பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
10:04
விநாயகரை வழிபட சிறந்த சதுர்த்தி தினம். அதில் பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினம் சக்தி சதுர்த்தி தினமாக வழிபடப்படுகிறது. இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட கடன், நோய் நீங்கும். கோவிலில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். வீட்டில் விளக்கேற்றி விநாயகருக்கு பூஜை செய்து வழிபடலாம். இன்று சக்தி கணபதியை வழிபட சகல செல்வங்களும் கிடைக்கும்.
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதமாகும். முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார், என்று கந்த சஷ்டிகவசம் கூறுகிறது. சதுர்த்தி, கார்த்திகையான இன்று கணபதி, ஆறுமுகனை வணங்கி முன்னேற்றம் அடைவோம்..!