஆறுபேரும் கடந்த ஆறு மன்வந்தரங்களிலும் மனுக்களாக இருந்தவர்கள். இப்போது நடைபெறுவதான ஏழாவது மன்வந்தரத்துக்கு வைவசுதன் மனுவாக இருக்கிறான். வரப்போகும் ஏழு மன்வந்தரங்களுக்கும் முறையே அர்க்க சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, பவ சாவர்ணி, தர்ம சாவர்ணி, தக்ஷ சாவர்ணி, ரவுத்திர சாவர்ணி, பவுத்திய சாவர்ணி ஆகியோர் மனுக்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பர். இந்தப் பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். கச்யபர், அத்திரி, வசிஷ்டர், பரத்வாஜர், கவுதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகள் ஆவர். ரவன், ஆவன், உத்வகன், தபகன், விவகன், நிவகன், பரிவாகன் ஆகிய ஏழு பேரும் மருத்துக்கள் என அழைக்கப்படுபவர்கள்: இவர்கள் ஏழு பேரும் இந்திரனால் ஏழு வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டதால் மருத்துக்கள் எனப்படுவோர் மொத்தம் நாற்பத்தொன்பது பேர் என்று சொல்லப்படுகிறது.

சவுரன், சுகி, பாவகன் மூன்று பேரும் அக்கினிகள். இவர்களுக்குப் புத்திரர், பவுத்திரர்கள் நாற்பது பேர்களாம். ஸம்வத்ஸரம், ரிதுக்கள் ஆகியவை சூரியனிடமிருந்து உண்டாயின. சம்வத்ஸரம், பரிவத்ஸரம், இட்வத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்ற ஐந்து வகை சிருஷ்டிகள் உண்டாயின. அவர்களில் வாயுவே அணுவத்ஸரம் என்பர். அக்கினி சம்வத்ஸரமாகவும், சூரியன் பரிவத்ஸரமாகவும், சந்திரன் இடவத்ஸரமாகவும், ருத்திரன் வத்ஸரமாகவும் சொல்வர். இவர்கள் இரண்டு ரூபங்களை உடையவர்களாம். ரிதுக்களுடைய புத்திரர்கள் பிதுருக்கள் எனப்படுவோர், ஆகவே ரிதுக்கள் பிதாமஹர்கள் ஆவர். ரிதுக்களுடைய தந்தை பிரபிதாமஹர். மாசங்கள் சந்திரனுடைய பிள்ளைகள் என்பர். அதாவது சந்திரனால் உண்டாக்கப்படுபவர்கள். சவும்யர் எனப்படுவோர் பிதுருக்கள், பர்சிஷதர் பிதாமஹர்கள். அக்கினிஷ்வார்த்தர் பிரபிதாமஹர்கள்.

12. நவக்கிரகங்களும் சப்த லோகங்களும்

நாரதர் சாம்பனுக்கு அடுத்தாற்போல் நவக்கிரங்களைப் பற்றி விவரிக்கலானார். ஆதித்தன், சோமன், அங்காரகன், புதன், பிரஹஸ்பதி, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது பேரும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுபவர்கள். மூன்று லோகங்களிலும் ஏற்படும் சுப அசுபங்களை எடுத்துக் காட்டும் அதிகாரிகளாக நவக்கிரகங்கள் விளங்குகின்றனர். அவர்களில் சூரியனும் சந்திரனும் மண்டலக்கிரகங்கள் எனக் குறிப்பிடப்படுவர். ராகு சயாகிரகமாகும். மற்ற ஆறு கிரகங்களும் நக்ஷத்திர கிரகங்களாம். சூரியன் அக்கினி ஸ்வரூபி, சந்திரன் ஜலமாம், அதாவது குளிர்ச்சியானவள். சூரியன் பிரமனாகவும், சந்திரன் விஷ்ணுவாகவும் ஆவார்கள். சூரியன் கிரகங்களுக்கு அதிபதி. அதன் காரணமாகக் கிரகபதி, கிரஹராஜன் என்ற பெயர்களால் சூரியன் அழைக்கப்படுகிறார். சந்திரன் நக்ஷத்திரங்களுக்கு அதிபதியாக விளங்குகிறான். அங்காரகன் மகேச்வரனாக விளங்குகிறான். சூரியன் கச்யபருடைய புத்திரன், சந்திரன் தருமனுடைய புத்திரன், பிரகஸ்பதியும் சுக்கிரனும் பிரமனுடைய புத்திரர்கள். பிரகஸ்பதி தேவர்களுடைய குருவானார். அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குருவாகக் கொண்டார்கள். புதன் சந்திரனுடைய குமாரன், சனி சூரிய குமாரன் ஆவான். ராகு ஸிம்மிகாலின் மகன். கேது பிரமனுடைய பிள்ளை. சூரியன் எல்லாக் கிரகங்களுக்கும் கீழாகச் சஞ்சாரம் செய்கிறார். அவருக்கு மேலே சந்திரன் சஞ்சாரம் செய்கிறான். சந்திரனுக்கு மேலே நக்ஷத்திரங்கள் அமைந்துள்ளன, அவற்றுக்கும் மேலாக புதன் வானவீதியிலே பிரயாணம் செய்து வருகிறான். புதனுக்கும் மேலே சுக்கிரன் சஞ்சாரம் செய்ய, அங்காரகன் சுக்கிரனுக்கும் மேலாகப் பிரயாணம் செய்கிறான். பிரகஸ்பதி சுக்கிரனுக்கு மேலாக சஞ்சாரம் செய்கிறான். அவருக்கும் மேலாக சனி சஞ்சாரம் செய்து வருகிறான். சனியின் பாதைக்கு மேலாக ரிஷிகளுடைய மண்டலம் அமைந்துள்ளது. அதற்கும் மேலே துருவனுடைய மண்டலம் இருக்கிறது. சூரியனுடைய மண்டலத்தில் ராகு சந்திரனுடைய பாதைக்குக் குறுக்காகச் சில சமயங்களில் பிரயாணப்படுகிறான். கேது சூரியனுடைய மண்டலத்தில் இருந்துகொண்டு எப்போதும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறான். சூரியனுடைய விஸ்தாரம் ஒன்பதாயிரம் யோசனை என்று சொல்லப்படுகிறது. அவருடைய மண்டலம் அதைப்போல் மூன்று மடங்கு விஸ்தாரம் உடையதாம். சந்திரனுடைய விஸ்தீரணம் சூரியனுடைய விஸ்தீரணத்தைப் போன்று இரண்டு மடங்கு ஆகும். சந்திரன் சூரியனுடைய மண்டலத்தைப் போன்று மூன்று பங்கு விஸ்தீரணத்தை உடைய மண்டலத்தைக் கொண்டிருக்கிறான்.

சந்திரனுடைய விஸ்தீரணத்தில் பதினாறில் ஒரு பங்கு விஸ்தீரணமே கொண்டது சுக்கிரன். பிரகஸ்பதியின் விஸ்தீரணம்  சுக்கிரனுடைய விஸ்தீரணத்தில் முக்கால் பங்குதான்! செவ்வாயும் புதனும் பிரகஸ்பதியின் விஸ்தீரணத்தில் கால் பங்குக் குறைவான விஸ்தீரணத்தையே கொண்டிருக்கிறார்கள். மேலே சொல்லப்பட்ட இருவருடைய விஸ்தீரணத்தில் முக்கால் பங்கு விஸ்தீரணமே சனிக்கு இருக்கிறது. நக்ஷத்திரங்கள் புதனுக்குச் சமமான விஸ்தீரணத்தைக் கொண்டவையே. எல்லாவற்றையும்விடக் குறைந்த விஸ்தீரணத்தை உடைய நக்ஷத்திரங்களின் விஸ்தீரணம் அரையோசனையாகும். அதற்குக் குறைந்த விஸ்தீரணத்தை உடைய நக்ஷத்திரங்களே இல்லை. ராகு சூரியனைப் போல் விஸ்தீரணத்தை உடையவன், கேதுவுக்கு விஸ்தீரணம் இவ்வளவு என்று நிச்சயிக்க முடியவில்லை. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம் ஆகிய இந்த லோகங்கள் ஏழும் மேலுலங்கள் எனப்படும். பூலோகம் பிரதிவி மயமானது. புவர்லோகம் ஆகாசத்தின் சொரூபத்தைக் கொண்டுள்ளது. சுவர்லோகம் என்பதே தேவலோகம், மகர்லோகம் முதலான மற்றவை அவற்றுக்கு மேலே அமைந்துள்ளன. பூதங்களுக்கு அக்கினியே அதிபதியாக இருக்கின்றார். அதனால் அவர் பூதபதி என்ற பெயரைக் கொண்டுள்ளார். ஆகாசத்துக்கு அதிபதியாக விளங்குபவர் வாயு. ஆகவே அவர் நபஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். தேவலோகத்துக்கு சூரியனே அதிபதியாக உள்ளார். அதன் காரணமாகத் திவஸ்பதி என்ற பெயர் அவருக்கு ஏற்படலாயிற்று. கந்தர்வர்கள், அப்சரசுகள், குஹ்யகர்கள், ராக்ஷஸர்கள் இவர்கள் மனிதர்களோடு பூலோகத்தில் இருக்கிறார்கள். மருத்துக்களும், ருத்திரர்களும், ஆகாசத்தில் புவர்லோகத்தில் இருக்கின்றனர். அசுவினி தேவர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் முதலானோர் தேவலோகத்தில் இருந்து வருகிறார்கள்.

நான்காவதான மகர்லோகத்தில் முனிவர்கள் வசிக்கிறார்கள். இந்த முனிவர்கள் எல்லோரும் கல்பாந்த காலம் வரை ஜீவித்திருக்கும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள். ஜனலோகத்தில் பிரஜாபதிகள் இருந்து வருகின்றார்கள். எல்லாவற்றிலும் பற்றைத் துறந்து வைராக்கியத்தை உடைய வைராஜர்கள் எனப்படுவோர் தபோலோகத்தில் இருக்கிறார்கள். சத்தியலோகம் என்பதே நான்முகனுடைய லோகமான பிரமலோகம். தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், சர்ப்பங்கள், பூதங்கள், வித்தியாதரர்கள் ஆகியோர் தேவசிருஷ்டிகள் ஆவர். இவர்கள் மேலுலகங்கள் ஏழு லோகங்களிலும் வசிக்கிறார்கள். மருத்துக்கள், பிதுருக்கள், அக்கினிகள், கிரகங்கள் மற்றும் இதர தேவசிருஷ்டிகள் ரூபமுள்ளவைகளாகவும், ரூபம் இல்லாதவைகளாகவும் ஆகாசத்திலே இருந்து வருகிறார்கள். ஆகவே, ஆகாசத்தை சர்வ தேவமயமாகவும், சர்வ பூதமயமாகவும், சர்வ வேதமயமாகவும் சொல்லப்படுகிறது. ஆகாசத்தைப் பூஜித்தால் சகல தேவர்களையும் பூஜித்ததாக ஆகும். சுபத்தை வேண்டுபவர் ஆகாசத்தைப் பூஜிக்க வேண்டும்.

