Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்றாவதாயிரம் பகுதி-1 மூன்றாவதாயிரம் பகுதி-3 மூன்றாவதாயிரம் பகுதி-3
முதல் பக்கம் » மூன்றாவதாயிரம்
மூன்றாவதாயிரம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
03:12

நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம்

நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்வதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. இப்பிரபந்தத்தில் முதற் பாசுரம் கடைசிப் பாசுரம் நீங்கலாக மற்றப் பாசுரங்கள் எல்லாம் அகப்பொருள் இலக்கணத்துறைகளாக அமையப்பெற்றவை. ஆழ்வார் பெண் தன்மையை ஏறிட்டுக்கொண்டு பேசும் பிரபந்தம் இது.

நம்மாழ்வார் தலைவி: எம்பெருமானார் தலைவர். திருவிருத்தம் முழுவதும் நாயக நாயகி பாவத்தில்தான் பாடப்பட்டுள்ளது. அகப்பொருள் இலக்கணத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஈண்டுள்ள பாசுரங்களைப் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடலிலும் அமைந்துள்ள அகப்பொருள் துறை அவ்வப் பாடலின் தலைப்பில் தரப்பெற்றுள்ளது.

தனியன்

கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது

கட்டளைக் கலித்துறை

திருவிருத்தம் கற்று இனிதே வாழ்க

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்!உயி ரின்பொருள்கட்கு
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே

எம்பெருமானே! என் விண்ணப்பம் கேட்டருள்

2478. பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.

தலைவியின் வேறுபாடுகண்ட தோழி வியந்து கூறல்

2479. செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.

பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து கூறுதல்

2480. குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல்,
தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச கமே.

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு இரங்கல்

2481. தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்
கினிநெஞ்ச மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்
பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே?

வாடைக்கு நலிந்த தலைவியின் நிறமாற்றம் கண்டு தோழி இரங்கல்

2482. பனிப்பியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்
பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந்தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே?

தலைவியின் அழகு கண்டு வியந்த தலைவன் கூற்று

2483. தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே.

கார் காலம் வந்ததே என்று தலைவி மயங்கல்

2484. ஞாலம் பனிப்பச் செரித்துநன் நீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற வானமிது திருமால்
கோலம்சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்வினை யாட்டியேன் காண்கின்றவே.

தலைவன் பொருள்வயின் பிரிதலைக் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்குக் கூறுதல்

2485. காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன,இதெல்லா மறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம்  சென்றுபொருள்படைப் பான்கற்ற திண்ணனவே.

தலைவன், தலைவியின் நீங்கலருமை கூறல்

2486. திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்விண் ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே.

தலைவன் குறையுற உரைத்தல்

2487. மாயோன் வடதிருவேங் கடநாடவல் லிக்கொடிகாள்
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோஅறை யோவி தறிவரிதே.

தலைவன், பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு உரைத்தல்

2488. அரியன யாமின்று காண்கின்ற  கண்ணன் விண்ணனையாய்!
பெரியன காதம் பொருட்கோ பிரிவென  ஞாலமெய்தற்
குரியன வொண்முத்தும் பைம்பொன்னுமேந்தி யோரோகுடங்கைப்
பெரியன கெண்டைக்குலம்  இவையோ வந்து பேர்கின்றவே.

தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்

2489. பேர்கின்றது மணிமாமை பிறங்கியள்ளற்பயலை
ஊர்கின்றது கங்கு லூழிகளே  இதெல்லா மினவே
ஈர்கின்ற சக்கரத்தெம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார்  தந்து போன தனிவளமே.

இருளுக்கும் வாடைக்கும் தலைவி இரங்கல்

2490. தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே.

நலம் பாராட்டல்

2491. ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே.

தலைவனது கருத்தறிந்து தோழி உரைத்தல்

2492. கயலோ நுமகண்கள்? என்று களிறுவினவி நிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே.

தலைவி இருள் வியந்து உரைத்தல்

2493. பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய்
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம! வாழியிப் பாயிருளே.

தலைவி கடலை நோக்கித் தேர்வழி தூரல் என்றல்

2494. இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவ ணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே.

கார் கண்டு அழிந்த தலைவியின் ஆற்றாமைக்குப் பாங்கி இரங்கல்

2495. கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோபுயற் காலங்கொலோ
கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய் யாநிற்கும் காரிகையே.

செவிலி பழிக்கு இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்

2496. காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே.

