பதிவு செய்த நாள்
26
மார்
2019
01:03
பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன் என்கிறார் -பகவான் கிருஷ்ணர். கருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும். கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம். காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம். கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார். கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர். கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம். கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம். மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள். குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார். nஉலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.
பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும். கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள். கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார். பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார். நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!
கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்! பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம். கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.
நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும். எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.