பதிவு செய்த நாள்
20
டிச
2019
02:12
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் மூலவர் கருவறை கற்தூண்களுக்கு, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பித்தளை தகடு பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீதுள்ள, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், சுயம்பு லிங்கமாக சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரு கிறார். மூலவர் உள்ள கருவறையில், ஒய்சாளர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு கலைநயம்மிக்க, நான்கு கற்தூண்கள் உள்ளன. இவற்றில், பக்தர்கள் திருநீறு போன்றவற்றை கொட்டி செல்கின்றனர். கோவில் கருவறை உலோகத்துடன் இருக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.
அதன்படி, கற்தூண்களுக்கு பித்தளை தகடு பொருத்த முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் சார்பில், 6.50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பித்தளை தகடு பதிக்கும் பணி நேற்று துவங்கியது. நான்கு கற்தூண்கள் மட்டுமின்றி, கருவறையின் முகப்பு பகுதியிலும் பித்தளை தகடு பதிக்கப்பட உள்ளது. இதற்காக, கும்பகோணத்தை சேர்ந்த சிற்பி கற்பகம் சிவ சுப்பிர மணியன் தலைமையிலான குழுவினர் நேற்று, கற்தூண்களுக்கு பித்தளை தகடு பொருத்துவதற்காக அளவீடு பணியை மேற்கொண்டனர். பித்தளை தகடு பொருத்தும் பணி யை, 45 நாட்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கற்தூண்களில் உள்ள ஒய்சாளர்களின் பண்டையகால வேலைப்பாடுகள் கலைநயத்துடன் உள்ளதால், அது பித்தளை தகட்டிலும் பிரதிபலிக்கும் வகையில் பொருத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.