Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) ... இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இறைவழிபாட்டில் பசுவுக்கும், ...
முதல் பக்கம் » துளிகள்
நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதோ அதற்கான பரிகாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
05:07

சூரியன் தோஷம் விலக ...

உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம்  5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

சூரிய துதி

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

சந்திரன் தோஷம் விலக ...

உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.

சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில்  5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.

உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.

தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.

சந்திர துதி

அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி

பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி

செவ்வாய் தோஷம் விலக .....

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் துதி

சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.

செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.

புதன் தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.

பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். புதன் தோஷம் விலகி உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.

புதன் துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி

மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.

புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.

குரு தோஷம் விலக:

நமக்கு கிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும். 

வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?  வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.

தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.

வியாழன் துதி

குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!

சுக்ர தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.

உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.

வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.

சுக்ர துதி

சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!

மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.

துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.

சனி தோஷம் விலக:

சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை.  இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். . அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி  என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை.  இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.

சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம்  போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. 

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

சனி துதி

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!

முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.

சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!

ராகு தோஷம் விலக:

உங்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

ராகு தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

அடிக்கடி உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.

ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.

தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி

கேது தோஷம் விலக:

உங்களுக்கு கேது தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.

துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்து கொள்வது சிறப்பு. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜை செய்யுங்கள்.

காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் கேதுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை கோலாகலமாகும்.

கேது துதி

பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே

நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

 
மேலும் துளிகள் »
temple news
அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar