பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
05:04
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடப்பதால், தேவையான கோவில் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, திருப்பணிகளில், பக்தர்களும், முறைதாரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ராஜகோபுரம், கோவில் சன்னதிகள், படிக்கட்டு பாதை, படிக்கட்டு பாதையில் உள்ள மண்டபங்கள் என அனைத்து இடங்களிலும், புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கோவில் உட்புறத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புதிய தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கருவறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு அஸ்தபந்தன மருந்து சாற்றப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம், சன்னதி கோபுரங்கள் என அனைத்து இடங்களிலும், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட யாகசாலை மண்டபத்தில், காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. அவசர மருத்துவ உதவிக்காக, மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடு; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, அடிவாரத்தில், 2 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில், எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது. அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் சிறப்பு வாகனம் மூலம் மலை மேல் அழைத்துச் செல்லப்படுவார்கள். பொதுமக்கள், படிக்கட்டு பாதை மூலம் மலை மீது சென்று, அங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் வழியாக, மலை மேல் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசித்து வரலாம். அடிவாரத்தில் காத்திருக்கும் பக்தர்களும், கும்பாபிஷேகத்தை நேரலையில் காணும் வகையில், பெரிய திரைகள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில், 1,300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் பக்தர்கள் வந்து செல்லும் பாதை முழுவதும், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.