பதிவு செய்த நாள்
11
அக்
2022
08:10
நத்தம், நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி அருகே பாண்டியர் காலத்தில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த முந்தைய காலத்து வரி வசூல் செய்யும் சுங்கச்சாவடி கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வேலாயுதம்பட்டி என்.பி.ஆர்., கல்லூரி அருகே பழமையான முந்தைய காலத்து 2 கட்டடங்கள் உள்ளது. திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாற்று மாணவர்கள் ரத்தின முரளிதர், ஆனந்த், நடராஜன், உமா மகேஸ்வரி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வு அறிக்கை படி, திண்டுக்கல் நத்தம் சாலை செட்டிநாடு பகுதிகளை இணைக்கும் பெருவழி பாதையாக இருந்துள்ளது. கிழக்குக் கடற்கரை தொண்டி, கொற்கை துறைமுகங்களில் இருந்து கொண்டு வரப்படும் கடல் சார்ந்த பொருட்கள் செட்டிநாட்டு பகுதியில் விளையும் விலை பொருட்களும் திண்டுக்கல் வழியாக தற்போதைய பழனி கரூர் கோவை உள்ளிட்ட கொங்குநாடு செல்லும் பாதையாக இருந்துள்ளது. இப்பாதையில் சிறுமலை, கரந்தமலை சந்திக்கும் கணவாயில் கிழக்குப் பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் கட்டிய சுங்கச்சாவடி கட்டடம் அதை ஒட்டி பெரிய மண்டபமும் உள்ளது. பாண்டியர் காலத்தில் இவ்வழியாக செல்லும் விளை பொருட்களுக்கு முத்திரை தீர்வை எனும் வரி விதித்துள்ளனர். மேலும் பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சிறு படை பிரிவும் இங்கு இருந்துள்ளது. கிழக்கு பார்த்து இருப்பது சுங்கச்சாவடி மையமாகவும், மேற்கு பார்த்திருப்பது மண்டபமாகவும் இருந்துள்ளது. மண்டபத்தின் எதிரே சிறுமலை நீர் ஓடையில் 2 கல் தொட்டிகள்
குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் சுவரில் பிற்கால பாண்டியரின் சின்னமான இணை மீன்களும் நடுவே செண்டும் உள்ளது. மேலும் சுவர்களில் சிவலிங்க சின்னம், கும்பம்,கொடி, மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பொதிகையில் மலர் மொட்டு, விதானத்தில் பூ வேலைப்பாடுகளுடன் உள்ளது. இவை பிற்கால பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. சுங்கச்சாவடி மற்றும் மண்டபம் தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. இந்தச் சுங்கச்சாவடியில் இருந்து வரும் வரியின் ஒரு பகுதியை நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலுக்கு வழங்கப்பட்டதனை குறிக்கும் வகையில் சிவன் கோயில் சொத்துகளாக உருதிபடுத்தும் சூலக்கல் குறியீடு 2 உள்ளது. இதை தொல்லியல் துறை முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.