பதிவு செய்த நாள்
17
அக்
2017
01:10
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம்; தீபாவளி வரும் மாதம் என்பது மட்டுமல்ல; சிறப்பான சில விரதங்களை தன்னுள்ளே கொண்ட மாதமும் கூட.தீபாவளியை ஒட்டிச் செய்யப்படும் கேதார கவுரி விரதம் மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாளான பிரதோஷ கால விரதம் ஆகியவை மக்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தையும், சகல சவுபாக்கியத்தையும் தரவல்லவை. பண்டிகைகள் என்பவை வெறுமே கேளிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், வாழ்வின் உள்ளடங்கிய தத்துவங்களையும், தெய்வ அனுகூலத்தையும் தரும் விரதங்களையும் சேர்த்துக் கடைப்பிடிக்கச் சொல்வதே நமது மதத்தின் பெருமை. அந்த வரிசையில் தீபாவளி சமயத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்களையும், அவற்றை அனுஷ்டிக்கும் முறையையும், அதனால் கிடைக்கும் அளப்பரிய பலன்களைப் பற்றியும் பார்க்கலாம்.
கேதார கவுரி விரதம்: ஆண் - பெண் இருபாலருக்கும் பொதுவான இந்த விரதம் புரட்டாசி சுக்ல பட்ச தசமி முதல் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி (அமாவாசை) முடிய அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் இந்த விரதம் பொது என்றாலும், இதனைப் பெண்கள் விரும்பி கடைப்பிடிக்கிறார்கள். கேதார கவுரி விரதம் தோன்றியதற்கு சுவையான புராணக்கதை ஒன்று உள்ளது.
பிருங்கி மகரிஷி: பல காலம் முன்பாக பிருங்கி முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் இக சுகங்களை வெறுத்து எப்போதும் சிவன் நாமாவளியில் மனதை நிலைப்படுத்தி மோட்சத்தையே தியானித்தார். ஒரு நாள் அவர் கைலாயத்தில் விகட நாட்டியம் என்ற ஒன்றை ஆடிக்காட்டினார். விகட நாட்டியம் என்பது மிகவும் சிரிப்பை மூட்டக்கூடியது. அதனை அங்கிருந்த தேவர்கள், மூவர்கள், அவர்களது தேவியர் என அனைவரும் கண்டுகளித்தனர். மகரிஷியின் விகட நாட்டியத்தால் சிவனும் அன்னை பார்வதியும் தன்னை மறந்து ஆனந்தமாகச் சிரித்தனர். மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்த அந்த தெய்வீக தம்பதிகளை அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். அப்போது பிருங்கி முனிவர் வண்டின் வடிவமெடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த அன்னையைத் தவிர்த்து, சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். அவரை ஈசனும் ஆசீர்வதித்தார்.
இந்த நிகழ்ச்சியால் சற்றே கோபம் கொண்டாள் உமையவள். அவளுக்கு சமாதானம் கூறினார் சிவனார். ‘தேவி! பிருங்கி மகரிஷி வீடுபேற்றை மட்டுமே விரும்புகிறார். பூவுலகத்தில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் எதுவும் இல்லை. ஆகையால்தான் இக வாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கிவில்லை ’ என்று கூறினார். அவரது சமாதானத்தை ஈஸ்வரியின் மனம் ஏற்கவிலலை. பிருங்கி முனிவர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகக் கருதினாள். அதனால் கோபம் கொண்டு ‘பிருங்கிக்கு சக்தியில்லாமல் போகட்டும்’ என்று சபித்துவிட்டாள். முனிவர் வலுவிழந்து தடுமாறினார். அதனைக் கண்ட நந்தீசர் தனது சக்தியால் கோல் ஒன்றை உருவாக்கி அதனை பிருங்கிக்கு அளித்தார். மீண்டும் சக்தியை அடைந்த மகரிஷி, சிவனை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
இவற்றை எல்லாம் பார்த்திருந்த உலகநாயகி தன் கணவனும் தன்னை மதிக்கவில்லை என்று கோபம் கொண்டாள். ‘இனி உங்களோடு ஒரு கணமும் இருக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். நேரே பூவுலகம் வந்த பார்வதி தேவி, கவுதம முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த இமாலயப்பகுதிக்கு வந்தாள். அன்னை சக்தி பூவுலகத்துக்கு வந்ததால் மலர்கள் பெரிதாக மலர்ந்து மணம் வீசின. மரங்கள் இனிய பழங்களைத் தாங்கி நின்றன. அந்த வனமே ஒளி வீசி தேஜோமயமாகத் திகழ்ந்தது. இவற்றைக் கண்ட கவுதம முனிவர் தனது ஞானதிருஷ்டியால் உலகன்னையாம் பராசக்தி அந்த வனத்துக்கு வந்திருப்பதை அறிந்தார். நேரே அவளெதிரே சென்று பணிந்து வணங்கினார். அன்னையும் நடந்ததை முனிவரிடம் கூறினாள். அன்னைக்கு மனம் சலிக்கும் வரை இங்கேயே இருக்கச் சொல்லி உபசரித்தார் கவுதமர்.
