ஐயப்பமார்களே முதலில் உங்கள் ஊர் காவல் தெய்வத்தை கவனியுங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2013 12:12
சபரிமலை அய்யப்பன்தான், அய்யனார் என்ற பெயரில் நம் ஊரில், ஊர்க் கடைசியில் அமர்ந்திருக்கிறார். ஊர்க் கடைசியில் காவல் தெய்வமாக இருந்து காத்தருளும் நம் அய்யனாரை அவசியம் தரிக்க வேண்டும். அய்யனார் அழுக்கு உடையுடன், விளக்கேற்ற எண்ணெய் கூட இல்லாத நிலையில் அங்கே தனிமையில் காத்திருக்கிறார் என்பதை அறிய வேண்டும், ஆயிரக்கணக்கில் செலவு செய்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், உங்கள் ஊர் அய்யனார் கோயிலுக்கோ, உங்கள் பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்கோ சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். புத்தாடை அணிந்து மலையேறும் நீங்கள், உங்கள் ஊர் அய்யனாருக்கும் ஒரு நீல, கறுப்பு, வெண்மை ஆடை வாங்கி அணிவிக்க வேண்டும். ஆரவாரமாக பாதையில் பழனி, மதுரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் என்று பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள் ஆளுக்கு ஒரு பரிதவிக்கும் அய்யனார் ஆலயத்திற்கும் உங்களால் ஆன கைங்கர்யத்தைச் செய்யுங்கள்.
நீங்கள் செய்யாவிட்டாலும் அய்யனார் உங்களுக்கும் அருள்பாலிக்கத்தான் போகிறார் என்றாலும் இனியாவது நம் ஊர்க் கடைசியில் அமர்ந்து நம் அத்தனை செயல்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் ஊருக்கும், நமக்கும் காவலாக இருக்கும் அய்யனாருக்கு உரிய முக்கியத்துவத்தைத் தருவோம்.