பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
03:07
மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் கோமல் ரோடு என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆமருவியப்பன் கோவில். மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். உபரிசரவஸு என்ற மன்னனின் தேர் அழுந்தியதால் தேர்அழுந்தூர் என்றும் திரு என்கிற செங்கமலவல்லி தாயார் நிலை பெற்று உள்ளதால் திரு அழுந்தூர் என்றும் கூறுவது உண்டு. அழுந்துதல் என்பதற்கு நிலைப்பெற்று இருத்தல் என்று ஒரு அர்த்தமாகும். அழுந்தூர், அழுந்தை, தென்னெழுந்தை என்ற பெயர்களும் உண்டு. திருமங்கை ஆழ்வார், உபரிசரவஸு, காவேரி, அகத்திய முனிவர், மார்க்கண்டேயர், கவி சக்கரவர்த்தி கம்பர், தர்ம தேவதை, கருடாழ்வார் ஆகியோருக்கு காட்சி கொடுக்கப்பட்ட தலம்.
சிறப்புகள்: பஞ்சகிருஷ்ண ஷேத்திரம் (இது ஐந்து கிருஷ்ணத் தலங்களில் ஒன்று) தலங்களைப் போல் பெருமானின் எதிரில் நிற்காமல், இடப்பக்கத்தில் கரம் கூப்பிய நிலையில் கருடாழ்வாரும், மூலவரின் வலப்புறத்தில் பிரகலாதன் நிற்பதும் கண்கொள்ளா காட்சி ஆகும். கம்பருக்கு அருள் செய்த யோக நரசிம்மருக்கு சன்னதி உண்டு. இவ்வூர் பெருமான் மீது 45 பாசுரங்கள் பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உண்டு. கம்பர் பெருமான் பிறந்த தலம் என்பதால், அவருக்கும் அவர் மனைவியாருக்கும் தனி சன்னதி உண்டு. "அழுந்தூர்வேள்" என்ற சிற்றரசனின் தலைநகரம் இவ்வூர். கரிகால் சோழனின் தாய் மாமனான "இரும்பிடர்த் தலையார்" என்ற சங்கப் புலவர் இவ்வுரை சேர்ந்தவர்.
முதல் கரிகாலனின் தலைநகரமாக இவ்வூர் விளங்கி உள்ளது. அழுந்தூர் வேள் என்ற பெயரால் குறிப்பிடப்பட்ட அவன் "வெண்ணிப்பறந்தலை" என்ற இடத்தில் நடந்த போரில் சேர, பாண்டியன் மற்றும் 11 குரு நில மன்னரையும் வென்று இருப்பதாக வரலாறு உள்ளது.
இப்பெருமானின் தேவாதி ராஜன் என்ற பெயரை கேட்டு, இது இந்திரன் திருக்கோயிலாக இருக்கும் என்று நினைத்து ஆழ்வார் திரும்பிச் செல்ல நினைக்கையில், எம்பெருமான் ஆழ்வாரின் உடலில் தளர்ச்சி ஏற்படுத்தி "தாமே முழுமுதற் பொருளான திருமால்" என்பதை அவருக்கு காட்டி அருளி இடம் இவ்வூர் அதனாலேயே ஆழ்வாருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. 45 பாசுரங்கள் பெருமானின் மீது அவர் பாடியிருப்பது இப்பெருமானின் மீதான அவரின் காதலையும், பக்தியையும் வெளிப்படுத்துகிறது. இதனாலேயே பெருமாள் தான் கண்டு அமுது செய்த அருளிய பிரசாதத்தை அனைத்து மரியாதைகளோடும் ஆழ்வாருக்கு அனுப்பி வைத்து ஊட்டி வரும் செயல் இன்றும் நடைமுறையில் உள்ளது அதேபோல் அவர் எப்பொழுது புறப்பாடு கண்டு அருள்கிறாரோ அப்பொழுது ஆழ்வார் சன்னதி வாசலில் நின்று குடை சாமரம் மங்கள வாத்தியங்களுடன் சடாரியாருளி சேவை சாதிப்பது வழக்கம் பிரபந்தங்களை அடியார்கள் தொடங்குவதும் சன்னதி வாசலில் தான் தமிழ்மறை ஒலிக்கும் போது அனைத்து இசைக்கருவிகளும் இங்கு