பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
விழுப்புரம்: மயிலம் அருகே, 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவர் கால கலை நயமிக்க அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மயிலத்திலிருந்து, 4 கி.மீ., தூரத்தில், கள்ளக்கொளத்தூர் கிராமம் உள்ளது. இங்கு, விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் மற்றும் மங்கையர்க்கரசி ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள ஏரி வாய்க்கால் தென் கரையையொட்டி, 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், புடைச்சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து, வீரராகவன் மற்றும் மங்கையர்க்கரசி கூறியதாவது : சிற்பம் தொடர்பாக கிராம மக்களிடம் கேட்ட போது, அது பெரியாண்டவர் சிற்பம் என்றும், ஆண்டுதோறும் பெரியாண்டவருக்கு ஆடி மாதத்தில் திருவிழா நடத்தி வருவதாகவும் கூறினர். இந்த சிற்பம், அய்யனார் சிற்பம் என, ஆய்வில் உறுதி செய்யப்பட்ட நிலையில், பல்லவர் கால சிற்ப கலை நயத்திற்கு எடுத்துகாட்டாக உள்ளது. அய்யனார் சிற்பத் தொகுதியின் வலப்புறத்தில், துவிபங்க நிலையில் நிற்கும் ஒரு ஆடவன் உருவமும், இடப்புறத்தில், திரிபங்க நிலையில் நளினமாக நிற்கும், ஒரு பெண் உருவமும் உள்ளது. இந்த இருவருக்கும் இடையே, அய்யனார் தலை அலங்காரம், பெரிய தலைப்பாகை வடிவில் நேர்த்தியான கேசங்களுடனும், சடாபாரத்துடனும் காணப்படுகிறது. காதுகளில் குண்டலங்கள், கண்டத்தில் இரு சரங்கள், மார்பை அலங்கரிக்கும் முப்புரி நூல், வலது மேற்கையின் மீது செல்வது போல் உள்ளது. வயிற்றுக் கட்டில் குத்துவாள் ஒன்றும் உள்ளது. சிற்ப சென்னூல் கூறுவது போல், வலது காலை தொங்கவிட்டும், வலது கை, வலது தொடையில் தாங்கியும் உள்ளது. குத்திட்டுள்ள இடது கால் முட்டியின் மீது, இடது கை நீட்டப்பட்டுள்ளது. இடது கால் பாதத்தின் கீழ், நாய் ஒன்று, முன் கால்களை குத்திட்டு அமர்ந்துள்ளது. இந்த அய்யனார் சிற்பம், தமிழக சிற்பக் கலைக்கு ஒரு புதிய வரவாக உள்ளது. இச்சிற்பம், 1200 ஆண்டுகளுக்கு முன், கி.பி., 8 மற்றும் 9ம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என, தெரிய வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.