பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
ஆயிரம் ஆண்டுகள் பழமையோடு, தொல்லியல் சிறப்பு மிக்க, மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், சாலை விரிவாக்கத்திற்காக, இடிக்கப்படுவதை, தடுத்து நிறுத்த வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1,000 ஆண்டு பழமை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி எனும் கிராமத்தில், ஏறத்தாழ, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி., 1012-1044) திருப்பணி செய்ததாக, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகள் சீரமைப்புப் பணிகள் நடக்காததால், தற்போது, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள, இந்து சமய அறநிலையத் துறையும், அப்பகுதி பொதுமக்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, 20 மீட்டர் அகலப் படுத்துவதற்கான, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, அப்பகுதியில் விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை கண்டறியும் பணிகள் நடக்கிறது. இதில், கோவிலின் வடபகுதியும் அடங்கும். இதற்கு முன், நடந்த சாலை விரிவாக்க பணியின் போது, கோவில் மதிற்சுவர், முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்தகாரர், அவருடைய சொந்த செலவில், புதிதாக கட்டிக் கொடுத்தார். தற்போது, மீண்டும் சாலை விரிவாக்க பணி, துவக்க இருப்பதால், கோவில் சிதையும் அபாயத்தில் இருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் இடிபடாத வண்ணம், மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். தொல்லியல் ஆய்வாளர்களும், கோவிலை காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். "ஸ்ரீ கைலாச முடையார்:இது குறித்து, ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அதிகாரி, ஸ்ரீதரன் கூறியதாவது:இக்கோவிலில் உள்ள இறைவன், "நாகநாத சுவாமி என, அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில், "ஸ்ரீ கைலாச முடையார் என, குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில், இவ்வூர், வணிக தலமாக விளங்கியது. "நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில், "மானம்பாடி என, மருவியது.அதுமட்டுமின்றி, வீர நாராயணபுரம் எனவும், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டது. பராந்தக சோழனுக்கு, (கி.பி. 907 -953) "வீரநாராயணன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இன்று "வீராணம் என, அழைக்கப்படும் ஏரி, வீர நாராயணன் ஏரி, பராந்தக சோழனால் கட்டப்பட்டது. மானம்பாடி அருகே, கங்கை கொண்ட சோழபுரம், திரைலோக்கி, திருபனந்தாள், சோழபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள், அமைந்துள்ளன. "ராஜேந்திர சிம்ம வளநாட்டில், மிழலை நாடு அமைந்திருந்தது என, கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. ராஜேந்திர சோழன் பெயரால், கோவிலுக்குள், நந்தவனம் அமைக்கப்பட்டது. மேலும், அவர் காலத்தில், தேவார நாயகமாக விளங்கிய நாங்கூரைச் சேர்ந்த, பதஞ்சலி படாரன் என்பவர், இக்கோவிலில் விளக்கு எரிக்க, தானமளித்துள்ளார். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுகள் அரிய செய்தியை அளிக்கின்றன. இக்கோவில், சித்திரை மாத விழாவின் போது, விக்கிரமாதித்தன், திருமுதுகுன்றன் என்ற விருதராஜ பயங்கர ஆச்சாரியன் என்பவர், தமிழ் கூத்து என்ற இசை நாடகம் நடத்த, கூத்தாட்டுக்காணியாக நிலம் அளித்தார்.தமிழ் கூத்து பற்றிய செய்தியை, இக்கோவிலின் மூலமே, அறிய முடிகிறது. மேலும், கங்கை கொண்ட சோழபுரத்து வணிகர் ஒருவர் அளித்த, நெல்லைக் கொண்டு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு ( அபூர்வமாகேசுவரர்கள்) அன்னதானம் அளிக்கப்பட்டது. சித்திரை மாதத்தில், இறைவன் திருவீதி உலா வர, இவ்வூர் நகரத்தார் நில தானம் அளித்துள்ளனர். நம்பி நங்கை குளம்இக்கோவிலில், ஏழு நாட்கள் சித்திரை திருவிழா சிறப்பாக நடந்ததை அறிய முடிகிறது. இவ்விழாவின் போது, "நம்பி நங்கை என, பெயரிட்டு அழைக்கப்பட்ட குளத்திலிருந்து, 2,000 அல்லி மலர்கள் அளிக்க, தானம் அளிக்கப்பட்ட செய்தியையும் அறியும் பொழுது, இக்கோவில் சோழர் காலத்தில், சிறப்பான வழிபாடுகள் நடந்ததை உணர முடிகிறது. இக்கோவில், கருவறை, அர்த்த மண்டபம் என்ற கட்டடக் கலை அமைப்புடன் விளங்குகிறது. மேலும், இக்கோவில், கற்கோவிலாக விளங்குகிறது. கோவிலின் தேவகோட்டத்தில், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்தவர், பிரம்மா, நடராஜர், நர்த்தன கணபதி, பிட்சாடனர், கங்காதர மூர்த்தி, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய தெய்வ வடிவங்கள் அழகுடன் அமைந்துள்ளன.அம்மன் சன்னிதி, தனித்தனியே அமைந்துள்ளது. பரிவார ஆலயங்களுடன் இக்கோவில் சோழர் கால கட்டடக்கலை சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க, இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது, அனைவரின் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.