சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 12:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வனத்துறை அறிவிப்பை மீறி பிரதோஷ வழிபாட்டிற்கு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சதுரகிரி மலையில் சாப்டூர் பீட் 5 என்ற வனப்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காட்டு தீ பிடித்து எரிந்தது. இதனை சாப்டூர் வனத்துறையினர் போராடி அணைத்தனர். இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து செடி, கொடிகள் காய்ந்து மழை வறண்டு காணப்படும் சூழலில், தீப்பிடித்த இடத்தில் தொடர்ந்து புகைமூட்டம் ஏற்பட்டு வந்ததால் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதனை மீறி நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். தங்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்த நிலையில் வனப்பகுதியில் காணப்படும் அசாதாரண சூழலில் பக்தர்களை அனுமதிக்க வனத்துறையினர் மறுத்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் சில மணி நேரம் தாணிப்பாறை வனத்துறை கேட்டில் காத்துக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கு சூடம் ஏற்றி மலையை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள், அருகில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவூற்று உதயகிரிநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு போலீசார் மற்றும் வனத்துறையினர் மலையடிவாரத்தில் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.