மதுரை: மதுரை காஞ்சி சங்கர மடத்தில் தமிழில் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியை மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கினார்.
சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: கீதையின் 12ம் அத்தியாயத்தில் பகவான், பக்தன், பக்தியின் சிறப்பு, இறைவனின் உருவ, அருவ வழிபாட்டு முறைகள் நிரம்பி உள்ளது. உலகில் ஒன்றை அடைய மற்றொன்றின் உதவியை நாடுகிறோம். அடைந்த பின் அதை விட்டு விடுகிறோம். ஆனால், பக்தி மட்டும் பகவானை அடைந்த பின் நம்மை விட்டு விலகுவதில்லை.
இறைவனை அடைய பக்தி தான் சிறந்த சாதனம். பக்தி மனித உணர்வுகளை அழிப்பதில்லை, இயற்கைக்கு புறம்பானது இல்லை. நம் கீழான உணர்வுகளை துாய்மையாக்கி மனவலிமை தரும்.
பக்தியால் தனி மனிதன் மட்டுமல்ல சமூகத்திற்கே பாதுகாப்பு உண்டாகும். துாய பக்தி இல்லாததால் தான் சமூகம் பாதிக்கிறது. பக்தியால் சிந்தை தெளியும், செயலில் செம்மை, உள்ளத்தில் உள்ள சலனம், சந்தேகங்கள் நீங்கி உறுதி உண்டாகும். எனவே பக்தியை போற்றி பரப்புவது நல்ல பணி, என்றார். இச்சொற்பொழிவு டிச., 8 வரை மாலை 6:30 மணி - 8:00 மணி வரை நடக்கும்.