13. உதயாஸ்தமனம்

ஆகாசத்துக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. கம், வியத், வியோம், அந்தரிக்ஷம், நபஸ், அம்பரம், புஷ்கரம், ககனம் என்ற பெயர்கள் அனைத்தும் ஆகாசத்தையே குறிப்பிடுகின்றன. மேரு பர்வதம் முதலில் அங்குதான் இருக்கிறதென்று சொல்வார்கள். பூமியின் மத்தியில் இன்னொரு மேரு பர்வதம் இருக்கிறது. அதாவது மேருவின் சிகரம் ஆகாசம் வரை உயர்ந்திருக்கிறது. பூமியினுடைய மத்தியில் மேரு பர்வதம் இருக்கிறது. அந்தப் பர்வதத்தைச் சுற்றித்தான் பூலோகம் அமைந்துள்ளது. பூமி ஏழு பிரிவாக அமைந்திருக்கிறது, அந்தப் பிரிவுகள் முறையே ஜம்பு, சாகம், குசம், கிரௌஞ்சம், கௌமேதகம், சால்மலி, புஷ்கரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்தப் பிரிவுகள் ஏழையும் ஏழு சமுத்திரங்கள் சூழ்ந்திருக்கின்றன. லவணம் (உப்பு), க்ஷீரம் (பால்), ததி (தயிர்), அம்பு, கிருதம் (நெய்), இக்ஷú (கருப்பஞ் சாறு), சுத்தோகம் (சுத்தமான நீர்), என்ற ஏழு கடல்கள் அவை. இமயம், ஹேமகூடம், நிஷதம், நீலம், சுவேதம், சிருங்கவான், மானஸம் என்ற பர்வதங்கள் அந்த த்வீபங்களில் உள்ளன. மானஸ பர்வதத்தில் எட்டுத் திக்குகளிலும் எட்டுப் பட்டணங்கள் அமைந்துள்ளன. மானஸ பர்வதத்தில் நிர்ஜலமான பூமி இருக்கிறது. இந்தப் பர்வதங்களுக்கு அப்பால் லோகலோகம் எனப்பட்ட பர்வதம் இருக்கிறது. அதற்கு அப்பால் அண்ட கபாலம் இருக்கிறது. அதற்கும் அப்பால் எங்கும் ஒரே இருள்தான் சூழ்ந்திருக்கும். இந்த அண்டம் எனப்படும் முட்டையை அக்கினி, வாயு ஆகாசம், பூதாதிகள் முறையே சூழ்ந்துள்ளன. அவற்றுக்கும் அப்பால் பிரதானமான பிரகிருதி புருஷன் இருக்கிறார். அவருக்கும் மேலாக ஈசுவரன் இருக்கிறார். ஈசுவரன் இந்த உலகம் முழுமையிலும் வியாபித்திருக்கிறார். பூமிக்குக் கீழே, ஏழுலோகங்கள் உள்ளன. அவை அதலம், சுதலம், பாதாளம், தமஸ், தாலம், சுஸாலம், விசாலம் என்ற ஏழுமே. அந்த லோகங்களுக்கு அப்பால் அண்ட கபாலம் இருக்கிறது. அதற்கும் அப்பால் ஒரே இருள். அதன் பின்னர் அக்கினி வாயு, ஆகாசம், பூதாதிகள் சூழ்ந்திருக்கின்றன. அவற்றுக்கும் அப்பால் பிரகிருதி புருஷன் இருக்கிறார். அவருக்கும் மேலாக ஈசுவரன் இருக்கிறார். அண்டமாய முட்டையின் மேல் பகுதி பூமி முதலான மேலுலகங்கள் ஏழும்: கீழ்ப்பாதி அதலம் முதலான கீழுலகங்கள் ஏழும் ஆகும். மேரு பர்வதம் பூமியின் மத்தியில் அமைந்திருக்கிறது. சித்தர்களும் கந்தர்வர்களும் அம்மலையில் இருந்து வருகிறார்கள்.

அந்தப் பர்வதத்துக்கு நான்கு பொன்மயமான சிகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் உள்ளதாகும். சவுமனஸம் என்ற சிகரம் பொன்மயமானது. ஜோதிஷ்கம் என்ற சிகரம் பத்மராகம் போலப் பிரகாசிக்கும். சித்திரம் என்ற சிகரம் சர்வதாதுமயமானது. சாந்திர மாசம் என்ற சிகரம் வெள்ளி மயமானது. சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்துதான் சூரியன் உலகை ரக்ஷிக்கும் பொருட்டு உதயமாகிறார். ஆகவே, அந்தச் சிகரமே உதயகிரி என்று அழைக்கப்படும். சூரியன் உதயகிரியிலிருந்து புறப்படும்போது அவருடைய பிரகாசம் மிகுந்த கிரணங்களால் கிழக்கு மேற்குப் புறங்களிலுள்ள கொடு முடிகள் பொன்மயமாகவும் தாம்பிர மயமாகவும் பிரகாசிக்கின்றன. உதயகிரியிலிருந்து அவர் உதயமாகி ஜம்பூத்வீபத்தில் வடக்குத் திக்காகப் பிரகாசிக்கிறார். சூரியன் உத்தராயணத்தில் சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயணத்தின்போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்து உதயமாகிறார். விஷுக்களின் போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார். ஈசான்ய திக்கிலே உள்ள சிகரத்தில் பரமேச்வரன் இருக்கிறார். தென் கிழக்குத் திக்கிலே அக்கினி இருக்கிறார். நிருதி திக்கிலே பிதுருக்கள் இருக்கின்றனர். வட திக்கிலே மருத்துக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே நாராயணன் பிரம்மா முதலான தேவர்களோடு இருக்கின்றார். இந்த விதமாக சூரியன் ஆகாசத்தில் விளங்கி வருகிறார். மேருவுக்கு நான்கு திசைகளிலும் லோகபாலகர்களுடைய பட்டணங்கள் இருக்கின்றன. கிழக்கிலே தேவர்களுக்கு அதிபதியான இந்திரனுடைய பட்டணமான அமராவதி அமைந்திருக்கிறது. யமனுடைய பட்டணமான யமனி தெற்குப் புறத்தில் அமைந்துள்ளது. மேற்குப் பக்கத்தே உள்ள பட்டணமான சுகாபுரி என்பது வருணனுடைய பட்டணம் ஆகும். வடக்குத் திக்கிலே சோமன் தன்னுடைய பட்டணமான விபாபுரியில் இருந்து வருகிறான். மத்தியான்னம், அர்த்த ராத்திரி, உதயம், அஸ்தமனம் என்ற நான்கு காலங்களிலும் சூரியன் இந்தப் பட்டணங்களைச் சுற்றிச் சஞ்சாரம் செய்து உலகிலே உஷ்ணத்தை உண்டு பண்ணுகிறார்.

இந்திரனுடைய பட்டணமான அமராவதியில் மத்தியான்ன நேரமாக இருந்தால், யமனுடைய பட்டணமான தெற்கே உள்ள யமனியில் அப்போது தான் சூரியன் உதயமாவார். அந்த நேரத்தில் மேற்கே உள்ள வருண பட்டணமான சுகாபுரியில் அர்த்த ராத்திரியாக இருக்கும். வடக்கே உள்ள சோமனுடைய விபாபுரியில் அதே நேரத்தில் அஸ்தமனமான சமயமாக இருக்கும். யமனியில் மத்தியான்ன காலமானால் சுகாபுரியில் அப்போதுதான் உதய நேரமாக இருக்கும். விபாபுரியில் அந்த நேரத்தில் அர்த்த ராத்திரியாக இருக்கும். இந்திர பட்டணமான அமராவதியில் அஸ்தமான நேரமாக இருக்கும். சுகாபுரியில் மத்தியான்ன நேரமாக இருக்கும்போது விபாபுரியில் உதயகாலம் ஆகும். அமராவதியில் அர்த்தராத்திரி காலம் வந்திருக்கும். யமனியில் அஸ்தமன சமயம். அவ்வாறே விபாபுரியில் மத்தியான்ன நேரமாக இருந்தால் அமராவதியில் உதயகாலம் ஆகியிருக்கும். யமனியில் அர்த்த ராத்திரி சமயமாகவும், சுகாபுரியில் அஸ்தமன சமயமாகவும் இருக்கும். இந்தவிதமாக சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றி சஞ்சாரம் செய்து உதயம், அஸ்தமனம், அர்த்த ராத்திரி, மத்தியான்னம் என்ற காலங்களை உண்டாக்குகிறார். எந்த இடத்தில் சூரியன் உதயமாவதாக அவரைப் பார்க்கிறோமோ அப்போது உதயம் என்று சொல்லுகிறோம். அவர் ஒவ்வொரு பட்டணமாகச் சஞ்சாரம் செய்யும்போது வெகு தூரத்தில் போய்விடுவதால் அவருடைய ரூபமும், கிரணங்களும் நம்முடைய பார்வைக்குத் தெரியவில்லை. ஆகவே, அந்தக் காலத்தை நாம் இரவு நேரம் என்று குறிப்பிடுகிறோம். சூரியனுடைய சஞ்சாரத்தின் காரணமாகவே பகல் இரவு என்று உண்டாகின்றன. உதயமாகும் சூரியனை இந்திரன் பூஜிக்கிறான். மத்தியான்ன நேரத்தில் வாயு அவரை பூஜிக்கிறான். வருணனும் சந்திரனும் அவரை அஸ்தமன சமயத்தில் பூஜிக்கிறார்கள். அர்த்த ராத்திரி சமயத்தில் குபேரன் சூரியனைப் பூஜிக்கிறான். இரவின் முடிவில் பிரமன், விஷ்ணு, ருத்திரன் மூவரும் சூரியனைப் பூஜிக்கிறார்கள். ஒவ்வொரு திக்கிலும் சூரியனை அந்த அந்தத் திக்குப் பாலகர்கள் பூஜிக்கிறார்கள்.

14. சஞ்சாரமும் கிரகணங்களும்

சூரியனுடைய ரதம் பொன்மயமானது. ஒன்பதாயிரம் யோஜனை விஸ்தீரணம் உடையது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தையும் குறிக்கும். அந்த ரதத்துக்கு ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. அந்தச் சக்கரம் ஸ்ம்வத்சர மயமானது. சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களையும் குறிக்கின்றன. சக்கரத்தின் மேல்பாகமும் கீழ்ப்பாகமும் உத்தராயணத்தையும் தக்ஷிணாயணத்தையும் குறிக்கின்றன. அந்த ரதத்தை ஏழுகுதிரைகள் இழுத்துச் செல்கின்றன. காயத்திரி, திருஷ்டுபு, அனுஷ்டுபு, பிரகதி, பங்க்தி, ஜகதி, உஷ்ணிகு என்ற ஏழு சந்தஸ்ஸுகளுமே குதிரைகளாகி, ரதத்தை இழுத்துச் செல்கின்றன. சாரதிக்கு இடுப்புக்குக் கீழே அவயவங்கள் கிடையாது. பொன்மயமாக ஜொலிக்கும் அந்தத் தேரிலேறித்தான் சூரியன் நாள்தோறும் வானிலே நகருகிறார். சூரிய ரதத்தில் அவரோடு பிரஜாபதிகளான ரிஷிகள், கந்தர்வர், யக்ஷர், ராக்ஷஸர், அப்ஸரஸுக்கள், சர்ப்பங்கள் ஆகியோரும் இருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேர்களாக இரண்டு மாதங்களுக்கு ரதத்திலே பவனி வருவர். ஒரு வருடத்துக்கு ஆறு ருதுக்கள், அதாவது ஒவ்வொரு ருதுவும் இரண்டு மாதங்களாகும். ஒவ்வொரு ருதுவுக்கும் ரதத்திலே வரும் சூரியர்களும் அவரோடு இருப்பவர்களும் மாறுவார்கள். வசந்த ருதுவிலே ரதத்திலே பவனி வரும் சூரியர் தாதாவும் அரியமாவும் ஆவர். புலஸ்தியர், புலகர் என்ற பிரஜாபதிகள் இருவரும், வாசுகி, கச்சநீரன் என்ற இரு சர்ப்பங்களும் தும்புரு, நாரதர் என்ற இரு கந்தர்வர்களும், கிருதஸ்தலி, புஞ்சிகஸ்தலி என்ற இரு அப்சரஸ் மங்கைகளும் ராதகிருஷ்ணன் ரதோஜன் என்ற இரு யக்ஷர்களும், ஹேதி, பிரஹேதி என்ற இரு ராக்ஷஸர்களும் சூரியர் இருவரோடும் ரதத்திலே வருவார்கள். கிரீஷ்ம ருதுவிலே வானிலே சஞ்சரிக்கும் சூரியர்கள் மித்திரன். வருணன் ஆகிய இருவரும் ஆவர். அவர்களுடன் அத்திரி, வசிஷ்டர் என்ற இரு பிரஜாபதிகளும், தக்ஷகன், அனந்தன் என்ற இரு சர்ப்பங்களும், மேனகை, சகஜன்யை என்னும் இரு அப்ஸரஸ் மங்கையரும், ஆஹா ஹூ ஹூ என்ற கந்தர்வரும் ரதஸ்வரன், ரதசித்திரன் என்ற இரு யக்ஷர்களும், பவுருஷேயன், வதன் என்ற இரு ராக்ஷசர்களும் ரதத்திலே வருகிறார்கள்.

