பதிவு செய்த நாள்
19
டிச
2019
02:12
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கட்டப்பட்டு வரும், ஏழு நிலை கொண்ட, 112 அடி உயர ராஜகோபுர பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 13ம் நூற்றாண்டில், சோழர்கள், ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசு ஆட்சியில், சந்திரசூடேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இக்கோவிலின் ராஜகோபுர கட்டுமான பணி, வட மாநில மன்னர்கள் போர் தொடுத்ததால் பாதி யில் நின்றது. 2012 வரை, அரைகுறையாக இருந்த ராஜகோபுரத்தை தான், பக்தர்கள் பார்த்து சென்றனர். மொட்டை கோபுரம் என்று தான் அதை அழைத்தனர். இந்நிலையில், டி.வி.எஸ்., நிறுவனம், மொட்டை கோபுரத்தை இடித்து விட்டு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், புதிய ராஜகோபுரம் கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றது. அதன்படி கடந்த, 2011 நவ.,ல், ஏழு நிலைகளை கொண்ட, 112 உயர ராஜகோபுரம் கட்டும் பணி தொடங் கியது. எட்டு ஆண்டுகளை கடந்தும் பணி நடக்கிறது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இப்பணிக்கு, இதுவரை, ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. தரை தளத்திற்கு மட்டும், 65 லட்சத்திற்கும் மேலாக, செலவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு ஆண்டில் ராஜகோபுரம் பணி முடிந்து விடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலை பல மன்னர்கள் கட்டி பராமரித்தாலும், பாதியில் நிறுத்தப்பட்ட ராஜகோபுரம், தற்போது புதிதாக துவங்கப்பட்டு முழுமை பெற்றால், அது வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருக்கும்.