பதிவு செய்த நாள்
06
அக்
2021
08:10
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.