இந்திரன், விவஸ்வான் என்னும் சூரியர் இருவரும் வர்ஷ ருதுவிலே ஆகாயத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆங்கிரஸ், பிருகு என்ற இரண்டு பிரஜாபதிகளும், ஏலாபத்திரன், சங்கபாலன் என்ற சர்ப்பங்களும், விஸ்வாவசு, உக்கிரசேனன் என்ற கந்தர்வர்களும் ப்ரோதன், அசுமரதன் என்ற யக்ஷர்களும், பிரமலோசை, அனுமலோசை அப்ஸரஸுகளும், ராக்ஷஸர் இருவரும் அவரோடு ரதத்திலே வருகிறார்கள். சரத் ருதுவிலே சூரியர்களாக விளங்குபவர்கள் பர்ஜன்யனும், பூஷாவும் ஆவர். அவர்களோடு ரதத்திலே பாரத்வாஜர், கவுதமர் ஆகிய பிரஜாபதிகள் வருகிறார்கள். மற்றும் சித்திரசேனன், வசுருசி என்ற கந்தர்வர்களும், ஐராவதன், தனஞ்சயன் என்ற சர்ப்பங்களும், விசுவாசி, கிருதாசி என்ற அப்சரஸ் கன்னியரும், சேனசித், சுஷேனன் என்ற யக்ஷர்களும் ஆபன், வாதன் என்ற ராக்ஷஸரும் ரதத்திலேகூட வருகிறார்கள். ஹேமந்த ருதுவிலே அம்சன், பகன் என்ற இருவரும் சூரியர்களாக விளங்க, அவருடன் ரதத்திலே கச்யபர், கிரது என்ற பிரஜாபதிகள் இருவரும் மகாபத்மன், கார்க்கோடகன் என்ற சர்ப்பங்களும், சித்திராங்கதன் ஊர்ணாயு என்ற கந்தர்வர் இருவரும், பூர்வசித்தி, ஊர்வசி என்ற அப்சரஸு மங்கையர் இருவரும், தர்க்ஷயன், அரிஷ்டநேமி என்ற யக்ஷர்களும், அவஸ் பூர்ஜன் வித்யூத் என்ற ராக்ஷஸர்களும் வருகிறார்கள். சுசிர ருதுவிலே துவஷ்டாவும் விஷ்ணுவும் சூரியர்களாக ரதத்திலே பவனி வருகின்றனர். ஜமதக்கினி, விசுவாமித்திரர் என்னும் பிரஜாபதிகள் இருவரும், கம்பளன், அசுவதரன் என்ற சர்ப்பங்களும் திருதராஷ்டிரன், சூரியவர்ச்சசு என்ற இரு கந்தர்வர்களும், திலோத்தமை, ரம்பை என்ற அப்சரஸுகளும், கிருதஜித், கப்கஜித் என்னும் யக்ஷர்களும், யக்ஷப்ரேதன் பிரம்மப்ரேகன் என்ற ராக்ஷஸர்களும் அவர்களோடு ரதத்திலே வருகின்றனர். பிரஜாபதிகளான ரிஷிகள் சூரியனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கந்தர்வர்கள் கீதம் இசைத்தும், அப்சரஸ் மங்கையர் நடனமாடியும் அவருடைய மனத்துக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணுகிறார்கள். சர்ப்பங்கள் அவரைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. ராக்ஷஸர்கள் உடன் காவலாக வருகிறார்கள். வாலகில்லியர் எனப்படும் அறுபதினாயிரம் மகரிஷிகள் உதயத்திலும், அஸ்தமன காலத்திலும் சூரியனோடு இருந்து அவரை ஸ்தோத்திரம் செய்கின்றனர்.

இந்தவாறாக சூரியன் ரிஷிகளோடும், கந்தர்வர்களோடும் அப்சரஸுகளோடும், யக்ஷர்களோடும், சர்ப்பங்களோடும், ராக்ஷஸர்களோடும் இரதத்திலே பவனி வந்து உலகை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். உஷ்ணம், மழை, பயிர்கள் வளர்தல் ஆகிய காரியங்களுக்கு ஆதாரமாக இருப்பதோடு ஜீவராசிகளுடைய கர்மாக்களுக்குத் தகுந்த சுப அசுப பலன்களையும் கொடுத்து வருகிறார். மக்களுக்கு உஷ்ணத்தைத் தந்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், சந்தோஷப்படுத்திக் கொண்டும் காலாகாலத்தில் அவர்களுக்குக் கருணை காட்டிக் கொண்டு இருக்கிறார். இவர்கள் மன்வந்தரங்களில் ஒருபோதும் மாறுவதில்லை. தங்கள் தங்கள் ஸ்தானங்களில் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார்கள். ஆகவே இவர்களைத் ஸ்தானாபி தேவதைகள் என்றும் அழைப்பர். கோடைக் காலத்திலும், பனிக்காலத்திலும், வருஷா காலத்திலும் இரவிலும் பகலிலும் உஷ்ணத்தையும், பனியையும், மழையையும் கொடுத்துக் கொண்டு சூரியன் தேவர்களையும், பிதுர்க்களையும், மனிதர்களையும் திருப்திப்படுத்துகிறார். அமிர்தம் நிறைந்ததாகச் சந்திரனுடைய கலைகளை சுக்கிலப் பக்ஷத்துப் பிரதமையிலிருந்து பவுர்ணமி வரையில் அபிவிருத்திச் செய்து வருகிறார் சூரியன். அமிர்தம் நிறைந்த அந்தக் கலைகளை தேவர்கள் பதினான்கு நாட்களில் பருகுகிறார்கள். பிதுருக்களோடு சர்ப்பங்களும் தேவரிஷிகளும் அந்தக் கலையைப் பருகுகிறார்களாம். அவர் தம்முடைய வெப்பமானதும் பிரகாசமானதுமான கிரணங்களால் பூமியில் இருளைப் போக்கி மழை மூலம் பயிர்கள் அவுஷதிகள் ஆகியவற்றை வளரச் செய்து அன்ன ரசத்தால் மனிதர்களைத் திருப்தி செய்கிறார். இவ்விதம் சூரியன் தேவர்களுக்கு அரைமாதம் திருப்தி ஏற்படச் செய்கிறார். அதாவது தேவர்களுக்கு ஒரு பகல் நேரம். பிதுருக்களுக்கு ஒரு மாதம் திருப்தி ஏற்படச் செய்கிறார். மனிதர்களுடைய ஒரு மாத அளவு பிதுருக்களுக்கு ஒரு பகல் அன்றோ. அடிக்கடி அதாவது தினந்தோறும் அன்னம் அளிப்பதால் மனிதர்களுக்கு எப்போதும் திருப்தி ஏற்படச் செய்கிறார். எல்லாத் திக்குகளிலும் தம்முடைய கிரணங்களால் பிரகாசத்தை உண்டுபண்ணி சகல லோகங்களையும் அவர் இவ்வாறு ரக்ஷித்து வருகிறார். பச்சை நிறமான குதிரைகளாக உருமாறி சந்தஸ்ஸுகள் ரதத்தை இழுத்து வர சூரியன் நக்ஷத்திரங்களோடும் சந்திரனோடும் வானவீதியில் அற்புதமாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

சூரியனுடைய சஞ்சாரம் பற்றி நாரதர் இவ்வாறு கூறி வந்தபோது சாம்பன் அவரைப் பணிந்து பின்வருமாறு கேட்டான். மகரிஷே, சந்திரனுக்குக் குறைவு ஏற்பட்டு எவ்வாறு விருத்தியை அடைகிறது? கிருஷ்ணபக்ஷத்தில் சந்திரனுடைய அமிர்தமயமான கலையை தேவதைகளும் பிதுருக்களும் பருகுகின்றனர் என்று சொன்னீர்களே. அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். சாம்பனுடைய ஆர்வத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தவராய் நாரதர் கூறத் தொடங்கினார். பவுர்ணமியானது ராகை, அனுமதி என்ற இரு பிரிவுகளையுடையது. அவ்விதமாகவே அமாவாசையும் சினிவாலி, குகூ என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. அமா என்பது சந்திரனிடம் சூரியனுடைய ஸ்தானம் ஆகும். அங்கே சந்திரன் ஸ்தானம் கொண்டிருக்கும்போது அமாவாசை என்று குறிப்பிடுகிறார்கள். கலையில் குறைவு ஏதுமில்லாமல் முதலில் உதயமாகும் இரவில் சந்திரன் முன்னே செல்கிறான். பின்னால் சூரியன் வருகிறார். சூரியன் அஸ்தமிக்கும் அதே நேரத்தில் சந்திரன் உதயமாகும் இரவுக்குப் பவுர்ணிமை என்று பெயர். பவுர்ணிமையின் முதற்பகுதியில் சூரியன் சந்திரனைப் பின் தொடருவதற்குப் பிதுருக்களும் தேவதைகளும் அனுமதிக்கிறார்கள். அவ்வாறு அவர் செல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆகவே அனுமதி என்று அந்தக் காலத்தை அழைப்பர். இரவின் கடைசிப் பகுதியில் பிதுருக்களும் தேவதைகளும் சூரியனால் ரக்ஷிக்கப்படுகிறார்கள். ஆகவே அந்தக் காலத்தை ராகை என்பர். சினிவாலி என்றால் சந்திரன் குறைதலைக் குறிக்கும். அமாவாசையில் சூரியன் பிரவேசிப்பதால் சினிவாலி என்பர். கோகிலத்தின் வார்த்தை குகூ . எவ்வளவு விரைவில் அமாவாசை முடிவடைகிறதோ அந்தக் காலத்தை குகூ என்பர். அமாவாசை முடிந்ததிலிருந்து சந்திரனுக்கு நாளுக்கொரு கலையாக சூரியன் வளர்த்து வருகிறார். கிருஷ்ணபக்ஷத்திலே அமிருதமயமான அந்தக் கலைகளைத் தேவதைகளும் பிதுருக்களும் பருகி மகிழ்கின்றனர்.