அன்னை இல்லாமல் ஈசனும், ஈசனைப் பிரிந்ததால் அன்னையும் வாடினர். இதனால் உலக உயிர்களெல்லாம் பாதிப்பு அடைந்தன. கோபத்தால் பிரிந்ததால் அன்னையேதான் பிராயச் சித்தம் செய்து ஈசனை அடையவேண்டும் என அன்னைக்கும் தெரிந்தது. அதனை ஈசனும் கூறினார். என்ன நோன்பு செய்து மீண்டும் கணவனை அடைவது? என்ற கேள்விக்கு விடையாக கவுதம முனிவர் வந்தார்.
‘தாயே! இதுவரை யாருமே அனுஷ்டிக்காத விரதம் ஒன்றுள்ளது. அதனை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதனை அனுஷ்டித்தால் ஈசனை அடைந்துவிடலாம் என்றார். அப்படி அவர் கூறிய விரதமே கேதார கவுரி விரதமாகும். இமயமலைச் சாரலில் கவுதம முனிவர் ஆசிரமம் அமைந்திருந்த இடம் கேதாரம் எனப்படும். அங்கு கவுரி தேவியானவள் விரதம் இருந்ததால் இதற்கு கேதார கவுரி விரதம் என்று பெயர் வந்தது. 21 நாட்கள் கடுமையாக விரதம் இருந்த அன்னையின் முன்னால் ஈசன் தோன்றி, அவளுக்கு தனது உடலில் பாதியைக் கொடுத்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். அப்போது அன்னை தனது திருவாயால் ‘பூவுலகில் யார் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாலும் அவர்களது இல்லறம் நல்லறமாக வளரும். கணவன் மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும்; இனை பிரியாது வாழ்வார்கள்’ என்று வரமளித்தாள். அன்று முதல் இன்று வரை இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் தம்பதியர் இல்லறத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.
விரதம் இருக்கும் முறை: முன்பே கூறியபடி புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமியில் ஆரம்பித்து, ஐப்பசி மாத அமாவாசையில் முடிகிறது இந்த விரதம். மொத்தம் 21 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நோன்பில் 21 என்ற எண்ணுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதல் நாள் வீட்டைத் தூய்மை செய்து மண்ணாலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கொள்ள வேண்டும் அப்படிச் செய்ய இயலாதவர்கள் ஈசனைக் கும்பம் வைத்தும் வழிபடலாம். கும்பத்துக்கு வஸ்திரம் சாற்றி, பூ வைத்து அதனை சிவசொரூபமாக எண்ணி வணங்குதல் வேண்டும். மஞ்சள் தடவிய சரடுகளை மொத்தம் 21 எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாள் பூஜை முடிந்த பின்னும் ஒர சரட்டில் 21 முடிச்சுகள் போட வேண்டும். தீப தூபங்கள் காட்டி சிவனுக்கு வில்வத்தாலும் மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். அப்பம், வடை, பழம் ஆகிய நிவேதனங்களை 21 எண்ணிக்கையில் செய்யவேண்டும். இவை தவிர புளியோதரை, பாயசம், பொங்கல் போன்ற பிரசாதங்களும் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, ஆகியவையும் 21 என்ற எண்ணிக்கையில் இருப்பது அவசியம்.
