நெல்லிக்குப்பம்: கார்த்திகை தீபத்தையொட்டி, திருமாணிக்குழி மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமாணிக்குழியில் பழமையான அம்புஜாக்சி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் நடந்த விழாவில் அம்புஜாக்சி உடனுறை வாமனபுரீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இங்கு கார்த்திகை தீபம் இரண்டாம் நாள், ரோகிணி நட்சத்திரத்தில், மூலவருக்கு முன்புறம் உள்ள மலையில், தீபம் ஏற்றுவது வழக்கம்.அதன்படி, நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு அம்புஜாக்சி உடனுறை வாமனபுரீஸ்வரர் மலையின் முன் எழுந்தருளி, மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.