மயிலாடுதுறை மாதானம் முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2025 10:08
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமை அன்று நடைபெறும் தீமிதி திருவிழாவில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழா ஆடி மாத கடை வெள்ளியான இன்று நடைபெற்றது. தீமிதி திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மாலை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் பால் ஊற்றி தீமிதியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காப்பு கட்டிக் கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி காவடி, கரகம், பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே உள்ள தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், கால், கை உள்ளிட்ட உருவ பொம்மைகள், வைத்தும், கண்ணடக்கம் செலுத்தியும், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சீர்காழியிலிருந்து மாதானத்திற்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் நடராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.