பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
02:06
பசுவை கோமாதா என்றே அழைக்கின்றன புராண, இதிஹாசங்கள். அனைத்துக்கும் மேலான வேதம் பசுவை மாதா என்றே போற்றுகிறது. நாம் தேவையற்றதாக விலக்கும் புல், வைக்கோல், பிண்ணாக்கு போன்றவற்றை உண்ணும் பசு, பதிலுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றைத் தருகிறது. பசுவின் சாணம் தெளிக்கப்பட்ட இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதிகம்.
கோமாதாவான பசுவின் சாணமும் சிறுநீரும் கிருமிகளை நாசம் செய்யும் தன்மை உடையவை என்று விஞ்ஞானமும் கூறுகிறது. பஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. உடலின் புறத்தைத் தூய்மை செய்வது நீர், அகத்தினைத் தூய்மையாக்குவது பஞ்ச கவ்யம் என்கின்றன புராணங்கள். வேத மந்திரங்கள் கூறி நடத்தப்படும் சில வழிபாட்டுச் சடங்குகளில் கூட பஞ்சகவ்யத்தின் பயன்பாடு முக்கியமாகிறது. பஞ்சகவ்யம், தன்னை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும் எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆயுர்வேத மருத்துவ முறையிலும் பஞ்சகவ்யத்தின் பயன்பாடு உண்டு. இது, உடலின் உள்ளுறுப்புகள் நலத்தைக் காப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. பசுவைப்போலவே அதன் மூலம் பெறப்படும் பஞ்சகவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. கோயில்களில் தெய்வ ஆராதனைக்குத் தேவையான பஞ்ச கவ்யத்தைப் பெறுவதற்காகவே அக்கால மன்னர்கள் கோசாலைகள் அமைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். பசுவின் பாலில் சந்திரன், தயிரில் வாயு, நெய்யில் சூரியன், கோசலத்தில் (கோமியம்) வருணன், சாணத்தில் அக்னி தேவன் வாசம் செய்கின்றனர்.
ஒரு பங்கு பசும்பால், இரண்டு பங்கு தயிர், மூன்று மடங்கு நெய், கோஜலம் ஒரு மடங்கு கோமலம் ஒரு மடங்கு, தர்ப்பை ஊறிய நீர் மூன்று மடங்கு ஆகியவற்றைக் கலந்து தயாரிப்பதே முறையான பஞ்சகவ்யம் இதனை ருத்ரம், சமஹம் போன்ற மந்திரங்களைச் சொன்னவாறு தயாரிக்க வேண்டும். இடையறாது உச்சரிக்க வேண்டும். பஞ்சகவ்யம் தயாரிக்க பசுக்களிடமிருந்து கிடைப்பனவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதோடு, எந்தெந்த நிறத்தில் உள்ள பசுக்களில் இருந்து எதையெதைப் பெறுவது கூடுதல் சிறப்பு என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பொன்னிறப் பசுவின் பால், நீல நிற பசுவின் தயிர், கரு நிறப் பசுவின் நெய்யும், செந்நிறப் பசுவின் கோசலம், கோமயம் ஆகியவற்றை தனித்தனியே எடுத்து வந்து ஒன்று கூட்டி பஞ்சகவ்யம் தயாரிப்பது மிகமிகச் சிறப்பானது. ஒரே ஒரு துளி பஞ்சகவ்யத்தை உண்பது, உடலுக்குள் இருக்கும் அக்னியை சீராக எரியச் செய்து, உடலும் மனதும் சீராக இருக்க உதவும் என்பது விஞ்ஞான உண்மை தற்காலத்தில் பயிர்களைப் பாதுகாக்கவும் பஞ்சகவ்யக் கலவை, மருந்துபோல் பயன்படுத்தப்படுகிறது.