பதிவு செய்த நாள்
20
டிச
2019
12:12
காரைக்குடி: காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி நேற்று (டிச., 19ல்) காலை நகர சிவன் கோயிலில், அஷ்டமி சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலா வநது பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மார்கழி அஷ்டமி தினத்தன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன், சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இந்த ஆண்டும், அஷ்டமி திருவிழா நேற்று (டிசம்., 19ல்) காலை நகர சிவன் கோயிலில் நடந்தது. விழாவையொட்டி கோயிலில் இருந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், உட்பட அனைத்து சுவாமிகளும், காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு நா. புதூர், செஞ்சை, கொப்புடையம்மன் கோயில், மகர் நோன்பு பொட்டல், வழியாக இரவு நகர சிவன் கோயிலை அடைந்தனர். தேவகோட்டை: தேவகோட்டை, நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரருடன் சிறப்பு வெள்ளி வாகனங்களில் தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கையில் தங்க படியில் அரிசியுடன் வலம் வந்தார். முக்கிய வீதிகளில் வந்த சுவாமிகளுக்கு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 5:00 மணியளவில் சிவன்கோயிலுக்கு சுவாமி, பரிவார சுவாமிகளும் வந்தனர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரரின் ஆட்டம் நடந்தது.