பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
10:04
மண்ணச்சநல்லூர்: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடந்தது. இக்கோவிலில், மாயாசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், மரபு மாறி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாரியம்மன், மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வதே, கோவிலின் முக்கிய அம்சம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், விரதம் இருக்கும் அம்பாளை வாழ்த்தி, பூக்கள் தூவி வழிபடுவர். இது பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது. பச்சை பட்டினி விரதம் நிறைவு பெற்று, சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று, தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த எட்டாம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், வெள்ளிக் குதிரை வாகனத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. காலை, 10.45 மணியளவில், மாரியம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளினார். 11.10 மணியளவில், பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளைச் சுற்றி வந்து, மதியம் மூன்று மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பலர் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.