"நீங்கள் இறையருளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் உறவினர்கள், ஏழைகளை புறக்கணிக்க நேரிட்டால் அவர்களிடம் இதமாக பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் பொருளை தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் உதவி கேட்டு வரும் சூழலில் செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களிடம் எரிந்து விழக் கூடாது. வாசலில் ஒருவர் பிச்சை கேட்டு நின்றால், "வேறு வீட்டுக்குப் போ என விரட்டாதீர்கள். "இப்போது வாய்ப்பு இல்லை; பிறகு பார்க்கலாம் என பொறுமையுடன் சொல்லுங்கள். சிலருக்கு தர்மம் செய்ய பணவசதி இருக்காது. இருந்தாலும் உதவுவார்கள். அப்போது அவர்களிடம், ""என்னைப் பார்த்தாயா! எவ்வளவு பெரிய உதவியை நான் உனக்கு செய்திருக்கிறேன். என்னைப் போல நல்லவர் வேறு யார் இருக்கிறார்கள்? என தற்பெருமை கொள்வார்கள். சிலர் "நான் செஞ்ச இந்த உதவியை மறப்பது கூடாது; எனக்கு எப்போதும் சாதகமாகத் தான் நீ நடக்கணும் என நிர்ப்பந்தம் செய்வார்கள். இப்படியெல்லாம் நடப்பது கூடாது. பிறர் மனம் புண்படாமல் பேசுங்கள். பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள்.