பிரதமையில் சந்திரனுடைய கலையை அக்கினி பருகுகிறான். துவிதியையான இரண்டாவது நாளில் அமிர்தமயமான கலையை சூரியன் பருகுகிறார். மூன்றாவதான திரிதியையில் விசுவதேவர்கள் அக்கலையைப் பருகுகின்றனர். பிரஜாபதி சதுர்த்தி அன்று அமிருதம் நிறைந்த சந்திர கலையை அருந்தி மகிழ்கிறார். பஞ்சமியில் வருணன் சந்திர கலையைப் பருகுகிறான். இந்திரன் ஷஷ்டியான ஆறாவது தினத்தில் சந்திரனுடைய கலையை அடைகிறான். ஏழாவது நாளான சப்தமி அன்று அக்கலையைத் தேவரிஷிகள் பருகுகின்றனர். அஷ்டமி எனப்படும் எட்டாம் நாள் வசுக்கள் சந்திர கலையை அருந்தி ஆனந்தமடைகின்றனர். நவமியாகிய ஒன்பதாவது நாளில் யமன் அமிர்தம் நிறைந்ததான சந்திர கலையைப் பருகுகிறான். மருத்துக்கள் தசமியான பத்தாம் நாள் பானம் செய்கின்றனர். பதினொன்றாவது தினமான ஏகாதசி அன்று சந்திரக் கலையைப் பருகுபவர் ருத்திரன். விஷ்ணு துவாதசி எனப்படும் பன்னிரண்டாம் நாளில் அதைப் பருகுகிறார். பதின்மூன்றாம் நாளான திரயோதசியில் குபேரன் சந்திர கலையைப் பானம் செய்கிறான். பசுபதி பதினான்காம் நாள், அதாவது சதுர்த்தசி அன்று அமிர்தம் நிறைந்த சந்திர கலையைப் பருகுகிறார். பிதுருக்கள் பதினைந்தாம் நாள் அன்று சந்திரனுடைய கலையாகிய அமிருதத்தைப் பருகி மகிழ்ச்சி பெறுகின்றனர். பதினாறாவது கலை சூரியனிடத்தில் பிரவேசிக்கின்றது. அன்றைய அந்த நிகழ்ச்சியே அமாவாசை எனக் குறிப்பிடப்படுகின்றது. சந்திரனுடைய கிரணங்கள் முற்பகுதியில் சூரிய கிரணங்களில் பிரவேசிக்கின்றன. பிற்பகுதியில் ஜலத்திலே பிரவேசித்து மறைந்து போகின்றன. சந்திரனுடைய கிரணங்கள் மரங்களிலே பிரவேசிக்கும் காலத்தில் எவரும் மரங்களை வெட்டக் கூடாது. அவ்விதம் செய்வதால் அவர்களைப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும்.

ஜலத்திலே பிரவேசிக்கும் சந்திரனுடைய கிரணங்களிடமுள்ள அமிர்தம் புல்பூண்டுகள் பயிர்களுக்கு வேண்டிய ஜீவனசத்தாக மாறுகின்றது. சந்திரன் அதனால் பயிர் பச்சைகளை வளர்க்கிறான். பயிர்பச்சைகளைப் பசுக்கள் மேய்ந்து உயிர் வாழ்கின்றன. அவை மேயும் புல்பூண்டுகளின் மூலம் அமிருதம் அவற்றின் சரீரத்தை அடைந்துப் பாலாக மாறுகின்றது. அமிருத மயமான அந்தப் பாலைக் கறந்து மனிதர்கள் அதிலிருந்து எடுக்கும் மணம் நிறைந்த நெய்யை அக்கினியில் வார்த்து தேவதைகளைக் குறித்தும் தவம் செய்கிறார்கள். அக்கினியில் போடப்பட்ட அது புகையாகி சூரிய கிரணங்களால் கிரகிக்கப்பட்டு மீண்டும் சந்திரனை அடைகிறது. சூரியன் அமிருதத்தால் சந்திரனுடைய கலைகளை வளரச் செய்கிறார். இந்தவாறாக சூரியன் தம்முடைய கிரணங்களால் சந்திரனை சுக்கில பக்ஷத்தில் நாள்தோறும் விருத்தி செய்விக்கிறார். கிருஷ்ண பக்ஷத்தில் தேவதைகளும் பிதுருக்களும் அமிருதம் நிறைந்த சந்திரனுடைய கலைகளைப் பருகித் திருப்தி அடைகிறார்கள். நாரதர் இவ்விதம் கூறி முடித்து, சாம்பனைப் பார்த்து ஹே கிருஷ்ண புத்திரா, நீ மித்திர வனத்துக்குச் சென்று சூரியனைக் குறித்து உபாசித்து வா. அவருடைய அனுக்கிரகத்தால் உன்னைப் பீடித்துள்ள இந்தக் கொடிய ரோகம் தானே அகன்று விடும் என்றார். அப்போது சாம்பன் அவரை நமஸ்காரம் செய்து கைகளைக் கூப்பியவனாய், மகரிஷே, தங்களிடமிருந்து இன்னுமொரு விஷயத்தை அறிய விரும்புகிறேன். சூரிய லோகத்திற்குத் தாங்கள் சென்றிருந்தபோது ஆச்சரியப்படத்தக்க எத்தனையோ விஷயங்களைக் கண்டிருப்பீர்கள். ஒரு விஷயத்தை நினைக்கும் போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. அந்தச் சந்தேகத்தை தாங்கள் போக்க வேண்டும் என்றான். ஜாம்பவதி குமார, உன் மனத்திலே தோன்றியுள்ள சந்தேகத்தைத் தாராளமாகக் கூறு. அதை நான் தீர்த்து வைக்கிறேன் என்றார் நாரதர். மகரிஷே, சூரிய பகவான் ஒளிப் பிழம்பாக இருக்கிறார் என்று கூறினீர்கள். கேவலம், ராகு என்பவன் இருளை உடையவன். அவன் சூரியனை விழுங்குகிறான் என்றார்கள். சூரியன் உதயமாகும்போதே உலகெங்கிலும் சூழ்ந்திருக்கும் இருள் தானே விலகி ஓடுகின்றது. அப்படியிருக்க அவன் எவ்வாறு சூரியனுடைய பிரகாசத்தை மறைத்து விடுகிறான்? தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று பணிவுடன் தெரிவித்தான் சாம்பன்.

சாம்பா, தெரிந்து கொள்ள முடியாததும், காண முடியாததுமாகவும் மகாத்மாவான ஞானிகளால் மட்டுமே நன்கு உணரக்கூடியதாகவும் சூரியனுக்குக் கிரகணம் எனப்படும் இந்த ராகுவின் சேர்க்கையைப் பற்றிக் கூறுகிறேன், கேள் என்று ஆரம்பித்தார் நாரத மகரிஷி. ராகுவால் சூரியன் விழுங்கப்படுகிறார் என்று சொல்லப்படுவது விசித்திரமே. ஒளிப்பிழம்பாக மிகுந்த உஷ்ணம் நிறைந்த கிரணங்களோடு பிரகாசிக்கும் சூரியனை அருகில் நெருங்குவதே கடினம். அவ்விதமிருக்க ராகுவுக்கு அந்தப் பிரகாசத்தை விழுங்குவதற்குச் சக்தி ஏது? சூரியனுடைய தேஜஸ்ஸுடன் பிரகாசிக்கும் கிரணங்களையே மறைக்கிறான். ராகுவால் பீடிக்கப்பட்ட சூரியனுக்கு அதன் காரணமாக எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. ராகுவினால் விடப்பட்டதும் முன்னிலும் மிகுந்த பிரகாசத்துடனேயே அவர் பிரகாசிக்கின்றார். எல்லா பூதங்களும் சாப்பிடுவதற்காகவே, உணவாக, பிரமன் சந்திரனைப் படைத்தார். சூரியன் சந்திரனை அமிருதத்தால் வளர்க்கிறார். சந்திரனுடைய தேஜஸான அமிருதத்தை எல்லாத் தேவதைகளும் ஜலமயமாக அருந்துகின்றனர். ராகுவுக்கும் பிரமர் ஒரு பாகத்தை சிருஷ்டி செய்திருக்கிறார். பிதுருக்கள் ஸ்வதா மயமாய் அருந்துகின்றனர். அதைப் பருகவே அவன் பர்வதத்தில் வருகிறான். அவன் பூமியினுடைய இருட்டு மயமான் சாயையால் மறைக்கிறான். சுக்கில பக்ஷத்தில் அவன் சந்திரனையும் கிருஷ்ணபக்ஷத்தில் சூரியனையும் வந்து அடைகிறான். அவனால் பீடிக்கப்பட்ட சந்திரனும் அவனால் விடப்பட்டபோது எவ்விதக் குறைபாடும் இல்லாமல் முன்னிலும் அதிகப் பிரகாசத்துடன் ஜொலிக்கிறான். நிர்மலமான சந்திர மண்டலத்தை உடையவனாக விளங்குகிறான்.

பசு தன் மடியிலிருந்து பாலை எவ்வாறு சுரக்கிறதோ அவ்வாறே சந்திரன் அமிருதத்தைப் பொழிகிறான். தாயாருடைய பாலைச் சாப்பிட்டுக் குழந்தைகள் திருப்தியடைவது போல, அந்த அமிருதத்தைத் தேவதைகள் பருகி ஆனந்தமடைகின்றனர். ராகுவின் சேர்க்கையானது முழுவதுமோ, பாதியாகவோ, மூன்றில் ஒரு பகுதியாகவோ, கால் பங்காகவோ, அதையும் விடக் குறைந்த அளவு உள்ளதாகவோ இருக்கக்கூடும். கீழே ராகு; மேலே சந்திரன்; சந்திரனுக்கும் மேலே சூரியன்; இவ்விதமாகச் சஞ்சாரம் செய்யும்போது சூரியன் பீடிக்கப்படுகிறார். ராகு சூரியனுடன் இருக்கும்போது சந்திரன் மறைக்கப்படுகிறான். ராகு சந்திரனோடு சேர்ந்தாலும், சூரியனோடு சேர்ந்தாலும் ஏற்படும் மறைப்பானது தொடர்ந்து இருக்காது. விரைவிலேயே சூரியனுடைய தேஜஸ்ஸால் தகிக்கப்பட்டு அந்த இருள் மறைந்து விடுகிறது. சேற்றினால் அழுக்காக்கப்பட்ட வெண்மையான வஸ்திரம் வெளுக்கப்பட்டதும் அந்த அழுக்கானது போக்கப்பட்டதாய் நிர்மலமாக விளங்குவது போல ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திர சூரியர்கள் அந்தக் காலம் நீங்கியதும் களங்கம் ஏதுமின்றி நிர்மலமாகப் பிரகாசிக்கிறார்கள். சந்திர கிரகண காலத்திலும்; சூரிய கிரகண காலத்திலும் பிராமணர்கள் சூரியனையும் சந்திரனையும் பணிந்து சாந்தி பண்ணுவார்கள். ஸ்நானம் செய்து ஜபம் தியானம் முதலியன செய்வது எல்லா விதத்திலும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது. பல மடங்கு பயன்களைத் தரவல்லதாம். அந்தக் காலத்தில் பகவானுடைய மகிமைகளைக் காதால் கேட்டும், படித்தும் பிறருக்குச் சொல்லியும் தங்கள் பாபங்களிலிருந்து விடுபட்டுப் பரிசுத்தர்களாக ஆகிறார்கள். இவ்விதம் சூரிய சந்திரர்களுக்கு அவர்களுடைய பிரகாசத்துக்கு ராகுவால் களங்கம் ஏற்படுவதைச் சாம்பனுக்கு நாரதர் விவரித்தார். வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ஹே ராஜன், இது வரை சூரியனுடைய பிரபாவத்தைச் சாம்பனுக்கு நாரதர் எடுத்துக் கூறியதை நான் சொல்லக் கேட்டாய். அவருடைய உபதேசப் படியே சாம்பன் மித்திரவனம் சென்று தன்னைப் பற்றியிருக்கும் பயங்கரமான ரோகத்தை நீக்கிக் கொண்டதைப் பற்றி மேலே சொல்லுகிறேன் கேள். இவ்விதம் மகரிஷீ சொல்லிவிட்டு அந்த விருந்தாந்தத்தைத் தொடர்ந்தார்.