வெறி விலக்கு(வேலனது வெறியாட்டை விலக்குதல்)

2497. சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம் - இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது – வேல நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை மீர்உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே.

விடை தழுவிவந்த தலைவனை வியத்தல். ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்னலுமாம்

2498. சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.

தோழி தலைவனை நகையாடுதல்

2499. கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை வைத்ததிவ் வான்புனத்தே?

தலைவன் குறையுற உரைத்தல்

2500. புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன்
மனமோ மகளிர்! நுங்காவல் சொல்லீர் புண்டரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோநும் இயல்புகளே?

பிரிவாற்றாத தலைவியின் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல்

2501. இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே?

தலைவனின் தாரை விரும்பிய தலைவி ஆற்றாது கூறுதல்

2502. எங்கோல் வளைமுத லாகண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோள்
நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய் யாதினி நானிலத்தே?

தலைவன் தனது நகரை காட்டுதல்

2503. நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே.

தார் பெற்ற தலைவி முன்பு வருத்திய வாடை மகிழ்தல்

2504. சேமம்செங் கோனருளே,செருவாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய் யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோறெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே.

பிரிவாற்றாத தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல்

2505. தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம்- நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்- வள்வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா! அருளாய்
எண்ணந் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே?

தலைவி அன்னங்களை வெறுத்துரைத்தல்

2506. இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோகுடிச் சீர்மையி லன்னங்களே.

தலைவி அன்னம் வண்டானங்களையும் தூது வேண்டுதல்

2507. அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ இதுவோ தகவென் றிசைமின்களே .

மேகங்களைத் தூதாகக் கூறுதல்

2508. இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.

போலி கண்டுரைத்தல்

2509. மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே?

தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்துக் கூறல்

2510. அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோஇவற் றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே.

தலைவி இழைத்த கூடல் அழிவிற்கு இரங்கிய பாங்கி தலைவற்குரைத்தல்

2511. சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறிதன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே.

மாலைப் பொழுதுக்கு ஆற்றாத தலைவி வாடை கண்டு இரங்கல்

2512. பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே.

தலைவன் கொடுமையைப் பாங்கி கூறல்

2513. துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோஇலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே!

சுரத்தின் அருமை நினைந்து நற்றாய் இரங்கல்

2514. கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.

பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல்

2515. கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்உரு வொத்தன நீலங்களே.

தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி மகிழ்தல்

2516. நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல,பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே.

பொழுது கண்டிரங்கிய தலைவி பாங்கியர்க்கு வரைவு விருப்புரைத்தல்

2517. கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர்!
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ

தலைவி வாடைக்கு வருந்தல்

2518. என்றும்புன் வாடை யிதுகண் டறிதும் இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம் ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றிநின் றென்னைவன் காற்றடுமே.

தலைவனது கண்ணழகில் ஈடுபட்ட தலைவி வியந்துரைத்தல்

2519. வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.

தலைவனது உருவெழிலைத் தலைவி உரைத்தல்

2520. கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோஎம்பி ரான தெழில்நிறமே?

தலைவனது பெருமையைத் தலைவி உரைத்தல்

2521. நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.

தலைவி தலைவனது உதவியை நினைந்துரைத்தல்

2522. பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.

நெஞ்சு விடுதூது

2523. மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.

தலைவியின் மெலிவுக்குச் செவிலி இரங்கல்: பாங்கி இரங்கலுமாம்

2524. திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே

தான் நல்ல நிமித்தம் கண்டு ஆறியிருத்தலைத் தலைவி தோழிக்கு உரைத்தல்

2525. மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,

இருள் மிகுதி கண்ட தலைவி தோழிக்கு கூறல்

2526. பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.

மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனொடு கூறல்

2527. ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.

கடலோசைக்கு ஆற்றாது தலைவி இரங்கல்

2528. மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே!

கால மயக்கு

2529. அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.

கட்டுவிச்சி கூறல்

2530. வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே.

வண்டு விடுதூது

2531. வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!

தலைவியின் நலத்தைத் தலைவன் பாராட்டுதல்

2532. வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே?

தலைவன் இரவிடைத் தன்னைக் கலந்தமையைத் தலைவி தோழிக்குரைத்தல்

2533. வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.

தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தல்

2534. புலக்குண்டலப்  புண்டரீகத்த போர்க்கெண்டை  வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன  கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார்  எம்மை யாருங்கழறலரே

தலைவன் பெருமையை உரைத்துத் தோழி தலைவியை ஆற்றுதல்

2535. கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?

