பதிவு செய்த நாள்
24
மார்
2023
05:03
தஞ்சாவூர்: திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், வடிவமைக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் நுாறு ஆண்டுகளுக்கு முன்பாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னர், தேர் சிதலமடைந்து போனதனால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து ஊர் பொதுமக்கள், பக்தர்கள், உபயதாரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 11அடி உயரம், 11.5 அடி அகலம் கொண்ட புதிய தேர் செய்வதாக திட்டமிட்டு அவற்றை செய்து முடித்து, தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் விக்னேஸ்வர பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாரதனை, கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியத்துடன் உலா வந்து திருத்தேருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹிந்து அறநிலைத்துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி பொறியாளர் கருணாகரன், ஒன்றிய பெருந்தலைவர் அரசபகரன், பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், திமுக ஒன்றியச் செயலாளர் சிவசங்கரன், அறநிலையத்துறை செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் ஜனனி ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் வெள்ளோட்டம் நடைபெற்று முடிந்தவுடன் மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு புனித நீர் அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.