15. சாம்பனுக்கு அருளிய சூரியன்

ராகு சூரியனைப் பற்றுவதால் அவருக்குத் தோஷம் ஏதும் ஏற்படுவதில்லை என்பதை விவரித்த நாரதர் சாம்பனை மித்திர வனம் சென்று சூரியனை உபாசிக்குமாறும் அவருடைய அனுகிரகத்துக்கு அவன் பாத்திரமாவான் என்றும் ஆசீர்வதித்தார். பின்னர் அவனிடம் விடைபெற்று அவர் புறப்பட்டார். நாரதர் புறப்பட்டுச் சென்றதும் சாம்பன் தன் தந்தையாகிய கிருஷ்ணனைத் தேடிச் சென்று அவரை நமஸ்கரித்தான். குமாரா என்ன வேண்டும்? என்று பரிவுடன் கேட்டார் கிருஷ்ணன். தந்தையே, இந்தக் கொடிய ரோகத்தினால் பீடிக்கப்பட்டுள்ள நான் மிகுந்த அவமானத்தை அடைந்தவனாக இருக்கிறேன். வைத்தியத்தாலும் அவுஷதிகளாலும் இதற்கு சாந்தி ஏற்படாது. என்னைப் பீடித்துள்ள இந்த நோயிலிருந்து எவ்வளவு விரைவில் விடுபட முடியுமோ அத்தனை சீக்கிரமாகக் குணமடைய விரும்புகிறேன். தாங்கள் கூறியபடியே நாரத மகரிஷியைச் சந்தித்து அவருடைய ஆலோசனையைப் பெற்றுள்ளேன். மித்திரவனம் சென்று சூரிய பகவானை ஆராதிக்குமாறும், அவர் அனுக்கிரகத்தால் என் நோய் நீங்கிவிடுமென்றும் ஆசீர்வாதம் செய்தார். காட்டுக்குச் சென்று கதிரவனை ஆராதிக்கத் தாங்களும் எனக்கு மனமுவந்து அனுமதி தரவேண்டும் என்று கோரினான் சாம்பன். கிருஷ்ணன் பரிவோடு குமாரனுடைய எண்ணம் பூரணமாக நிறைவேறும் என்று ஆசீர்வதித்து, கானகம் செல்ல விடை கொடுத்தார். சாம்பன் தந்தையைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டான்.

சந்திரபாகா நதியைக் கடந்து மித்திரவனத்தை அடைந்த சாம்பன் சூரியனைக் குறித்து பக்தியோடு தியானத்தைத் தொடங்கினான். மூவுலகங்களிலும் உள்ளவர்கள் கொண்டாடத் தகுந்த வகையில் அவன் மனதை ஒரு நிலைப்படுத்திப் பகவானை ஆராதித்து வந்தான். அவன் மேற்கொண்ட கடுமையான விதி முறைகளால் அவன் தேகம் இளைத்து விட்டது. நான்கு வேதங்களையும் மற்றும் மங்களகரமான ஸ்தோத்திரங்களையும் நிலைத்த மனத்தோடு கூறி அவன் சூரியனைத் தியானித்து வருகையில் பகவானுடைய அனுக்கிரகத்தால் அவன் சூரியனைப் போலத் தேஜஸ்ஸுடன் விளங்கலானான். ஹே பிரபோ, தங்களைக் காட்டிலும் வேறு தெய்வம் இல்லை. பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்று சொல்லப்படும் மூவரும் தாங்களே அன்றி வேறு தெய்வங்கள் இல்லை. தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும், ராக்ஷஸர்களும் உங்களை ஸ்தோத்திரம் செய்து உங்களால் ரக்ஷிக்கப்பட்டு வருகிறார்கள். ரிக், யஜுர், சாமம் எனப்பட்ட மூன்று வேதங்களும் உங்களிடத்தில் இருக்கின்றன. தியானம் செய்பவர்களுக்கும் அவர்கள் விருப்பப்படி தரிசனம் தந்து அருளுகிறீர்கள். மோக்ஷத்தை வேண்டுபவர்களுக்கு மோக்ஷத்தைத் தருகிறீர்கள். உம்மை ஆராதிப்பவர் உம்மால் ரக்ஷிக்கப்பட்டதில்லை என்ற பேச்சே கிடையாதன்றோ என்று பலவாறாகப் பிரார்த்தித்தான் சாம்பன்.

சாம்பனுடைய பிரார்த்தனையால் மிகவும் சந்தோஷம் அடைந்த சூரியன் அவனுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் அவன் முன்பு தோன்றினார். கோடி சூரியப் பிரகாசத்தோடு தன் முன்பு தோன்றிய சூரியனைக் கண்டதும் சாம்பனுடைய மேனி சிலிர்த்தது. பக்தியால் அவன் நேத்திரங்கள் இரண்டும் ஆனந்தபாஷ்பத்தைப் பெருக் கெடுத்தன. உடல் நடுங்க இரு கைகளையும் கூப்பியவனாய் நெடுஞ்சாண்கிடையாய்த் தரையில் விழுந்து வணங்கி எழுந்தான். பகவான் தன்மீது இரக்கம் கொண்டு தரிசனம் தந்ததை நினைத்து நினைத்து அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது. பகவானுடைய திவ்விய ரூபத்தைப் பருகி ஆனந்தப் பரவசனாகி நின்றான். அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. பகவான் மெல்லக் குறுநகை செய்தவராய், ஜாம்பாவதி புத்திரா, உன் தவத்தாலும், ஸ்தோத்திரங்களாலும் நான் மிகவும் சந்தோஷமடைந்தவனாயிருக்கிறேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள், தருகிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். சாம்பன் பகவானை மறுபடியும் நமஸ்கரித்து, பிரபோ, பாஸ்கரா, தங்களுடைய தரிசன பாக்கியம் ஒன்றே போதுமே. தங்களைத் தரிசித்தவர் வேறு எந்த வரத்தைத்தான் யாசிப்பர்? என்று பணிவுடன் தெரிவித்தான். முகம் மலர்ந்த சூரியன், சாம்பா, நான் உன்னால் சந்தோஷப்படச் செய்தவனாக இருக்கிறேன். ஆகவே, நீ உனக்குத் தேவையான வரத்தைக் கேள், தருகிறேன் என்று மறுபடியும் வற்புறுத்தினார். பிரபோ, தங்கள் கருணையை எவ்வாறு எடுத்துச் சொல்வது? தாங்கள் விரும்பும் பக்ஷத்தில் அடியேனுக்கு இரண்டு வரம் தர வேண்டும் என்று கோரினான் சாம்பன். கிருஷ்ணபுத்திரா, தாராளமாகக் கேள் என்றார் சூரியன். பிரபோ, கருணாகரா, நான் வேண்டுவது இதுதான். தங்களிடம் எனக்குப் பக்தி குன்றாதிருக்குமாறு அருள் செய்வதோடு தாங்கள் நாள்தோறும் எனக்குத் தரிசனம் தரவேண்டும். இரண்டாவதாக நான் வேண்டுவது என் தேகத்தில் பற்றியிருக்கும் இந்த ரோகம் நீங்க வேண்டும். சாம்பனுடைய விருப்பத்தைக் கேட்ட பகவான் அவன் விருப்பம் தடையின்றி நிறைவேறும் என்று அனுக்கிரகம் செய்தார். அந்த க்ஷணமே அவனுடைய உடலிலே அருவருப்புத் தரும் வண்ணம் பீடித்திருந்த ரோகம் நீங்கி விட்டது. அவனுடைய தேகம் பொன்னிறம் கொண்டு பிரகாசித்தது. அவன் அழகு முன்பிருந்ததை விடப் பன்மடங்கு பெருகியிருந்தது. சாம்பன் மேனி புளகாங்கிதம் அடைய அவரைப் பலமுறை நமஸ்கரித்தான்.

சூரியன் சாம்பனை அன்புடன் அழைத்தார். சாம்பா, உன்னுடைய பெயர் பூவுலகிலே மிகவும் பிரசித்தி அடையப் போகிறது. இந்தப் சந்திரபாகா நதிக் கரையிலே என்னைப் பிரதிஷ்டைச் செய்து ஆராதிப்பாயாக. இந்தப் பிரதேசத்திலே உன் பெயரைக் கொண்டே சாம்பபுரம் என்ற நகரம் எழும்பட்டும். இங்கு என்னை ஆராதிப்பவர்கள் உன்னைப்போல நன்மையடைந்து விளங்குவார்கள். என்னிடத்தில் உனக்குக் குறைவற்ற பக்தி இருக்கும். உனக்குத் தினமும் ஸ்வப்ன தரிசனம் தருகிறேன். இவ்வாறு அனுக்கிரகித்த சூரியபகவான் அங்கிருந்து அந்தர்தானமானார்.

16. நதியிலே கிடைத்த பிரதிமை

பிருகத்பலன் வசிஷ்டரைப் பணிந்து, மகரிஷே, என் மனம் சூரியனுடைய மகிமைகளைக் கேட்க இன்னமும் விழைகிறது. சாம்பனுக்கு அனுக்கிரகம் ஏற்பட்டது என்பதோடு நிறுத்தி விட்டீர்களே. அவன் சந்திரபாகா நதி தீரத்திலே சூரியனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தானா? அந்த விவரங்கள் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தயவு செய்து கூற வேண்டும் என்று கேட்டான். ஆர்வம் நிறைந்த அரசனுடைய வார்த்தைகளால் சந்தோஷமடைந்து வசிஷ்டரும், ஹே ராஜன், உன் உள்ளக் கிடக்கையை நான் நன்கு உணருகிறேன். நான் சொல்லப்போவதைக் கவனமாகக் கேட்பாயாக என்றார். சாம்பனுடைய பக்தி நிறைந்த ஸ்தோத்திரங்களால் பெரிதும் ஆனந்தமடைந்த சூரியன் அவனைப் பரிவுடன் நோக்கியவராய்ச் சொன்னார். ஹே கிருஷ்ண குமார, உன்னுடைய பக்தி நிறைந்த உள்ளத்தால் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன. எவனொருவன் என்னை ஆயிரம் நாமங்களால் பூஜிக்கிறானோ அவன் விஷயத்தில் நான் பரமதிருப்தி அடைகிறேன். அவன் மனோபீஷ்டங்கள் என்னால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. இப்போது நான் மிகவும் ரகஸ்யமானதும் எவருக்கும் தெரிய முடியாததுமான ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். ஆயிரம் நாமங்களில் இரு பத்தி ஒன்று மிகவும் விசேஷமானவை. அவற்றைக் கூறி என்னைப் பூஜித்தாலே போதும். அந்த இருபத்தோரு நாமங்களால் என்னைப் பூஜிப்பதாலேயே ஆயிரம் நாமங்களில் பூஜித்த திருப்தியை நான் அடைகிறேன். ஆயிரம் நாமங்களால் பூஜிப்பதால் ஒருவன் அடையும் பலன் முழுவதையும் இந்த இருபத்தோரு நாமங்களைக் கூறிப் பூஜிப்பதாலேயே அடையலாம்.