இரவு நீட்டிப்புக்குத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்

2536. அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.

தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்கல்

2537. முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.

பாங்கி தலைவனது சீலத்தைத் தலைவிக்குக் கூறுதல்

2538. வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.

தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு உரைத்தல்

2539. இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.

தலைவனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிதல்

2540. வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே

தலைவன் பெயர் கூறித் தரித்திருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல்

2541. இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.

தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாங்கனொடு கூறல்

2542. கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.

தலைவன் பாங்கனிடம் உற்றது உரைத்தல்: கழற்றெதிர் மறுத்தலுமாம்

2543. உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.

தலைவன் பாங்கனுக்குத் தனது வலியழிவை உரைத்தல்

2544. காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.

கால மயங்கு

2545. மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்
கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.

மாலைப் பொழுதுக்கு இரங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல்

2546. காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே

இரவின் நெடுமைக்குத் தலைவி இரங்கல்

2547. வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை
விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.

செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல்

2548. ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே.

இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு வருந்தல்

2549. சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே.

பிறையுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு பாங்கி இரங்கல்

2550. வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.

தலைவனது தார்மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து பாங்கிக்கு உரைத்தல்

2551. தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே.

தலைவன் தலைவியை வியந்து பதி வினாதல்

2552. உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர்,குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ,வையமோ? நும்நிலையிடமே.

தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி நிலவுக்கு வருந்தி நெஞ்சொடு கூறல்

2553. இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.

மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்

2554. திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.

பிரிவாற்றாத தலைவி, தலைவனது ஆற்றலைக் கருதி, நெஞ்சழிந்து இரங்கல்

2555. நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த
வலியும் பெரு மையும் யாஞ்பு சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.

தலைவனைப் பிரியாத மகளிரின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல்

2556. வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.

மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்

2557. சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த
பேரர சேஎம் விசும்பர சேஎம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சேஅரு ளாய்,இரு ளாய்வந் துறு கின்றதே.

வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல்

2558. உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே!

தலைவனது கண்ணழகுக்குத் தலைவி இரங்கல்

2559. எரிகொள்  செந்நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள் செந்தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே?

அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் நிலைகண்டு தோழி இரங்குதல்

2560. விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும்
தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே.

தலைவனைக் காணத் தலைவி விரைதல்

2561. தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்
மையவண்ணா! மணியே,முத்தமே! என்றன் மாணிக்கமே!

மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்

2562. மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!

தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பல்

2563. அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும் ,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க் கன்றாய்ச் சிவன்தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே?

அன்றிலுக்கும் கடலுக்கும் ஆற்றாத தலைவியின் நிலைக்குத் தோழி இரங்கல்

2564. புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?

போலி கண்டு வருந்துகின்ற தலைவியின் ஆற்றாமைக்கு இரங்கல்

2565. திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே?

தலைவனது புணர்ச்சிக்கு விரைகின்ற தலைவி இரங்கல்

2566. தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?

தலைவனைப் பிரிந்த தலைவி, கால நீட்டிப்புக்கு ஆற்றாமல் உரைத்தல்

2567. தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,
நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.

தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்

2568. சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே

வினைவயிற் பிரிவின்கண் தலைவனை நினைந்து தலைவி இரங்கல்

2569. பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.

இருள்கண்டு அஞ்சுகின்ற தலைவி தன் தோழியரையும் செவிலியரையும் வெறுத்தல்

2570. காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.

தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனை அடைந்து வியந்து கூறல்

2571. மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?

தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல்

2572. யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால்
யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.

வெறி விலக்குவிக்கத் தலைவி நினைத்தல்

2573. வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.

தலைவனது பிரிவால் தூக்கம் கொள்ளாத தலைவி இரங்கல்

2574. எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோகண்கள் துஞ்சுதலே?

தலைவனது அருமையை நினைந்து கவல்கின்ற தலைவிக்கு தோழி கூறல்

2575. துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.

