பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்காக முதன் முறையாக "ஏசி வசதி செய்யப்படுகிறது. இக்கோயில் சித்திரைத் திருவிழா, ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 30ல் இரவு 7.30 மணிக்கு மீனாட்சி பட்டாபிஷேகமும், மே 1ல் அம்மனின் திக்குவிஜயமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2 ல் காலை 9.15 மணிக்கு நடக்கிறது. வடக்காடி, மேற்காடி வீதிகளில் இதை காண, நான்கு வண்ண அனுமதி சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. கடந்தாண்டு வரை பக்தர்களுக்காக மின்விசிறிகள் தற்காலிகமாக பொருத்தப்பட்டன. தற்போது கோடை காலம் என்பதால், முதன்முறையாக, 100 டன் திறன் கொண்ட "ஏசி வசதி செய்யப்படுகிறது. இதற்கான செலவை உபயதாரர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், மணமேடையை அலங்கரிக்க, பெங்களூரூவிலிருந்து வண்ண மலர்களும் வரவழைக்கப்படுகின்றன.