தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கும் கண்ணனின் காதலியான ராதா தேவிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கந்தனின் அவதார நட்சத்திரம் விசாகம் ராதையும் கோகுலாஷ்டமிக்கு அடுத்துவரும் அஷ்டமியும் விசாக நட்சத்திரமும் இணைந்த நாளில்தான் அவதரித்தாள். விசாக நட்சத்திரத்தை ராதா என்ற பெயரிலேயே வேதம் குறிப்பிடுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம் கர்க ஸம்ஹிதை, ராதா -கிருஷ்ணன் இருவருக்கும் திருமணம் ஆனதும் வைகாசி விசாகத் திருநாளில்தான் என்கிறது. குன்றிருக்கும் இடங்களிலெல்லாம் குமரன் வசிக்கிறான். ராதை பிறந்ததும் பர்ஸான என்ற பிரம்ம மலையில்தான். முருகப் பெருமானை சிவாம்சம் என்கிறது கந்த புராணம். சிவபெருமானே ராதையாக அவதரித்தார் என்கிறது தேவி புராணம். ஆக, கந்தன் ராதை இருவருக்கும் சிவ அம்சங்கள் நிறைந்திருப்பது புரியும்.