பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
10:04
சபரிமலை:சித்திரை விஷு உற்சவம் முடிந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்றிரவு அடைக்கப்படும். இனி, வைகாசி மாத பூஜைகளுக்காக, அடுத்த மாதம் 14ம் தேதி நடை திறக்கப்படும்.கேரளா பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், சித்திரை விஷு உற்சவம் மற்றும் மாத பூஜைகளுக்காக, கோவில் நடை 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட விஷூ உற்சவம், 14ம் தேதி அதிகாலை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலை வகிக்க துவங்கியது. உடன், விஷு கனி தரிசனம் நடந்தது. தரிசனத்துடன், சன்னிதியில் இருந்து காணிக்கை (கை நீட்டம்) பெற பக்தர்கள் முண்டியடித்தனர். அவர்களுக்கு, தந்திரியும், மேல்சாந்தி பாலமுரளியும் காணிக்கை வழங்கினர்.பக்தர்களோடு பக்தராக, பிரபல கர்நாடக இசை கலைஞர் கே.ஜே.ஏசுதாசும் காணிக்கை பெற்றார். எட்டு ஆண்டுகளுக்கு பின், அவர் சபரிமலைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உற்சவம் மற்றும் சித்திரை மாத பூஜைகள், இன்றோடு முடிவடைகின்றன. இன்று காலை லட்சார்ச்சனை, தொடர்ந்து நெய், சந்தன அபிஷேகம் மற்றும் சகஸ்ரகலசாபிஷேகம் செய்விக்கப்படும். இரவு 10 மணிக்கு, அரிவராசனம் பாடல் பாடி, மூலவருக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, ஜபமாலை அணிவிக்கப்படும்.தொடர்ந்து, கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் வைகாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை அடுத்த (மே) மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.