பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, இந்தாண்டில் கடைசி வாய்ப்பு என்பதால், குவியும் பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் கவசத்துடன் அருள்பாலிக்கும், ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.கார்த்திகை பவுர்ணமிதியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர், கார்த்திகை மாதம் பவுர்ணமியை ஒட்டியுள்ள மூன்று நாட்களை தவிர, ஆண்டு முழுவதும் கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கார்த்திகை பவுர்ணமி தினத்தன்று, ஆதிபுரீஸ்வரர் தங்க கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும்.இந்தாண்டு, நேற்று முன்தினம் இரவு, கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க, கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடந்தது. முதல் நாள் தரிசனம் காண, மதியம், 2:00 மணி முதல் பக்தர்கள் காத்திருந்து, இரவு வரை சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரண்டாவது நாளாக, கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் காண, காலை, 5:00 மணி முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பாதுகாப்பு: மதியம், 11:00 மணிக்கு மேல், தரிசனம் காண, மக்கள் குவிய துவங்கியதால், கோவில் வளாகம் திணறியது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், கவசம் மீண்டும் அணிவிக்கப்படும். கவசமின்றி தரிசனம் காண, இன்று கடைசி நாள் என்பதால், பக்தர்கள் குவிவர் என,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.