தனக்குத் தலைவனிடத்துள்ள அன்பின் உறுதியைத் தலைவி தோழிக்குக் கூறல்

2576. ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே

நூற் பயன்( பிறவித் துன்பம் இல்லை)

2577. நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் சுறும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே
*************
நம்மாழ்வார் அருளிச்செய்த  யஜுர் வேத ஸாரமான திருவாசிரியம்

தனியன்

அருளாய்ப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தல்

கலி விருத்தம்

நம்மாழ்வாரை வாழ்த்துவோம்

காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதி
ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்

ஆசிரியப்பா
அரவணையில் அறிதுயில் அமர்ந்து,
மூவுலகையும் அளந்த சேவடியோய்!

2578. செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய், திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்,
கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல், பீதகஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து, சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சைமேனி மிகப்பகைப்ப, நச்சுவினைக் கவர்தலை அரவி னமளியேறி,
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவனிய னிந்திரன் இவர்முதலனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுலகளந்த சேவடி யோயே.

படைத்து உண்டவன்பால் கொள்ளும் அன்பே சிறந்தது

2579. உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல்வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பாற்கடல் கடைந்த பரமனுக்கே ஊழிதோறும் நான் அடிமை ஆக வேண்டும்

2580. குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே?

மாயன் திருவடிகளையே வாழ்த்தித் தொழுவேன்

2581. ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.

நெடியேனுக்கன்றி இவ்வுலகம் யாருக்கும் அடிமை யாகாது

2582. மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே

ஆதிமூலமே முதற் பெருங்கடவுள்

2583. ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

ஆலிலைச் சேர்ந்த மாயனே மாபெருந் தெய்வம்

2584. நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.

அடிவரவு: செக்கர் உலகு குறிப்பு ஊழி மாமுதல் ஓஓ! உலகு நளிர்-முயற்றி

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
****************
நம்மாழ்வார் அருளிச்செய்த அதர்வண வேத ஸாரமான பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் தம் பெருமைகளைக் கூறிக் கொள்ளும் பிரபந்தம் இது. எல்லா உலகங்களையும் தம்மிடத்தே கொண்ட ஸ்ரீ மந்நாராயணமூர்த்தி பெரியவர். அவரையும் தம்மிடம் கொண்டவர் ஆழ்வார், அதனால் பகவானைவிடத் தாமே பெரியவர் என்ற பாசுரத்தை இப்பிரபந்தத்தில் அருளிச் செய்துள்ளபடியால் இது பெரிய திருவந்தாதி ஆயிற்று.

தனியன்

எம்பெருமானார் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

நம்மாழ்வாரின் நாமத்தையே கூறுக

முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,- சந்த
முருகூரும் சோலைசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன்பேர் கூறு.

மனமே! நாரணன் புகழ் பாடுவோம்

2585. முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்

செங்கண்மாலே எங்கள் மால்!

2586. புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.

நாராயணா! யாவும் நின் செயல்

2587. இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?

கண்ணனுக்கு அடிமையான என்னினும் சிறந்தவர் இல்லை

2588. என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.

மாயனே! தாயும் நீ, தந்தையும் நீ

2589. பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.

கண்ணா! என்னைக் கைவிடப் பார்க்கிறாயா?

2590. நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்?

வாரகனே! நின் திருவடியில் உள்ளது என் மனம்

2591. யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா!நின் பாதத் தருகு.

பாரளந்தவரே! நும்மை யடையும் வழி தெரியவில்லை

2592. அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு.

மனமே! திருமாலையே சிந்தித்திரு

2593. நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் - எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.

மனமே! அகங்காரம் ஏன்? திருமாலை நினை

2594. இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்.

திருமாலே! ஐம்பெரும் பூதங்களும் நீயே

2595. நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.

மனமே! கண்ணன் தாள் வாழ்த்து

2596. நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.

இறைவா! நின் திருமேனி ஒளியைக் காட்டு

2597. வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.

மனமே! தீவினையைச் சேராதே

2598. சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.

பள்ளிகொண்டானையே புகழ்

2599. பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.

மாயனே! நின் மாயங்களை நீயே எனக்குச் சொல்

2600. சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.

அடியார்கள் என்றும் வாழ்ந்திடுவர்

2601. சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம்.

கண்ணா! நின் பழைய உருவை யாரறிவார்?

2602. தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

மனமே! கண்ணனைக் காணலாம்

2603. சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.

என் மனம் திருமாலைத் தீண்டிவிட்டது

2604. காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.

கண்ணன் கழலிணையை என் நெஞ்சால் கட்டிவிட்டேன்

2605. சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.

திருமால் என் மனத்தில் குடிபுகுந்தார்

2606. காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,
வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.