ஓம் விகர்த்ததோ விவஸ்வாம் ஸ்ச
மார்த்தண்டோ பாஸ்கரோ ரவி:
லோகப்பி ரகாச: ஸ்ரீமாம்
லோக சக்ஷúர் க்ரஹேஸ்வர:

லோக சாக்ஷீ த்ரிலோகேச
கர்த்தா ஹர்த்தா தமிஸரஹ
தபனஸ் தாபனஸ் சைவ
சுசி: ஸப்தாஸ்வ வாஹன:

கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மா ச
ஸர்வதேவ நமஸ்கிருத:

(விகர்த்தந;, விவஸ்வான், மார்த்தண்ட;, பாஸ்கர: ரவி:, லோகப் பிரகாச:, ஸ்ரீமான், லோக சக்ஷú:, கிரஹேச்வர:, லோக சாக்ஷி, த்ரிலோசே:, கர்த்தா, ஹர்த்தா, தமிஸ்ர:, தபன:, தாபன:, சுசி:, ஸப்தரஸ்வ வாகன:, கபஸ்திஹஸ்த:, பிரம்மா ஸர்வ தேவநமஸ்கிருத:)

இந்த இருபத்தோரு நாமங்களைக் கூறி எவனொருவன் பக்தியோடு என்னைத் தியானிக்கிறானோ அவன் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவான். அவன் சரீரத்தைப் பற்றியுள்ள நோய்கள் நீங்கிவிடும். இந்த அற்புத ஸ்தோத்திரத்துக்கு ஸதவராஜம் என்று பெயர். இந்த ஸ்தோத்திரம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது. காலையிலும் மாலையிலும் பக்தியோடு இந்த நாமங்களைக் கூறி என்னைத் தியானிப்பவன் ஸகல பாபங்களிலிருந்தும் விடுபட்டவனாகிறான். மனசாலோ, வாயாலோ, சரீரத்தாலோ செய்த பாபங்கள் அனைத்தும் என்னை ஒரு முறை பக்தியோடு ஆராதிப்பதால் நசித்துவிடும். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பது மட்டுமல்ல; இதைக் கூறி ஹோமமும் செய்யலாம். காலை மாலை இரு சந்திகளிலும் இந்த ஹோமத்தைச் செய்யவேண்டும். அர்க்கியம் ஸ்நானம் தூபதீப நைவேத்தியங்கள் பிரதக்ஷிண நமஸ்காரங்கள் ஆகிய பதினாறு உபசார முறைகளோடு இந்த ஹோமத்தைச் செய்பவர் சகல பாபங்களிலிருந்தும் விடுபட்டவராகிறார். எல்லாவித நோய்களும் அவரை விட்டு நீங்கிவிடுகின்றன. இவ்வாறு சூரியன் சாம்பனுக்கு எடுத்துக்கூறி அவனுக்கு நோய் நீங்குமாறு அனுக்கிரகம் செய்தார். பின்னர் அவனிடம் விடைபெற்று அங்கிருந்து அந்தர்தானமானார்.

சூரியனுடைய அனுக்கிரகத்தால் சாம்பனுடைய மேனி அதன் முந்தைய ரூபத்தை அடைந்தது. உடலிலே பற்றியிருந்த நோய் இருந்த இடம் தெரியாது மறைந்து விட்டது. அதனால் அவன் மிகுந்த ஆனந்தத்தைப் பெற்றான். தனக்கு அருள் செய்த இறைவன் மனம் களிப்புறும்படி மற்றவர்களோடு சேர்ந்து அவரை ஆராதிக்க எண்ணம் கொண்டான். மித்திரவனத்துக்கு அவனோடு வந்திருந்த மகரிஷிகளையும் அழைத்துக் கொண்டு நதி தீரத்துக்குச் சென்றான். சந்திரபாகா நதியை அடைந்ததும் சாம்பன் பகவானை மனத்திலே தியானம் செய்தவனாய் நீரிலே இறங்கி விதிப்படி நீராடலானான். நீரிலே பிரதிபலித்த சூரிய பிம்பத்தைக் கண்டதும் அவன் மனம் அவரை நேரில் கண்டதுபோல் நெகிழ்ந்தது. அதே சமயம் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது; நீரிலே தெரிந்த அந்த பிம்பந்தத்திலிருந்து ஒரு பிரதிமையை சாம்பன் இரு கைகளாலும் வாரி எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு பக்தியோடு மார்பிலே சேர்த்து அணைத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்பு அவனுக்கு பகவான் தரிசனம் கொடுத்தபோது எவ்வாறு தோற்றம் அளித்தாரோ அவ்வாறே அந்தப் பிரதிமையும் இருந்தது. பகவானுடைய விருப்பத்துக்கு ஏற்ப அந்த நதி தீரத்திலே அவருக்கு ஓர் கோயில் எடுப்பித்து அதிலே விதிப்படி அவரைப் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று சாம்பன் எண்ணினான். அதன் எண்ணம் நன்கு நிறைவேறும் என்பதை ஆசீர்வதிப்பது போலப் பிரதிமை கிடைத்திருக்கிறது என்றே அவன் நினைத்தான். பக்தி மேலிட்டவனாய் அவன் நீராடலை முடித்துக் கொண்டு அந்தப் பிரதிமையை சிரசிலே சுமந்து கொண்டு மற்றவர்கள் உடன் வர தன்னுடைய ஆசிரமத்தை அடைந்தான். அங்கே அந்தப் பிரதிமையை வைத்து அதற்குப் பலவித உபசாரங்களையும் செய்தான். பின்னர் இருகைகளையும் கூப்பியவனாய் அந்தப் பிரதிமையைப் பார்த்துப் பணிவுடன் கேட்டான்.

பிரதிபா, தங்களை அடையப் பெற்ற நான் பெரும் பாக்கியசாலி அன்றோ? இந்தப் பாக்கியம் வேறு யாருக்குக் கிட்டியிருக்கிறது? என்னிடத்தில் தாங்கள் கொண்டுள்ள கருணையை எப்படித்தான் எடுத்துரைப்பேன்? தங்களுக்கு கோயில் எழுப்பி ஆராதனைகளைச் செய்ய வேண்டும் என்று மனத்தாலே நினைத்தேன். அந்தக் கணமே தங்களுடைய பிரதிமை எனக்குக் கிட்டியிருப்பது என் எண்ணம் நிறைவேறும் என்பதையே காட்டுகிறது. அதற்குத் தங்களுடைய பரிபூரண ஆசி இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஹே பிரபோ, நான் ஒன்றை அறிய விரும்புகிறேன். தயவுசெய்து அனுக்கிரகம் செய்யவேண்டும். இந்தப் பிரதிமை யாரால் செய்யப்பட்டது? என்னிடம் சேருவதற்கு முன்பு எங்கு இருந்தது? என்று பிரார்த்தித்தான். அப்போது பகவான் சூரியன் அசிரீரியாக சாம்பனுடைய கேள்விகளுக்கான விடையைத் தெரிவித்தார். ஹே ஜாம்பவதி புத்திரா, நீ அறிய விரும்பியதைக் கூறுகிறேன், கேள். இதற்கு முன்பு என்னுடைய சொரூபம் மிகவும் அதிகமாக இருந்தது. என் பிரகாசத்தைக் காண முடியாமலும் என் கிரணங்களின் வெப்பத்தைத் தாங்கமாட்டாமலும் ஸகல, ஜீவராசிகளும் துன்பமடைந்தன. அனைவரும் ஒன்று கூடித் தங்கள் துன்பத்தை எடுத்துக் கூறி என் சொரூபம் அனைவருக்கும் கஷ்டத்தைக் கொடுக்காததாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். நானும் அவர்கள் படும் துன்பத்தை உணர்ந்து அவர்கள் சிரமத்தைப் போக்க விரும்பினேன். அவர்களால் பொறுக்கக் கூடிய வகையில் என் கிரணங்களின் பிரகாசத்தையும் உஷ்ணத்தையும் குறைத்துக் கொள்வதாக அவர்களுக்கு ஆறுதல் கொடுத்தேன். மகா தபஸ்வியான விஸ்வகர்மாவை அழைத்து என் முடிவைத் தெரிவித்து என் வெப்பத்தைக் குறைக்க முயற்சிகளைத் தொடங்குமாறு சொன்னேன். என்னிடம் பக்தி கொண்ட அவனும் அவ்வாறே செய்து முடித்தான். சாகத்வீபத்துக்கு என்னை அழைத்துச் சென்று அங்கே சாணைக் கல்லில் என்னை ஏற்றி சாணை பிடித்து என் வெப்பத்தைக் குறைத்தான். அது முதல் அனைவரும் துன்பம் நீங்கியவர்களாய் என்னைக் கொண்டாடி வருகிறார்கள். சாகத்வீபத்திலே அன்று முதல் நான் பிரத்தியக்ஷமாய் இருந்து கொண்டு அங்கே இருப்பவர்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகிறேன்.

அந்த சாகத்வீபத்திலே தான் இந்தப் பிரதிமை உண்டாயிற்று. என்னிடம் அளவற்ற பக்தி கொண்டு என்னை ஆராதிக்க நீ விரும்பியதால் இந்தப் பிரதிமை உன்னை அடையச் செய்தேன். சாகத்வீபத்திலிருந்து இந்தப் பிரதிமை ஹிமாச்சலத்தின் சரிவிலே மித்திர வனத்தில் மிகவும் போற்றத்தக்கதான சந்திரபாகா நதிக்கரையில் நீராடுகையில் உனக்குக் கிடைக்குமாறு நான்தான் செய்தேன். என் சான்னித்தியத்தை உடைய இந்தப் பிரதிமையை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து உதயகாலம், மத்தியான்னம், சாயங்காலம் என்ற மூன்று காலங்களிலும் பக்தியுடன் பூஜை செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய். இங்கேயே நான் பரம திருப்தியோடு இருந்து எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்து வருவேன். இவ்வாறு சூரியன் அரிசீரியாகக் கூறியபோது சாம்பன் சொல்ல முடியாத, மகிழ்ச்சிக்குள்ளானான். பகவானுடைய பிரதிமையை அந்த ஆசிரமத்திலேயே பிரதிஷ்டை செய்து விதிப்படி ஆராதனைகளைச் செய்ய ஏற்பாடுகளில் முனைந்தான். அப்போது அவன் உள்ளம் நாரதரை எண்ணியது. அவருடைய ஆசீர்வாதத்தால் அன்றோ, அவனைப் பீடித்திருந்த கொடிய ரோகம் நீங்கியதோடு, சூரியனையும் பிரத்தியக்ஷமாகத் தரிசிக்க முடிந்தது. அவரும் அந்தச் சமயத்தில் உடன் இருந்தால் எத்தனை மங்களகரமாக இருக்கும் என்று நினைத்தான் சாம்பன். அவன் நினைத்ததற்கு ஏற்ப நாரதரும் அங்கே வந்து சேர்ந்தார். சாம்பன் அவரை வரவேற்று அர்க்கியம் முதலான கொடுத்து உபசாரம் செய்தான். உடலைப் பற்றியிருந்த அருவருப்பான நோய் நீங்கப் பெற்றுப் பொன்னிறமாக ஜொலிக்கும் தேகத்தோடு இருக்கும் அவனைப் பார்த்து நாரதர் மிக்க சந்தோஷமடைந்தார். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டவனாய் சாம்பன் அவரைப் பார்த்துச் சொன்னான்; மகானுபாவரே, தங்கள் ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் உபதேசமும் வீண்போகவில்லை. அடியேனைப் பெரும் பாக்கியசாலியாக ஆக்கிவிட்டன. தாங்கள் தெரிவித்தவாறே நான் பகவானை உபாசித்து அவருடைய தரிசனத்தைப் பெற்றேன். அவருடைய தரிசன பாக்கியத்தாலேயே என் ரோகமும் நீங்கி விட்டது. அவருடைய அனுக்கிரகத்தால் சாகத்வீபத்திலுள்ள இந்தப் பிரதிதமை சந்திரபாகா நதியிலே நீராடும் போது என்னை வந்தடைந்தது. இப்பிரதிமையை இங்கே பிரதிஷ்டை செய்து பகவானுக்கு நித்திய ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இந்தச் சமயத்தில் தாங்கள் வந்திருப்பது என் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பின்னர் சாம்பன் துவாரகையிலிருந்து புறப்பட்டது முதல் நடந்த சம்பவங்களை நாரதருக்கு விவரமாகத் தெரிவித்தான். பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாகிவிட்ட அவனை நாரதர் மிகவும் பாராட்டினார்.

