பதிவு செய்த நாள்
11
அக்
2022
08:10
காசர்கோடு:கேரளாவில், காசர்கோடு அனந்தபத்மநாப சுவாமி கோவில் குளத்தில், 70 ஆண்டுகளாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்த தெய்வீக முதலை நேற்று இறந்தது.
கேரளாவில் காசர்கோடு அருகே கும்ப்ளா என்ற இடத்தில் அனந்தபத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் மூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்குச் சொந்தமான குளத்தில், 70 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பபியா என்ற முதலை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. எப்போதும் குளத்தில் காணப்படும் இந்த முதலை, அடிக்கடி கோவில் பிரகாரங்களையும் சுற்றி வருவது வழக்கம். சுத்த சைவமாக கோவிலில் தயாரிக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த இந்த முதலை, மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் இழைத்ததில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முதலையை காணவில்லை. பின், நேற்று முன்தினம் இரவு குளத்தில் முதலை இறந்து மிதந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து கோவில் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில் குளத்தில் ஒரேயொரு முதலை இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தது நம்பமுடியாத வினோதம். குளத்தில் ஒரு முதலை இறந்ததும், அடுத்து ஒரு முதலை தோன்றுவது அதிசயமான நிகழ்வு. அந்த வரிசையில், இறந்த பபியா, இக்குளத்தில் வசித்த மூன்றாவது முதலை. இக்கோவில் அருகே வேறு குளமோ, ஆறோ இல்லை. இந்நிலையில், இக்குளத்தில் முதலை வாழ்ந்து வந்தது அதிசயமாகக் கூறப்படுகிறது. இக்கோவிலை சுற்றி வாழ்ந்து வந்த இந்த முதலை, பாகவத புராணத்தில் வரும் கஜேந்திர மோட்ச கதையை நினைவுபடுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.