ராமரும், லட்சமணனும் நீரோடைக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு காகம் தாகத்தால் வாடுவது கண்கூடாகத் தெரிந்தது. நீரோடை அருகில் இருந்தும். அது நீரைப் பருகாமல் தவித்தது. காகம், தண்ணீர் அருகில் போகிறது. ஆனால் நீரைப் பருகாமல் திரும்பி விடுகிறது. இதைக் கண்ட லட்சுமணனால் தாங்க முடியவில்லை. என்ன முட்டாள்தனம்! குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகிறது. அதைக் குடிக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறதே இந்த அறிவற்ற காகம் என்றான்.
லட்சுமணனைத் தடுத்த ராமர், தம்பி அவசரப்பட்டு முடிவு செய்யாதே. அந்தக் காகம் தற்போது இடைவிடாமல் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அது தண்ணீர் அருகில் சென்று பருகாமல் திரும்பி விடுகிறது. நீர் பருக வேண்டுமென்றால் அந்த நேரத்தில் இறைவனின் நாம ஜபத்தை நிறுத்த வேண்டும். அதனை அந்தத் காகத்தால் செய்ய முடியவில்லை என்றார்.
உண்மையான பக்தன் அப்படித்தான் இருப்பான். அவன் தன்னைப் பற்றி நினைப்பதே இல்லை. தன்னையே மறந்து விடும் அளவுக்கு அவன் இறை சிந்தனைகளில் மூழ்கி விடுவான். நமது உடல் ஒரு கருவிதான். தன்னுணர்வற்ற ஒன்றைச் சார்ந்தே வாழவேண்டிய ஒரு கருவி. ஒரு பேனா உணர்வு பெற்றால், நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியுள்ளேன் என்று சொல்லும். உண்மையில் பேனாவா எழுதியது? அதைப் பிடித்தவன் அல்லவா எழுதினான்? நாம் எல்லாவற்றையும் செய்ததாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால், இறைவனின் கையில் நாம் வெறும் பேனாதான்.