நிறுத்தப்படும். ஆழ்வாருக்கு கார்த்திகை திருவிழாவில் 10ஆம் நாள் அன்று பெருமாள் மண்டகப்படி கண்டு அருளப்பாடு இடுவது ஒரு இனிய காட்சியாகும். கம்பர் தன் காவியத்தில் வீடணன் சிங்கப்பிரானின் சரிதையை "இரண்ய வதை படலம்" என்ற பெயரில் கூறுவதாக அமைத்திருக்கிறார். அதன் பொருட்டு பிரகலாத ஆழ்வார் இங்கு சன்னதி அருகில் கை கூப்பிய நிலையில் இருக்கிறார். இதனாலேயே யோக நரசிம்மருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. அவரே கம்பருக்கு காவியம் படைக்க அருள் செய்தார் என்பதும் வரலாறு. இந்திரன் ஒருமுறை கருடாழ்வாரிடம் வைரமுடி, விமானம் இரண்டையும் அளித்து அவர் விருப்பத்திற்கு ஏற்றபடி எந்த பெருமானுக்கு வழங்க வேண்டுமோ வழங்குமாறு கூறவும், வைரமுடியை திரு நாராயணபுரம் (மைசூரில் உள்ள மேல் கோட்டை) பெருமாளுக்கும், விமானத்தை திரு அழுந்தூர் பெருமாளுக்கும், கருடன் அளித்ததால் சன்னதி உள்ளேயே எழுந்தருளி இருக்கிறார். அதனாலேயே இத்தல விமானத்திற்கு காருட விமானம் என்ற பெயர் வந்தது. பெருமானின் வலப்பக்கத்தில் சிவபிரானால் ஆயுளையும், இளமையும் பெற்ற, மார்க்கண்டேயர் வீடுபேறு வேண்டி அமர்ந்த காலத்தில் இருப்பதை காணலாம். காவிரி தான் அகத்தியரிடம் பெற்ற சாபம் நீங்க சன்னதி உள்ளே தவம் செய்யும் கோலத்தையும் பார்க்கலாம். தேவாதி ராஜன் திருமடந்தையும், மண் மடந்தையும் விளங்க, ஒரு பசுவும், கன்றும் தன்னை சூழ்ந்து நிற்க கோஸகனாய், ஆமருவியப்பனாய் நின்ற கோலத்தில் திகழும் காட்சி அரிய காட்சியாகும்.
வேண்ட, பெருமான் ஒரே நாளில், கடைந்த வெண்ணையில், ஆயிரம் குடங்களை, தன் திருவடிவாரத்தில் அர்ப்பணித்தால், இக்குற்றத்திலிருந்து விடுபடலாம் என்று கூறினார். ஆணவம் அடங்கா மன்னன் எவ்வளவு முயற்சி செய்தும் 999 குடங்களே சேர்க்க முடிந்தது என்றும் தன் இயலாமையை சொல்லி சரணடைய விரும்பாத மன்னன் ஒரு வெற்று குடத்தை அதனுடன் சேர்த்து வைத்து, அவர் அறிய மாட்டார் என்று இறுமாப்புடன் இருக்கவும், எம்பெருமான் குடங்கள் அனைத்தையுமே வெற்றிக்குடங்களாக காட்டி அவர் ஆணவத்தை நீக்கி சரணடைய செய்தார் என்றும் அர்ச்சகர்களால் ஒரு செவி வழி வரலாறு கூறப்படுகிறது. அகத்திய முனிவர் வாதாபியை கொன்று மாமிசத்தை உண்டதனால், சாபம் நீங்க இப்பெருமானிடம் தவம் செய்து அருள் பெற்றதாகவும் ஒரு வரலாறு உள்ளது. அதனால்யே அவருக்கும் இங்கு சன்னதியில் இடம் உண்டு. திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 7ம் பத்து, சிறிய திருமடல் (1வரி) பெரிய திருமடல்(1வரி), திரு நெடுந்தாண்டகம் ஆகிய பாசுரங்களின் மூலம் இப் பெருமாளை போற்றி உள்ளார்.
வடமொழியில் உள்ள"பாதுகாஸஹஸ்ரம்" என்ற ஸ்வாமி தேசிகனின் நூலுக்கு எளிய தமிழ் உரை எழுதிய "தேரழுந்தூர் ஆண்டவன்" என்ற ஆச்சாரியர் அவதரித்த ஊரும் இதுவே. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23 வது திவ்ய தேசம். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.