பதிவு செய்த நாள்
26
நவ
2011
10:11
நகரி : திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாள் கோவிலில், டிச., ஜன., மாதங்களில், ஆறு நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. டிச., 10 ல் சந்திரகிரகணம் உள்ளதால், திருமலை கோவிலில் சாமிக்கு நடத்தப்படும், அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. 2012 புத்தாண்டு தினத்தையொட்டி டிச., 31 முதல் ஜன., 2 வரை ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. ஜன., 5 ல் வைகுண்ட ஏகாதசி மறுநாள், 6ல் துவாதசி தினத்தையொட்டி, இந்த இரு தினங்களிலும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. ஜன., 5, 6 ல் திருமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான மலையப்ப சுவாமி திருமலை கோவிலுக்கு வெளியில் உள்ள, வாகன மண்டபத்தில் காலை, 10 முதல் மாலை, 5 மணி வரை, உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தரும் வைபவ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகஸ்ரதீபலங்கார சேவையை, சர்க்கார் சேவையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஜன., 10 ல் பிரணய கலஹ உற்சவம் திருமலையின் மாட வீதியில் நடைபெறும். ஜன., 7, 8 ல் தாஸ சாகித்ய திட்டத்தின் மேற்பார்வையில் திருப்படி உற்சவம் நடைபெற உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.