பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
10:04
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த, காணாதுகண்டான் கிராமத்தில், கர்ப்பிணி பெண்கள், அம்மனுக்கு, தாலி காணிக்கை செலுத்தும் வினோத விழா நடந்தது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னபண்டாரங்குப்பம், பிடாரியம்மன் கோவிலில், கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன், சித்திரை பெருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, தாலி காணிக்கை செலுத்தும் விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், சின்னபண்டாரங்குப்பம் அருகில் உள்ள, காணாதுகண்டான் கிராமத்தில் வீதியுலா நடந்தது. அப்போது, அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டியும், சில பெண்கள், பிறந்த குழந்தை நோயின்றி வாழ வேண்டியும், தாலியை கழற்றி, அதில் குங்குமம், மஞ்சளுடன் சேர்த்து, பூஜை அறையில் வைத்து, பிடாரியம்மன் வீதியுலாவின் போது அந்த தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். தாலி காணிக்கை கொடுத்த பெண்கள், அதன் பின், மாங்கல்யம் உள்ள தாலியை அணியாமல் வெறும் மஞ்சள் கயிறை மட்டுமே அணிவது வழக்கம். கிராம மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வாழும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களும், அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்துகின்றனர்.