பதிவு செய்த நாள்
20
டிச
2019
01:12
கோவை பெரிய கடைவீதியிலுள்ள, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் (கெரடி கோவில்), நாளை காலை 5:00 மணிக்கு, ஆண்டாள் அருளிய திருப்பாவையின், ஐந்தாம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.ஆதியும் அந்தமுமாய் காட்சியளிக்கும், லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமியை வழிபட்டால், தசாவதாரங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.ஸ்ரீரங்கத்தை போன்று தெற்கு திசையில், சுவாமி காட்சியளிக்கிறார்.
அங்குள்ளதை போல் இங்கேயும், உற்சவர் கஸ்துாரிரங்கன் தவிர லட்சுமிநாராயணன், வேணுகோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு மூலவர்கள் அருள்பாலிக்கின்றனர். பக்தர்களுக்கு பாவவிமோசனத்தை வழங்கி, மோட்சத்தை கொடுக்கும் ஸ்தலம்.மார்கழி மாதத்தையொட்டி இக்கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... என்று துவங்கும் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்பெரும் மாயச்செயல்களை செய்பவன் கண்ணன். வடமதுரையில் அவதரித்த தலைவன். துாயநீர் நிறைந்த யமுனை ஆற்றின் தீரத்தில் தோன்றியவன். ஆயர்குல மக்கள் வாழும் கோகுலத்தில் வளர்ந்த ஒளிபொருந்திய அழகன். தன் பிறப்பால் தன்னை பெற்ற தாய்க்கு பெருமையும் மேன்மையும் அளித்தவன்.அப்படிப்பட்ட கோகுலக்கண்ணனை, துாய மனமுடையவராய் வந்து மணமிகுந்த மலர்களை துாவி, வாயார பாடி, நெஞ்சார நினைத்து வணங்கினால், நாம் முன்னர் அறியாது செய்த பாவங்களும், இனி நமக்கு வர இருக்கும் பாவங்களும், தீயிலிட்ட பஞ்சு போல தீய்ந்து அழிந்து போகும். அதனால் எம்பெருமானது திருநாமங்களை சொல்லுவோமாக என்பதே இப்பாடலின் பொருள்.