பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளிவீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவபெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!