பதிவு செய்த நாள்
29
ஆக
2025
02:08
உத்தரகோசமங்கை அருகே இனிசேரி கிராமத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரை எடுப்பு விழா நடந்தது.
இனிசேரி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர், இலங்கை மாட்டான் அய்யனார், கருப்பண்ணசுவாமி, சுள்ளக்கரை காளி உள்ளிட்ட 21 பந்தி 61 சேனை பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
அதற்கு முன்பாக குதிரை, காளை, தவழும் பிள்ளை, பைரவர், மனித உருவங்கள் உள்ளிட்ட பல வகையான சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு அவற்றில் வர்ணங்கள் தீர்க்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 11 அடி உயரம் கொண்ட குதிரை சிலைகளை இளைஞர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் பல்வேறு வகையான மண் சிலைகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர்.
இனிசேரியில் உள்ள அய்யனார் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோயில் முன்பு கிடா, சேவல், கோழி உள்ளிட்டவைகள் பலியிடப்பட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப் பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று மீண்டும் குதிரை எடுப்பு ஊர்வலத்துடன் அய்யனார் கோயிலை வலம் வந்து விழா நிறைவடைகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரை எடுப்பு நடப்பதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இனிசேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.