இந்த விரதம் இருப்பவர்கள் சிவனின் பெருமைகளை மனதால் நினைத்து பிரசாதங்களை மட்டுமே ஒரு பொழுது மட்டும் உண்டு வரவேண்டும். காபி, டீ மற்றும் பலகாரங்கள் என எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. கடைசி நாளான அமாவாசை அன்று வெல்லப்பாயசம், பச்சைப்பயறு பொங்கல் இவற்றை நிவேதனம் செய்து பூஜிக்கவேண்டும். இப்போது 21 முடிச்சுகள் கொண்ட 21 இழைக்கயிற்றை ஆண்கள் என்றால் வலக்கரத்திலும், பெண்கள் என்றால் இடக்கரத்திலும் கட்டிக்கொள்ள வேண்டும். மணிக்கட்டிலோ கழுத்திலோ கட்டிக்கொள்ளக் கூடாது. புயங்களுக்குக் கீழே கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களது இல்லத்தில் எப்போதும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். செல்வம் பெருகும், ஆரோக்கியமும் அறிவும் நிறைந்த குழந்தைகள் தோன்றுவார்கள். நீண்ட நாள் திருமணமாகாமல் இருப்பவர்கள், பிரிந்து வாழும் கணவன் மனைவியர் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் உடனே திருமணமாகும், தம்பதிக் மீண்டும் சேர்வார்கள். மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையும்.
தீபாவளியின் நீத்தோர் வழிபாடு: தீபாவளி என்பது வெடிகளும் வெறுமே இனிப்பு உண்பது மட்டுமல்ல; அதற்கு முந்தைய தினம் நமது குலமுன்னோர்களை நினைத்து விரதம் இருப்பதும் ஆகும். ஏன் அப்படி? எதற்காக இதனைச் செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்குப் பதிலாக ஒரு புராணக்கதையைச் சொல்கிறார்கள்.
பல காலம் முன்பாக தீர்க்கதமஸ் என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள். ஒரு அழகான கானகத்தில் பர்ணசாலை அமைத்து பூஜைகள், வேள்விகள் என எல்லாவற்றையும் முறைப்படி செய்து வந்தார். அவரது மனைவியும் மகன்களும் பூஜைக்கும் வேள்விகளுக்கும் மிகவும் உறுதுணையாகவும் இருந்தனர். நாட்கள் செல்ல செல்ல மகன்களிடம் ஒருவித மாறுபாட்டைக் கண்டார் தீர்க்கதமஸ் முனிவர். எதிலும் அலட்சியமாக இருப்பது, மரியாதை இல்லாமல் பேசுவது, பூஜை செய்யாமல் கடவுளை வணங்காமல் இருப்பது என அவர்களது நடவடிக்கைகள் மனதுக்குக் கவலை அளித்தன. இதனால் முனிவருக்கும் வேள்விகள் கவனம் சிதறியது. மேலும் மேலும் துன்பம் அவர்களைச் சூழ்ந்தது. இதிலிருந்து வெளியில் வர என்ன வழி? என்று யோசித்தப்படியே இருந்தார் முனிவர்.
அப்படி இருக்கையில் ஒரு நாள் சனாதன முனிவர் தீர்க்கதமஸ் முனிவரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார். அவரைக் கண்டதும் உபசாரங்கள் செய்து காலில் விழுந்து வணங்கினார் தீர்க்கதமஸ். சனாதன முனிவர் தனது ஞான திருஷ்டியால் மன வருத்தத்துக்கு கான காரணத்தைக் கண்டறிந்தார். அதைப் பற்றி கேட்கவும் செய்தார். மனதில் உள்ள கஷ்டங்களை கூறினார். தீர்க்கதமஸ், அதைக் கேட்ட சனாதன முனிவர்; ‘தீர்க்கதமஸ் முனிவரே! தவறு உங்களிடமிருந்துதான் ஆரம்பமாகி இருக்கிறது! எத்தனையோ வேள்விகள் வழிபாடுகள் செய்த நீங்கள் நீத்தோர் வழிபாட்டை சரியாகச் செய்யவில்லை. உங்களது பித்ருக்கள் நிம்மதியின்றி அலைகிறார்கள். அதனால்தான் உங்களது மகன்களது போக்கு இப்படி இருக்கிறது” என்றார்.
