‘பாலன் இயேசுவின் பிறப்பு ’ நம்மிலே அமைதியைக் கொண்டு வர வேண்டுமெனில் நல்மனம் நமதாக வேண்டும் என்ற நிபந்தனையை விவிலியத்திலே வாசிக்கின்றோம். இடையர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவித்த விண்ணகத் தூதர்கள் உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக, உலகில் நல்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக்: 2:13-14) என பாடியதை பார்க்கிறோம். இறைவனை வரவேற்கும் நல்மனம் யாரிடம் இருந்ததோ அவர்கள் எல்லோருமே பாலன் இயேசுவை தரிசிக்கும் பேறு பெற்றனர்.
நல்மனம் கொண்ட இடையர்கள் முதலில் இயேசுவின் பிறப்பை பற்றிய அறிவிப்பை பெறும் பேறு பெற்றனர்.
தொலை தூரத்தில் இருந்த ஞானிகளும் அந்த பேறினைப் பெற்றிருந்தனர். கடவுள் முன் நேர்மையாளராகவும், இறைப்பற்று கொண்டவராகவும் இருந்த சிமியோன் ஆண்டவரு டைய மெசியாவைக் காணும் முன் அவர் சாகப் போவதில்லை என தூய ஆவியால் உணர்த்தப்பட்டி ருந்தார். (லூக்: 2:25-26) அவரும் அந்த பாலன் இயேசுவைச் சந்திக்கும் நற்பேறு பெற்றார். இயேசு பிறப்பை கண்டு அவரிலே பெரு மகிழ்ச்சி கொள்ள வேண்டுமெனில் நம்மிடம் உள்ள வஞ்சகம் நிறைந்த மனநிலைகள் மாற்றப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
கள்ளம், கபடம் நிறைந்து, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும், உதட்டிலே தேன் தடவி பேசும் மனிதர்கள் உள்ளனர். இவர்கள் நடுவில் நல்மனத்தோடு வாழ்ந்து இயே சுவை தரிசிப் பது என்பது எட்டாக்கனியாகத் தோன்றினாலும், முழுமுயற்சியில் நாம் ஈடுபடும் போது நல்மனம் நமதாகும்.