ஸ்ரீவில்லிபுத்தூர்: தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் சதுரகிரியில் பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்கு பக்தர்களை அனுமதியளிப்பதில் வனத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நவ. 9ல் சதுரகிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பிரதோஷ வழிபாட்டிற்காக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்பட்டு தீயணைப்பு துறை, போலீஸ், வனத் துறையினரால் நள்ளிரவில் மீட்கப்பட்டனர். இதையடுத்து பவுர்ணமி பூஜைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கபட்டது.
இந்நிலையில் நாளை (நவ., 24) பிரதோசம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை துவங்கும். ஆனால் சதுரகிரி வனப்பகுதி நீர்வரத்து ஓடைகளில் குறைந்தளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதை அறநிலையத்துறை, வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வனத்துறையினர் பக்தர்களை அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டவன காப்பாளர் முகமது சபாப் கூறியதாவது: வனப்பகுதியில் குறைந் தளவு தண்ணீர் செல்வதை கண்காணித்து வருகிறோம். நவ. 24ல் காலை தண்ணீர் வரத்தை பொறுத்து அன்று காலை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும்., என்றார்.