‘இதற்கு என்ன பரிகாரம்? ’ என்று கேட்டார் தீர்க்கதமஸ் முனிவர், ‘ஐப்பசி மாதம் திரோயதசி திதியில் வரும் பிரதோஷம் நந்திதேவருக்கு மிகவும் விசேஷமானது. அன்று யமனுக்கும் உரிய நாள். ஆகவே பகல் முழுவதும் விரதமிருந்து, மாலை பிரதோஷ வழிபாட்டைச் செய்யுங்கள். மலரிட்டு சிவனையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். அதோடு யம தீபம் ஏற்றி உயரமான இடத்தில் வையுங்கள். எள்ளும் தண்ணீரும் அதன் பக்கத்தில் வையுங்கள். அப்படிச் செய்வதால் உங்களது முன்னோர் நற்கதி அடைவார்கள்” என்றார். அதன்படியே தீர்க்கதமஸ் முனிவர் வழிபட்டார். அவரது முன்னோர் ஆசியால் அவரது மகன்கள் நல்ல புத்தியோடு பின்னாட்களில் பெரிய ரிஷிகளாக ஆனார்கள். இதனை ‘முக்தாபலம்’ என்னும் புராண நூல் கூறுகிறது.
எமதீபம் எப்படி ஏற்றுவது? பெரிய வட்டமான மண் விளக்கில் நல்லெண்ணெய் (நல்லெண்ணெய் மட்டுமே ஊற்ற வேண்டும், பஞ்ச தீப எண்ணெய்கள் ஆகாது) ஊற்றி அதில் பருத்தித் துணியால் ஆன தடித்த திரியைப் போட வேண்டும். எங்கு விளக்கு வைக்கப்போகிறோமோ அங்கே சென்ற பின்னரே ஏற்றவேண்டும். வடக்கு அல்லது மேற்கு நோக்கி வைக்கலாம். பக்கித்திலேயே ஒரு கிண்ணத்தில் சிறிது நீரும் எள்ளும் வைக்க வேண்டும் இதனை துளசி மாடத்துக்கு அருகில் வைக்கக்கூடாது, விளக்கு வைத்த உடன், ‘எமனே! தர்ம ராஜனே! எங்கள் முன்னோர்களுக்கு எங்களை அறியாமல் நாங்கள் ஏதாவது குறை வைத்திருந்தால் அதனை நீக்கி அவர்களுக்கு நிம்மதி அருளவேண்டும் ’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் சிவன் கோயிலுக்குச் சென்று பிரதோஷ தரிசனம் செய்து, இலகுவான உணவு எடுத்துக்கொள்ளலாம். புளி சேர்க்காத உணவாக இருந்தால் நலம். மறுநாள் காலையில் வழக்கம் போல எல்லா உணவும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் வீட்டில் நிம்மதி, குழந்தைகளால் பெருமை ஆரோக்கியம், செல்வாக்கு ஆகியவை நிலைக்கும், ஏதாவது பித்ரு தோஷம் இருந்தால்கூட அவை அகன்றுவிடும். நாம் அனைவரும் மேற்கூறிய விரதங்கள், பூஜைகள் ஆகியவற்றைச் செய்து கடவுளர்களின் அருளுக்குப் பாத்திரமாவோம். அவர்களது அருளால் ஏற்றமான வாழ்வு, சிறப்பான ஆரோக்கியம், நிலைத்த மகிழ்ச்சி, நீடித்த ஆயுள் ஆகியவற்றைப் பெற்று நாட்டுக்கு நலம் சேர வாழ்வோம்!