எவ்வுயிர்க்கும் தாய் தந்தை திருமாலே

2607. இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி - இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

புருடோத்தமன் ஈடிணை அற்றவன்

2608. தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.

கண்ணனால் மனத்துன்பத்தை மாற்றினேன்

2609. ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.

இறைவன் அருளால் தீவினையை நீக்கினோம்

2610. யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.


நெடியவனே! நீ எப்படி உலகங்களை அளந்தாய்?

2611. அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று.

ஆழியானை அகக்கண்ணால் காணலாம்

2612. அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.

எனக்கு எளியன் எம்பெருமான்

2613. உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.

திருமாலைச் சிந்தித்தால் வல்வினை ஓடிவிடும்

2614. இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?

திருமாலை நீழல்போல் பின்பற்றினோம்

2615. அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.

தாமோதரனுக்கே அடிமை செய்

2616. தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?

திருமாலை விரும்பு: துன்பமே வராது

2617. யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.

ஆழியானே! நின் பண்பைக் கேட்டால் தீவினை நீங்கிவிடும்

2618. பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.

என் நெஞ்சிலிருந்து அகலாதவன் நரசிம்மன்

2619. நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?

கண்ணனுக்கே உன்னை அர்ப்பணம் செய்

2620. அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப
ரவனாம் அவனென் றிராதே,- அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.

தண் துழாய் மாலையானை வாழ்த்துவோம்

2621. ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.

மாயனைத் துதித்துப் பாவத்தைப் போக்குக

2622. அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.

நாரணன் புகழ்பேசிப் பிழைப்பாயாக

2623. பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.

பூதனையைக் கொன்ற கண்ணனை வாழ்த்து

2624. வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.

கண்ணன் அருளால் இவ்வுலகம் என்றும் இருக்கும்

2625. வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.

இவ்வுலகம் எம்பெருமானுக்கே ஆட்பட்டது

2626. பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.

மாயனை வாழ்த்தி மனத்துயர் போகுக

2627. அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை.

திருமாலை வாழ்த்தாமல் இருப்பது பாவம்

2628. வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை.

திருமால் திருவடிகளை வணங்கு: தீவினை அகலும்

2629. வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.

வெந்நரகில் சேராமல் காப்பவன் திருமாலே

2630. நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே! நினை.

எங்கும் நிறைந்திருப்பவர் திருமால்

2631. நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு.

கண்ணனை எண்ணிப் பேரின்பம் அடைக

2632. எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு.

கருநிறப் பொருள்கள் கண்ணனையே நினைவூட்டும்

2633. கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.

கண்ணனின் மனம் கடினமானதோ?

2634.பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.

ஐம்புலன் அடக்கி அரியின் அடிகளைக் காண்

2635. மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு.

வாமனனைப் புகழ்வதே வாய்க்கு உணவாகும்

2636. மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று.

வைகுந்தத்திலும் இனியது திருமாலின் புகழை நினைத்தல்

2637. ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.

கண்ணன் தாள் பணிந்தோம்: துயர் நீங்கினோம்

2638. வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.

மனக்கவலை தீர்ப்பவர் நாகணையார்

2639. மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.

மாயவர் காட்டும் வழியே இனிய வழி

2640. வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.

நரசிம்மன் என் வினையை மாற்ற மாட்டானா?

2641. வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்.

மாலே! நினக்குக் குற்றேவல் புரியவே விரும்புகிறேன்

2642. மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.

அரவணையானையே சிந்தியுங்கள்

2643. மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.

மாயனே மாபெருந்தெய்வம்

2644. பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.

தேவர்கள் திரிவிக்கிரமனையே பூசிப்பர்

2645. இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

மண்ணளந்த மாலே பிணிக்கு மருந்து

2646. மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.

இராமவதாரத்தில் அரியின் அருஞ்செயல்

2647. பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.

திருமாலையே தேவர்கள் தொழுவர்

2648. பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து.

மனமே! கேசவனுக்குப் பாமாலை சூட்டு

2649. கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.

மனமே! மாயவனை அறிந்துகொள்

2650. சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேன் அது.

கண்ணன் தாள் வாழ்த்துவதைக் கற்றிடு

2651. அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்
அதுவோர் பொருளில்லை யன்றே? - அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே!
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.

அடியேனுள்ளம் விட்டு நீங்காதவன் நாரணன்

2652. கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.

திருமாலையே யான் சிந்திப்பேன்

2653. அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?

