பதிவு செய்த நாள்
25
நவ
2019
02:11
திருப்பூர்: திருப்பூர் பி.என்., ரோடு சாயிபாபா கோவிலில், ஸ்ரீசாயிபாபா அவதார திருநாளை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீசத்ய சாயிபாபா பிறந்த நாள் விழா, நேற்று (நவம்., 24ல்) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், திருப்பூர் சத்ய சாயிபாபா கோவிலில், சிறப்பு ஆராதனைகள், பஜனை நடந்தது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிகாலை, 5:00 முதல், ஓம்கார சுப்பிரபாதம், நகர சங்கீர்த்தனம், கொடியேற்றம், ஹோம பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நாராயணசேவையில், 2,700 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, புத்தாடை வழங்கப் பட்டது.
தத்து கிராமங்களுக்கு சென்று, ஏழை, எளிய மக்களுக்கு, லட்டு பிரசாதம் வினியோகிக்கப் பட்டது. இன்று (நவம்., 25ல்) காலை, 9:30 முதல், பகல் 1:00 மணி வரை, இலவச முழு பல் செட் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. பற்கள் முழுமையாக இல்லாதவர்கள், உபயோகம் இல்லாத பல் உள்ளவர்கள், ஓரிரு பற்கள் மட்டும் உள்ளவர்கள், பழைய பல் செட் வைத்திருப்பவர், மாற்ற விரும்புவோர், இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, சேவா நிறுவன நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.