பதிவு செய்த நாள்
20
ஏப்
2012
10:04
கன்னியாகுமரி : சிருங்கேரி மடம் சார்பில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட ஆறு உருப்படிகள் வழங்கப்பட்டது. சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவில் வடிவீஸ்வரம் பள்ளத்தெரு சிருங்கேரி மடத்தில் அவருக்கு பூர்ணகும்ப வரவேற்பு, தூளிபாத பூஜை, நன்மடல் சமர்ப்பணம் அளிக்கப்பட்டது.அதை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.பின்னர் ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை பூஜை, ஜகத்மகா சுவாமிகளின் தரிசனம், பழ,புஷ்ப சமர்ப்பணம், பாத பூஜைகள், தீர்த்த பிரசாதம், மந்த்ராக்ஷதை பிரசாதம் ஆகியவை நடந்தது. அறநிலையத்துறை சார்பில் இணை கமிஷனர் ஞானசேகர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமிகளை சந்தித்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு அழைப்பு விடுத்தனர்.இதனையடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சிருங்கேரி மடம் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர், சிருங்கேரிமடம் பொறியாளர் பத்மநாபன், ஸ்தபதி செல்வராஜ், நெல்லை சிருங்கேரி மடம் ஒருங்கிணைப்பாளர் காசி விஸ்வநாதன், சிஷ்யர் பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று காலை வந்தனர்.அங்கு சிருங்கேரி மடம் சார்பில் அம்மனுக்கு அணிவிக்க 12 கிலோ எடை கொண்ட செப்பு தகட்டில் தங்கமுலாம் பூசபட்ட முகம், தலைகிரீடம், மார்பகம், திருக்கால், திருக்கை, பீடம் ஆகிய ஆறு உருப்படிகளை ஒரு தட்டில் வைத்து கோயிலுக்கு கொண்டுவந்து கோயிலை வலம் வந்தனர்.பின்னர் அவற்றை கோயில் மேலாளர் சோணாசலம், கணக்காளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவற்றை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட ஆறு உருப்படிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.