17. சாக த்வீபத்தில் சாம்பன்

சாம்பன் மறுபடியும் நாரதரைப் பார்த்து வினயத்தோடு கூறலானான். மகரிஷே, மகிழ்ச்சியால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என் உள்ளத்தில் சிறு கவலையும் இருக்கிறது. பகவானுடைய பேரருளால் கிடைக்கப் பெற்ற இந்தப் பிரதிமைக்கு நித்திய பூஜைகள் ஏற்பாடுகள் செய்து அதனால் இவ்வுலகிலே மற்றவர்களும் அப்பெருமானுடைய கருணாகடாக்ஷத்துக்குப் பாத்திரராக ஆகவேண்டுமென ஆசைப்படுகிறேன். ஆனால் பகவானை விதிப்படி ஆராதனைகள் செய்ய அவை அனைத்தும் தெரிந்தவராக ஒருவர் கிடைக்க வேண்டுமே. அவ்வாறு கிடைக்கக் கூடியவர் மிகவும் யோக்கியமானவராக இருக்க வேண்டும் அல்லவா? அப்படிப்பட்டவர் யாராவது இருக்கிறார்களா? என்மீது கருணை கொண்டு இதைக் கூறவேண்டும்? ஹே சாம்பா!... என்று அன்போடு அழைத்த நாரதர் மேலும் சொன்னார்.

பூஜைக்காகத்தனத்தைப் பெற்றுக்கொண்டு பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிராமணர்கள் இங்கே இல்லை. ஏனென்றால் அவர்களுக்குச் செல்வத்தின் விஷயத்தில் குறைவு ஏதும் கிடையாது. வேண்டிய தனம் அவர்களிடம் இருக்கிறது. ஆகவே பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் வரமாட்டார்கள். மேலும், பூஜாகிரமங்கள் ஏதும் தெரியாமல் பேராசையால் உந்தப்பட்டுப் பூஜை செய்ய வருபவர்கள் பந்தியில் சமமாக உட்காரவைத்து உணவு பரிமாறத் தகுந்தவர்கள் அல்லர். அவர்களைத் தேவலகர் என்று அழைப்பர். பூஜாவிதானம் தெரியாமல் பணத்தின் மீது ஆசை கொண்டு தேவ சொத்தைக் கைக்கொள்ளுபவர்கள் பதிதர்கள் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. அவர்கள், புகழத் தகுந்த யோக்கியதை இல்லாதவர்கள். எவன் பேராசையால் பிராமணர்களுடையவும், பகவானுடையவும் சொத்தைச் சாப்பிடுகிறானோ, அவன் பரலோகத்தில் கழுகு சாப்பிட்ட மீதத்தையே உணவாகக் கொள்ளுவான். ஆகவே, எல்லா வகையிலும் தேர்ந்தவனாகவே பகவானுடைய பூஜைகளைச் செய்யத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞானவானாகவும், பூஜை வழிமுறைகள் தெரிந்தவனாகவும், பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவனாகவும், யோக்கியமாக நடந்து கொள்பவனாகவும் இருப்பவனையே பூஜைக்கு நியமிக்க வேண்டும். ஆகவே, நீ அந்தப் பிம்பத்தையே கேள், பகவானே உனக்கு அதைத் தெரிவிப்பார். நாரதர் கூறியவாறு சாம்பன் பிரதிமையை வணங்கி அதைக் கேட்டான். பிரபோ, தங்கள் பூஜைக்கு ஏற்றவர்கள் இங்கு யாரும் இல்லை. பூஜாவிதானம் தெரிந்தவர்களே நியமிக்கப்பட வேண்டியது மறை அல்லவா. பாஸ்கரா, என்மீது தயவுசெய்து தாங்களே தெரிவிக்க வேண்டும். தங்கள் பூஜைக்கு ஏற்றவர் எங்கிருக்கிறார்கள் எனக் கூறினால் அங்குச் சென்று அவர்களை அழைத்து வருகிறேன். பிரதிமையிலிருந்து பகவான் மறுபடியும் அசரீரியாக சாம்பனுக்குப் பதில் அளித்தார்.

ஜம்பூ த்வீபத்தைச் சுற்றிலும் உப்புக்கடல் சூழ்ந்திருக்கிறது. அதற்கு அப்பால் இருப்பது சாகத்வீபம். அதைச் சுற்றிப் பாற்கடல் அமைந்திருக்கிறது. இங்குள்ளதுபோல் அங்கேயும் நான்கு வருணத்தார்கள் இருக்கின்றனர். பிராம்மணர்கள் மகர் என்று அழைக்கப்படுகின்றனர். மாமகர் எனப்படுவோர் க்ஷத்திரியர் ஆவர். வைச்யர்களுடைய பெயர் மாகஸர் என்பதாகும். நான்காம் வருணத்தவரோ மந்தகர் என்று பெயர் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வருணாசிரமங்களுக்கு விதித்த கர்மாக்களைக் கைவிடாது கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு நானே வேதங்களையும் ஸ்தோத்திரங்கள் முதலானவற்றையும் உபதேசம் செய்திருக்கிறேன். வேதங்களில் கூறியுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்து அவ்வாறே நடந்து கொண்டும், நான் உபதேசித்தவாறு தவறாமல் என்னைப் பூஜித்துக்கொண்டும் அங்கே உள்ளவர்கள் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தேவர்களும் சித்தர்களும் கந்தருவர்களும், யக்ஷர்களும் அங்கு வந்து என்னைத் தரிசித்து ஆனந்தத்தை அனுபவித்துச் செல்கின்றனர். ஸ்வேத த்வீபத்தில் விஷ்ணு சான்னித்தியம் கொண்டிருக்கிறார். குசத்வீபத்தில் ஈச்வரன் விளங்குகிறார். பிரம்மா புஷ்கரத்வீபத்தில் இருக்கிறார், நானோ சாகத்வீபத்தில் பிரத்தியக்ஷமாக இருந்து வருகிறேன். அங்கே சென்று விசாரித்தால் நீ அறிய முடியும். ஆகவே, கருடன் மீதேறி விரைவாகச் செல்.

பகவானுடைய கட்டளையைச் சிரமேற் தரித்துப் புறப்பட்டான் சாம்பன். அங்கே குழுமியிருந்தவர்களிடம் விடைபெற்றுத் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். நோய் நீங்கப் பெற்று ஜொலிக்கும் காந்தியோடு கூடிய உடலைப்பெற்று வந்துள்ள குமாரனைக் கண்டு கிருஷ்ணன் அளவற்ற ஆனந்தம் கொண்டார். அவனைக் கட்டி அணைத்து மகிழ்ந்தார். சாம்பன் தந்தையைப் பிரதக்ஷணம் செய்து நமஸ்கரித்து அவரிடம் நடந்தது அனைத்தையும் தெரிவித்தான். தந்தையே, தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும், சாகத்வீபம் செல்ல கருடனை அழைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தான். கிருஷ்ணனும் அவன் கோரிக்கையை ஏற்றுக் கருடனை வரவழைத்து, அப்போதே சாம்பனை சாகத்வீபத்துக்குக் கொண்டு போய்விடுமாறு உத்தரவிட்டார். சாம்பன் தந்தையை நமஸ்கரித்து அவரிடம் விடைபெற்று கருடன் மீதேறிப் புறப்பட்டான். சாகத்வீபத்தில் போய் இறங்கியதும் சாம்பன் அங்கு கண்ட காட்சிகளைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்தான். பகவான் கூறியது போலவே அங்கு நிகழ்ந்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். மகர் எனப்பட்ட பிராமணர்களிடம் சென்று அவர்கள் பாதங்களில் தலைதாழ்த்தி வணங்கினான் சாம்பன். ஐயா, நீ யார்? எதற்காக எங்களைத் தேடி வந்துள்ளாய்? எங்களால் உனக்கு ஆகவேண்டிய காரியங்கள் என்ன? என்று அவர்கள் கேட்டனர்!

பெரியோர்களே, நான் ஜம்பூ த்வீபத்திலிருந்து வருகிறேன். துவாரகையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய புத்திரன், என் தாயார் ஜாம்பவதி ஆவர். என் பெயர் சாம்பன் என்பதாகும். தந்தையின் கோபத்துக்கு ஆளாகி அவருடைய சாபத்தால் ரோகத்தால் பீடிக்கப்பட்டு நான் மிகவும் துன்பமுற்றேன். திரிலோக சஞ்சாரி நாரத மகரிஷியின் பெருங் கருணையால் உபதேசிக்கப்பட்டு சந்திரபாகா நதிக்கரையிலே சூரியனைக் குறித்துத் தவம் செய்தேன். பகவான் என் மீது கருணை கொண்டு எனக்குத் தரிசனம் தந்தார். அவர் அருளால் என் நோயும் அகன்றது. பகவானுடைய திருவுள்ளப்படி அவருக்கு அந்த நதிக்கரையில் கோயில் ஒன்று எடுப்பித்து நித்திய பூஜைக்கு வழிசெய்ய எண்ணம் கொண்டேன். நீராடச் சென்றபோது நீரிலிருந்து பகவானுடைய பிரதிமை ஒன்று கிடைத்தது. அப்பிரதிமையைப் பிரதிஷ்டை செய்து நித்திய பூஜை செய்துவர அங்கே தகுந்த யோக்கியதையுடையவர்கள் இல்லை. பூஜை முறைகள் எவருக்கும் தெரியாது. பகவானிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது உங்களிடம் சொல்லுமாறு தெரிவித்தார். சாம்பனுடைய வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் பெரிதும் சந்தோஷப்பட்டார்கள். கிருஷ்ண புத்திரா, உன் விருப்பம் அவசியம் நிறைவேறும். ஏனெனில் உன் வருகையைப் பற்றி சூரியபகவான் ஏற்கனவே எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இப்போதே நாங்கள் புறப்படத் தயாராக இருக்கிறோம் என்றனர் அவர்கள்.

