ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை ஆண்டவர் கொடுத்திருப்பார். ஆனால் தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை இது என அறியாமல் மற்றவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையுடன் பொறாமைப்படுபவர் பலர். ஒரு படகு கடலில் நடுவழியில் சிக்கிக் கொண்டது. படகோட்டிகள் களைப்புடன் இருந்ததால் தாகத்தால் வாடினர். இந்நிலையில் எதிரே ஒரு படகு தென்படவே, தண்ணீரைக் கேட்கும் விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டினர். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்களின் நிலையைச் சொல்லி தண்ணீர் கேட்டனர்.
“நண்பர்களே! நீங்கள் இப்போது இருப்பது கடலுக்குள் இருக்கும் அமேசான் நதிக்குள். கடல் வழியே சென்றாலும் இந்த நதியில் நல்ல தண்ணீரே இருக்கிறது. நீங்கள் வேண்டும் அளவுக்கு நல்ல தண்ணீர் குடிக்கலாம்!” என்றனர். தங்களின் அருகிலேயே தேவைக்கு நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு விபரம் தெரியவில்லை. இது போல மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை உணராமல் வருந்துகின்றனர். அதை சரியாக பயன்படுத்தப் பழகினால் வாழ்வில் எல்லா நாளும் நல்லநாளாக அமையும்.