ஆழியானே என் தந்தையும் தாயும்

2654. அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே இனி

அரியே ஆதிமூலம்

2655. இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.

எல்லாம் பகவானிடம் அடக்கம்

2656. முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் - முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ.

கருநிறப்பூக்கள் கண்ணனை நினைவூட்டும்

2657. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

கண்ணன் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்?

2658. என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே!
புடைதான் பெரிதே புவி.

ஆழியானே! நீ என் உள்ளத்தில் உள்ளாய்

2659. புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

உலகளந்தவனே! உன்னை நினைப்பவர்க்கு அழிவில்லை

2660. உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை.

பரமனே! நின்னைப் பற்றியே யான் பேசுவேன்

2661. உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.

இராமனின் பண்புகளையே ஊணாக உண்

2662. துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், - கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.

எப்பிறவி எடுத்தாலும் கண்ணனுக்கே யான் அடிமை

2663. உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.

மண்ணளந்தவனே! நின்னை ஏத்தாத நாள் வீணான நாள்

2664. பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்.

ஆழியானே என்னை எப்பொழுதும் ஆள்பவன்

2665. பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.

அந்தோ! இராமபிரானை நினையாமல் இளமை கழிந்ததே!

2666. தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.

மனமே! கண்ணனையே வாழ்த்து

2667. அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், - செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

மனமே! கண்ணனையே பூசித்து வணங்கு

2668. வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.

கண்ணனின் கருநிறம் கொள்ளக் கார்முகில் தவம் செய்ததோ?

2669. தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.

திருமாலை நினைப்பவரின் வினைத்துயர் நீங்கும்

2670. கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது.

கண்ணன் கழலிணை எண்ணுக

2671. இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
****************
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை

திருமங்கையாழ்வாருக்கு-நாலுகவிப் பெருமாள் என்று விருது உண்டு; கவிபாடுவதில் தன்னேரில்லாத் தலைவர். நாலுகவிகளில் சித்திர கவியும் ஒன்று. அந்தச் சித்திர கவிகளில், எழுகூற்றிருக்கையும் அடங்கும். இப்பிரபந்தம் தேர் வடிவத்தில் அமைக்கப்பட்ட பிரபந்தம். இதன் இலக்கணம் வீர சோழியத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பிரபந்தம் நாற்பத்தாறு அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைப் பெற்று வருவதோடு ஈற்றடி நாற்சீர்களைக் கொண்டு முடிவதால் இது நிலைமண்டிலவாசிரியப்பாவாகும். இவ்வகைப் பிரபந்தத்தை இயற்றியவர் ஆழ்வார்களுள் இவர் ஒருவரேயாவார்.

தனியன்

எம்பெருமானார் அருளிச்செய்தவை

நேரிசை வெண்பா

திருமங்கையாழ்வார் வாழ்க

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன்-வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்!

கட்டளைக் கலித்துறை

திருமங்கையாழ்வார் திருவடிகளே நமக்குத் துணை

சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே

ஆசிரியப்பா

திருமாலே! பிரமனை ஈன்றாய்! இராவணனைக் கொன்றாய்! மூவுலகு அளந்தாய்!

2672. ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை,ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி சுலொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

கஜேந்திரனைக் காப்பாற்றினாயே!

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ

மகான்களால் அறியத் தக்கவன் ஆயினாயே!

நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன்
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்

எத்தேவரும் அறிய முடியாதவனாய் நின்றாயே!

அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபெ நூதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

யோக நித்திரையில் அமர்ந்தாயே!

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

எல்லாமாகி, எங்கும் நின்றாயே!

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து

பரமனே! எம் துன்பங்களை நீக்கியருள்க

நின்றனை,குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.

கட்டளைக் கலித்துறை

(இது கம்பர் பாடிய பாடல் என்பர்)

பள்ளிகொண்டான் பாதங்கள் எம்மனத்தில் கிடப்பன

இடங்கொண்ட நெஞ்சத் திணங்கிக் கிடப்பன
என்றும்பொன்னித்
தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்ததண்
பூங்குடந்தை
விடங்கொண்ட வெண்பால் கருந்துத்திச் செங்கண்
தழலுமிழ்வாய்
படங்கொண்ட பாம்பிணைப் பள்ளிகொண் டான்திருப்
பாதங்களே

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

 
மேலும் மூன்றாவதாயிரம் »
temple news
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு ... மேலும்
 
temple news
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல் எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய ... மேலும்
 
temple news
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை நேரிசை வெண்பா அமுதனார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar