உடைந்த நிலையில் 10ம் நுாற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 12:07
ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் சேத்துார் சேவுக பாண்டியர் மேல்நிலைப் பள்ளி வெளிப்புறச் சுவரில் 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சமணர் சிலை உடைந்த நிலையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று உதவி பேராசிரியர் கந்தசாமி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஹரி பிரசாத் உள்ளிட்டோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இது குறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது: உடைந்த சமண சிலை 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் சேத்துார், புத்துார், மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் சமணர் வாழ்ந்த புகைப்படங்களும் கற்படுகைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் சிலை கழுத்து பகுதி வரை உடைபட்டு தனித்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு பள்ளியில் தரைத்தளம் அமைக்கும் போது மார்பு, இடுப்பு பகுதி அமைந்த கல் துண்டு சிலை கிடைத்துள்ளது. அதே சமயம் மூன்றாவது பாகமாக தீர்த்தங்கரர் அமர்ந்துள்ள கற் துண்டு கிடைக்கப்பெறவில்லை. மொத்தம் மூன்று துண்டுகளாக உடைந்த சிலையின் இரண்டு பங்கு மட்டும் கிடைத்துள்ளது.
முக்குடைநாதர் தீர்த்தங்கரர் சிற்பம்: உடைந்த தீர்த்தங்கரர் சிற்பத்தில் தலைக்கு மேலே முக்குடை அமைத்து நிழல் தருவது போன்றும், தலைப்பகுதியை சுற்றி கவாலையுடன் கூடிய ஒளிவட்டம் திகழ்கிறது. தலைக்கு மேலே மணி மலர்கள் கொண்ட அசோக மரத்தின் கிளைகள் சுருள் சுருளாக விரிந்துள்ளதை சிலையில் காணலாம். நீள செவியுடைய உடல் அமைப்புடன் விளங்கும் தீர்த்தங்கரரின் இரு புறமிருந்தும் பக்கத்திற்கு ஒருவராக இரு இயக்கர்கள் கவரி வீசுவது போன்று முழு உருவம் இல்லாமல் உள்ளது. கீழே அமர்ந்துள்ள துண்டு சிலை கிடைக்கப் பெற்றால் அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்துள்ள நிலையில் தீர்த்தங்கரர் சிலை அமைக்கப்பட்டிருக்கலாம், என்றார்.