சில முகங்களைப் பார்த்து விட்டால் வாழ்க்கை முழுவதும் மறக்காது என்ற அளவில் மிகவும் அழகாக இருப்பார்கள். விநாயகரும் இப்படித்தான் நினைத்தார். தன் முகம் எல்லார் மனதிலும் நிற்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் விளைவு தான் அழகான யானை முகத்தை தனக்கு வைத்துக் கொண்டார். யானையைப் பார்த்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். அதே ÷ பால் தான் ஆஞ்சநேயர். அவருக்கு தன் செயல்கள் அனைத்தும் எல்லார் மனதிலும் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே வானர முகத்தை ஏற்றார். வானரங்களின் சேஷ்டையை குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள். ஒரு செயலைத் துவங்கினால் விநாயகரை நினைத்து துவங்குவார்கள். அது மங்களமாக முடிந்ததும், மங்கள ஆரத்தி என்ற பெயரில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வார்கள். முதல் என்பதை ‘ஆதி’ என்றும், முடிவு என்பதை ‘அந்தம்’ என்றும் சொல்வர். ஆக, இந்த இருவரும் இணைந்த வடிவத்தை வழிபாடு செய்பவர்கள் ‘ஆதியந்த பிரபு’ அல்லது ‘ஆத்யந்த பிரபு’ என்ற பெயரில் இவர்களை ஒரே வடிவமாக வழிபடுகின்றனர்.