மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் பங்குனி உத்திர உற்சவம் கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆழ்வார்களுள் பாடல் பெற்ற இந்த ஆலயம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் காவிரி கரையில் அருள் பாலிக்கும் பஞ்சரங்க சேத்திரங்களில் ஐந்தாவது அரங்கமாக விளங்குகிறது. இக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் கொடி மரத்துக்கு எதிரே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனை அடுத்து வேதியர்கள் மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கொடி மரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6ஆம் தேதி கருட சேவையும் 9ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், 11 திருத்தேர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கொடி ஏற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.