பதிவு செய்த நாள்
29
ஆக
2025
03:08
எழுமலை: எம்.கல்லுப்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் சுகந்தவனப் பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் திறந்து வழிபாடு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை வழிபாடு முடிந்தபின் நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ், பக்தர்கள் கோயிலைப் பூட்டிச் சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்கச் சென்ற போது, கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் கோயிலுக்குள் சென்று பார்த்த போது, உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக சிதறிக் கிடந்தது.
பீரோவில் வைத்திருந்த ஒன்றரைப் பவுன் தாலிகள் 2, உற்ஸவர்கள் கழுத்தில் இருந்த தலா அரைப்பவுன் தாலிச்செயின்கள் 2, என நான்கு பவுன் எடையில் 4 தாலிகள் திருடுபோயிருந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு ரூ50 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
மேலும், பீரோவில் இருந்த சுவாமி ஆடைகள், அலங்காரப் பொருட்களை வெளியே இழுத்துப்போட்டுச் சென்றுள்ளனர்.திருடுவதற்கு முன்பு, மர்மநபர்கள் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அதன்பின் திருட்டில் ஈடுபட்டதால் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாமல் போனது.
உசிலம்பட்டி டி.எஸ்.பி.,சந்திரசேகரன் தலைமையில் எம். கல்லுப்பட்டி போலீசார், தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்தில் கைரேகைப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.விசாரணை நடக்கிறது.
* ஆக. 12 இரவில் உசிலம்பட்டி அருகே வாலாந்துார் அங்காளஈஸ்வரி கோயிலிலும் இதே போன்று உண்டியல் உடைத்து திருட்டு நடந்தது.
அதில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கும் முன்பாக மீண்டும் உசிலம்பட்டி பகுதியிலேயே கோயிலில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.