திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. முருகனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. முருகன் வள்ளி தெய்வானை சமேதரராக கோவில் உட்பிரகாரத்தில் இருந்து தீப கம்பம் வரை உலா வந்து அருள் பாலித்தார். தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். இதை அடுத்து 20 அடி உயரத்திற்கு சொக்கப்பனை வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். குன்னத்தூர் புதூர் வீரமாத்தி அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டு அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில்களில் கார்த்திகை ஜோதி ஏற்றி வழிபாடு சூலூர் சூலூர் வட்டார கோவில்களில், கார்த்திகை ஜோதி ஏற்றி, வழிபாடுகள் நடந்தன. சூலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கார்த்திகை மாத கிருத்திகை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் சென்னி யாண்டவர் கோவில், வேல்முருகன் கோவில், பழனியாண்டவர் கோவில் மற்றும் சுற்றுவட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மேலும், கணியூர் பொன் காளியம்மன் கோவில், சின்னியம் பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கிராம கோவில்களில் கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது. பூஜிக்கப்பட்ட விளக்கு ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, தீபத்தூணில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.