அவர்களில் பதினெட்டு குலத்தினர் சாம்பனோடு சந்திரபாகா நதிக்கரையில் உள்ள அவன் ஆசிரமத்துக்குப் புறப்பட்டனர். அனைவரையும் கரூடன் ஏற்றிக்கொண்டு வந்து இறக்கினான். ஆசிரமத்தில் உள்ளவர்கள் அவர்களை வரவேற்று உபசாரங்கள் செய்தனர். அவர்களைக் கொண்டு சாம்பன் மற்றக் காரியங்களை விரைவிலே செய்து முடித்தான். பிரதிமை பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜைகள் நடைபெறுகின்றன. அவர்கள் பூஜையால் திருப்தியுற்ற பகவான் சாம்பனுக்கு அருளினார். ஹே சாம்பா, இப்போது நான் பரம திருப்தியோடு இருக்கின்றேன். என் பூஜைகள் எல்லாம் விதிக்கப்பட்டவாறே நடந்து வருகின்றன. இவர்கள் என்னிடம் மிகுந்த பக்தி உடையவர்கள். என்னால் உபதேசிக்கப்பட்டவர்கள். ஆகவே எப்படியெல்லாம் செய்யவேண்டுமோ அவ்வாறு பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அவர்கள் செய்துவரும் பூஜையால் இங்குள்ள சகல மனிதர்களும் என் அருளுக்குப் பாத்திரமாவார்கள். அதனால் நீ பெரும் புகழுடன் விளங்குவாய். உன்னால் அன்றோ இங்குள்ளவர்கள் என்னை ஆராதிக்கின்றனர். இவ்வாறு பகவான் கூறியபோது சாம்பனுடைய மனம் பக்தியால் நிறைந்தது.

18. மகிமை பெற்ற மகர்கள்

பிருகத்பலன் வசிஷ்டரைப் பார்த்து மேலும் கேட்டான். மகரிஷே, நான் மிகவும் புண்ணியத்தைச் செய்திருக்க வேண்டும் இல்லையேல் தங்கள் மூலம் பகவான் சூரியனுடைய மகிமையை நான் எவ்வாறு அறிய முடியும்? சூரியனைப் பூஜிப்பவர்களுக்குப் பரலோகத்திலும் நல்ல பலனே கிடைக்கிறது. பகவானிடம் பக்தி பூண்டு அவர்கள் செய்யும் பூஜை அவர்களைப் போற்றத் தகுந்தவர்களாக ஆக்குகின்றது. இந்த மகர்கள் மிகவும் சிலாகிக்கத்தக்கவர்கள். இருப்பினும், எனக்கொரு சஞ்சலம். அவர்களுக்குப் பகவானிடம் இந்தத் தியானம் எவ்வாறு ஏற்படுகிறது? தெரிவிக்கக் கோருகிறேன் என்று வேண்டினான் அரசன். வசிஷ்டர் அரசனுடைய சம்சயத்தைப் போக்கும் முகமாகச் சொல்லத் தொடங்கினார். மகர் அனைவரும் சிறந்த ஞானிகள் ஆவார்கள். ஸகுணமான சூரிய சொரூபத்தை அவர்கள் தியானம் செய்து ÷ஷாடச உபசார பூஜைகள் செய்கின்றனர். பகவான் சூரியனுடைய உடல் கர்ம மார்க்கத்தைக் கடைப்பிடிப்போரை சம்சார சாகரத்திலிருந்து கரை ஏற்ற அக்கினி வடிவமாக இருக்கின்றது. அதில் விதிப்படி சூரியனுடைய மந்திரத்தைச் சொல்லி நெய்யால் ஓமம் செய்கிறார்கள். வாயுமார்க்கமான ஆகாயத்தில் அவருக்கும், மற்றோர் தேகம் உண்டு. சூரிய மண்டலத்தில் ரிக் மயமானதும் தேஜஸ்வருபமானதுமான ஒரு உடலும் அவருக்கு உண்டு. ஸகலனாகவும் நிஷ்கலனாகவும் இருக்கிறார் அவர். க்ஷரமாகவும் அக்ஷரமாகவும் அவர் விளங்குகிறார். எல்லோருடைய அந்தராத்மாகவும் அவர் இருந்து வருகிறார். சராகரமான எல்லா வஸ்துக்களிலும் அவர் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறார். அவர் காலஸ்வரூபி, அவருடைய உடல் மழையையும் பனியையும் உண்டு பண்ணுகிறது.

பகவானுடைய முதல் உடலான அக்கினியில் ஓமம் முதலான கர்மாக்களைச் செய்து கர்ம யோகத்தால் தேவ மார்க்கத்தை அடைந்து பகவானுடைய மூன்றாவது உடலான அவருடைய சாருப்யத்தை அடைந்தவர்கள் அவர் சன்னிதானத்தை அடைந்து விடுகின்றனர். அதுவே மோக்ஷம் என்பதாகும். அவ்விடத்தில் சுக துக்கங்களை ஒழித்தவர்களாய்ப் பரமானந்தத்தில் திளைத்து வருகின்றனர். நிஷ்கலமான அவருடைய ருபத்தை வேதம் இருபத்து நான்கு அக்ஷரமுள்ள காயத்திரியால் வர்ணிக்கிறது. மற்றும் சிலர் இருபத்தைந்து தத்துவங்களால் வர்ணிக்கிறார்கள். அகார உகார மகாரமாகிய பிரணவத்தாலும் அவரைத் தியானிக்கின்றனர். மகார ரூபத்தால் தியானிப்பவர்கள் ஞானத்தை அடைகிறார்கள். பகவானைக் குறித்து ஹோமம் செய்து முடித்ததும் மிஞ்சியதைப் புஜித்துப் பவித்திரர்களாகி மகர்கள் பிரம்மஸ்வரூபத்தை அடைகின்றனர். தோலால் மூடப்பட்டுள்ள இந்தச் சரீரமானது அழிவு அடையக் கூடியது, எலும்பு என்ற தூணிலே மாமிசம், இரத்தம் இவற்றைப் பூசி நரம்புகளைக் கொண்டு இழுத்துக்கட்டப்பட்ட இந்தச் சரீரத்தினுள் துர்க்கந்தம், மலம், ஜலம் முதலியன வைக்கப்பட்டுள்ளன. நோய்கள் பசி முதலான துக்கங்கள், கிழத்தனம் ஆகிய துன்பங்கள் இந்த உடலைப் பற்றுகின்றன. இந்தச் சரீரம் அழிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்து முக்தி பெறக்கூடிய சாதனங்களைக் கைக்கொள்ள வேண்டும். அன்பு, பொறுமை, உண்மையாக நடப்பது, பரிசுத்தம், எல்லோரையும் சமமாகப் பாவித்தல் ஆகிய குணங்கள் முக்தி பெற கைக்கொள்ள வேண்டிய சாதனங்களாகும்.

எள்ளினுள் உள்ள எண்ணெய் போலும், பாலில் வெண்ணெய் இருப்பது போலும் அரணிக்கட்டையில் நெருப்பு உள்ளதுபோலும் ஆத்ம சொரூபம் எங்கும் சூக்ஷ்மமாக இருக்கிறது. அதைப் பார்க்க முடியாது. ஆனால் தகுந்த முறையில் அதனை உணரலாம். புலன்களைக் கட்டுப்படுத்தி ஒரு முகமாக்கி, பிராணாயாமத்தால் சித்தத்தை நிலைப்படுத்தி ஆத்மவிசாரம் செய்தால் நாம் உணர முடியும். உலோகம் முதலான தாதுக்கள் பல இடங்களில், விதங்களில் இருக்கின்றன. அவற்றை வெட்டி எடுத்து வந்து பலவிதமாகச் சுத்தப்படுத்தி முடிவிலே அவற்றை நாம் அடைகிறோம். அவ்வாறே மனத்தை மனத்தாலும், கருத்தை கருத்தாலும் பரீக்ஷித்துப் பார்ப்பதே ஆத்ம விசாரம் ஆகும். தெளிவடைந்த சித்தமே இந்தச் சரீரத்தைப் பற்றியுள்ள சுப, அசுப கர்மாக்களை அகற்ற உதவும். நான், என்னுடையது என்ற எண்ணம் ஒழிந்துவிடும். அப்போது எங்கும் எதிலும் நம்மையே, ஆத்ம சொரூபத்தையே நிர்மலமாகக் காணலாம். காலையில் சிவப்பு வர்ணத்தை உடையவராக சூரியனை ரிக்வேத ஸ்வரூபியாகத் தியானிக்கிறார்கள். பகலிலே வெண்மை நிறத்தை உடையவராக அவரை யஜுர்வேத ரூபியாக உபாசிக்கிறார்கள். மாலையில் கருப்பு வர்ணத்தைக் கொண்டவராக சாமவேத ரூபியாகத் தியானம் செய்கிறார்கள், ரிக்வேத சொரூபி ராஜஸ குணத்தை உடையவராகவும், யஜுர் வேத ஸ்வரூபி சாத்விக குணத்தைக் கொண்டவராகவும், சாமவேத ஸ்வரூபி தாமச குணத்தை உடையவராகவும் குறிக்கும். இதற்கு மேலான ஸ்வரூபம் ஜோதிர் வடிவமாகும். சூக்ஷமமான அது சூரிய மண்டலமே ஆகும்.

பத்மாசனத்தில் அமர்ந்து நாபியிலே இரு கரங்களையும் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம் என்னும் பிராணாயாம முறைகளால் உடலிலுள்ள பிராணபானாதி பஞ்சவாயுக்களை அடக்குபவர், கால் கட்டை விரலிலிருந்து மேலே கிளம்பி, நாபியில் விறகில்லாமல் எரியும் அக்கினியைக் காண்பர். இருதயத்தில் சந்திரனையும், தலையில் அக்கினி ஸிகையையும் காண்பார்கள். ஸுஷும்நா நாடி வழியாக ஆதித்திய மண்டலத்தைப் பிளந்து கொண்டு சூரியனுடைய ஸ்வரூபத்தை யோகியானவன் அடைகிறான். அங்கே சென்றவன் மறுபடியும் துக்கம் என்பதையே அனுபவிப்பதில்லை. அதுவே பரமபதம் ஆகும். முதல் ஸ்தானம் இருதயம். இரண்டாவது ஸ்தானம் அக்கினி. மூன்றாவது ஸ்தானம் தாபநம். நான்காவது ஸ்தானமே சூரிய மண்டலம் ஆகும். அந்த ஸ்தானமே பிறப்பு இறப்பை அகற்றக் கூடியது. மோக்ஷம் எனப்படுவதும் அதுவே. அங்கே சென்றவருக்குப் பிறப்பு, இறப்பு என்பதே இல்லை. பகவானோடு நித்திய வாசம் செய்வர். இப்படிச் சொல்லப்படும் உத்தம ஸ்தானத்தை நன்கு அறிந்து மகர்கள் பகவானைத் தியானித்து வருகின்றனர். அதனால் அவர்கள் சிலாகிக்கத் தகுந்தவர்களாக விளங்குகிறார்கள். யோகத்தால் அவர்கள் தெளிந்த சித்தத்தை உடையவர்களாய் அமிருதத்துக்கு ஒப்பான பகவானுடைய சொரூபத்தை அனுதினமும் பருகி ஆனந்தப்படுகின்றனர். ஆகவே அவர்கள் பகவானுடைய நித்திய பூஜைக்கு ஏற்றவர்களாயுள்ளனர். அவர்கள் பக்தி பரிபூரணமானது. பூரணமான பக்தியே பகவானைச் சமீபத்தில் கொண்டு வரும்.

 
மேலும் சூர்ய புராணம் »
temple news
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் ... மேலும்
 
temple news
19. ஆலயப் பிரதிஷ்டை: வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ராஜன், மகர் எனப்படும் ... மேலும்
 
temple news
சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் ... மேலும்
 
temple news
சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் ... மேலும்
 
temple news
சூரிய நமஸ்காரப் பதிகம் வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar